தேவையானவை:
பச்சரிசி- 1 கப்
பால்- 1 டம்ளர்
தண்ணீர்- 1 1/2 டம்ளர்
தயிர்-3 கப்
உப்பு- தேவையான அளவு
வேகவைத்த பச்சைப்பட்டாணி- 1 கப்
வெள்ளரிக்காய்த்துருவல்- 1 கப்
கேரட் துருவல்- 1 கப்
மாங்காய்த்துண்டுகள்- 3 தேக்கரண்டி
மாதுளை முத்துக்கள்- 2 தேக்கரண்டி
திராட்சை(மாதுளைமுத்துக்கள் இருந்தால் வேண்டாம்)
தாளிக்க:
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
பெருங்காயம்- சிறிதளவு
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி
செய்முறை:
1. சாதத்தைத் தண்ணீர், பால் கொண்டு குழைவாக வேக விடவும்.
2. ஆற விட்டுக் கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
3. பிறகு தயிர் கலந்து நன்றாகக் கிளறவும்.
4. மாங்காயைப் பொடித் துண்டுகளாக நறுக்கவும்
5. வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றைத் தோலகற்றித் துருவிக் கொள்ளவும்.
6. அலங்கரிக்கச் சிறிது துருவலை வைத்துக் கொண்டு மீதியைஅலங்கரிக்கச் சிறிது துருவலை வைத்துக் கொண்டு மீதியைத் தயிர்சாதத்துடன் கலந்து விடவும்.
7. தாளிசப்பொருட்களைத் தாளித்து அதையும் தயிர்சாதத்துடன் சேர்க்கவும்.
8. அரை டம்ளர் பாலைச் சூடாக்கி அதையும் தயிர்சாதத்தில் போட்டுத் தளரக் கிளறவும்.
9. அலங்கரிக்க வைத்திருக்கும் மாதுளை முத்துக்கள் அல்லது திராட்சையைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கச் சுவையான தயிர்சாதம் தயார்.
கூடுதல் குறிப்புகள்:
1. எளிதில் செய்து விடக் கூடிய தயிர்சாதத்திற்கு மாவடு, ஊறுகாய் வகைகள், துவையல்கள், உருளைக்கிழங்கு வறுவல், காலிபிளவர் வறுவல், கோவைக்காய்ப் பொரியல், கொண்டைக்கடலைச்சுண்டல்,வெங்காய பக்கோடா, மிக்ஸர் போன்றவை நல்ல இணைகள்.
2. அரிசியை வேக வைக்கும் போது தண்ணீர் அதிகமாகவும் பால் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும், ஏனெனில் பாலில் அரிசி வேகாது, வேகவும் நேரம் பிடிக்கும், வெந்து வந்தாலும் விறைப்பாக இருக்கும்.
3. சிவப்பு குடமிளகாய், வெங்காயம் போன்றவற்றை வதக்கிக் காய்கறி தயிர்சாதமாகச் செய்யலாம்.
4. புளித்த தயிரும் தாளிக்க்கும் விஷயங்களும் இஞ்சியும் காயமும் பச்சை மிளகாயும் கொத்தமல்லியுமே தயிர்சாதத்தை மணக்க வைக்கும் அம்சங்கள்.எதுவுமே இல்லா விட்டாலும் இவற்றைச் சேர்த்தாலே தயிர்சாதம் தயார்.
5. சுற்றுலா செல்லுவோருக்குத் தயிர்சாதம் வரப்பிரசாதம். அவ்வாறு செல்லும் போது பாலைக் காய்ச்சி உறவூற்றின அரைகுறை தயிரைக் கலந்து எடுத்துக்கொள்ளலாம், அவ்வாறு செய்யும் போது தயிராகப் புளித்துத் தயிர்சாதம் ருசிக்கும், தயிராகவே கலந்தால் புளிக்கவோ கெட்டுப் போகும் வாய்ப்புகளோ அதிகம்.
6. தயிர்சாதம் தானே என்ற அலட்சியமின்றி சில மெனக்கெடல்களுடன் செய்யும் போது சுவை அமிழ்தமாய் ருசிக்கும்.