தாளித்த இட்லி

Image

தேவையானவை:

இட்லிகள்- 10

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
மிளகாய்வற்றல்- 1
கொத்தமல்லி- அலங்கரிக்க

வதக்க:
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உப்பு- சிறிதளவு

செய்முறை:

1. தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துச் சிவக்க வதக்கவும். பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனுடன் காரத்திற்காகச் சாம்பார் தூள் சேர்த்து பொடியின் பச்சை வாடை போகும் வரை வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்(இட்லியில் உப்பு இருப்பதால் அதிகமாகி விடக் கூடாது)
2. இட்லிகளைப் பிடித்த அளவில் நறுக்கி அல்லது மினி இட்லிகளாக வேக வைத்துக் கொண்டோ தாளித்தவற்றுடன் போட்டுப் பிரட்ட வேண்டும்.
3. சுவையான தாளிச இட்லி சில நிமிடங்களில் தயார்.
கொத்தமல்லி தூவிப் பரிமாற குடும்பத்தினர் உனக்கு எனக்கு எனப் போட்டி போட்டு உண்பர்.

 

சாம்பார் இட்லி

391790_261830667204213_100001318447633_646855_889535222_n

தேவையானவை:

இட்லி- 10
சாம்பார் செய்ய:

துவரம்பருப்பு- 1/2 கப்
புளி- எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி- 2 தேக்கரண்டி
உப்பு,காயம்,மஞ்சள் தூள்- தேவையான அளவு

காய்கறிகள்:

சின்ன வெங்காயம்- 10
தக்காளி- 1
முருங்கைக்காய்- 8
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

சாம்பார் தூள் செய்ய:

கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 8

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி:

1. வாணலியில் வெந்தயத்தைச் சிவக்க வறுக்கவும், பிறகு கடலைப்பருப்பைச் சிவக்க வறுத்துத் தனியே ஆற விடவும்.
2. தனியாவையும் சிவக்க வறுக்கவும்
3. மிளகாய்வற்றலையும் வறுத்து மின்னரைப்பானில் திரித்து வைத்துக் கொள்ளவும்.

சாம்பார் செய்முறை:
1. பருப்பைக் குழைவாக வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். அதனுடன் சின்னவெங்காயத்தை வதக்கிப் பின் தக்காளி, முருங்கைக்காய் சேர்க்கவும்
2. புளித்தண்ணீரைச் சேர்த்து(3 டம்ளர் அளவுக்கு) உப்பு, மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி சாம்பார் பொடி, காயம் சேர்த்து மூடி விடவும்.
3. காய் வெந்ததும் வேக வைத்தப் பருப்பைச் சேர்க்கவும்
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.

சாம்பார் இட்லி:

1. இட்லிகளை(மினி இட்லி அல்லது தட்டையான வடிவில் செய்வது நன்றாக இருக்கும்) செய்து ஆற விடவும்.
2. சாம்பாரை இட்லிகளின் மேல் பரவலாகத் தூவவும்.
3. நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு சிவக்க வறுத்து தாளிசப்பொருட்களைச் சாம்பார் இட்லியின் மேல் கொட்டவும்.
4. சாம்பாரில் காரம் குறைவு என்றால் தாளிக்கும் போது பச்சைமிளகாயையும் சேர்க்கலாம்.
சுவையான சாம்பார் இட்லி தயார்.

கூடுதல் தகவல்கள்:
1. சின்ன வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் கூட்டணியைப் போல முள்ளங்கி, தக்காளி அல்லது குடமிளகாய், காரட், தக்காளி அல்லது வெண்டைக்காஇ போன்ற காய்கள் ருசியை வித்தியாசப்படுத்தும்.
2. சாம்பார் பொடி புதிதாகத் திரித்துப் பண்ணும் போது கூடுதல் சுவை கிடைக்கும்.
3. காலையில் மீந்த இட்லிகளை வியாபாரம் செய்யக் கூட இட்லி சாம்பார் செய்து அசத்தலாம்.

 

புதினா இட்லி

Image

தேவையானவை:

புதினா – இரண்டு கைப்பிடி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
இஞ்சி- 1 துண்டு
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் அல்லது மிளகாய்வற்றல் – 2
இட்லி- 10
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. புதினாவை மண் போக அலசவும்
2. எண்ணெய் விட்டு வெள்ளை உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்து மிளகாயையும் வறுத்து, புதினா, இஞ்சி,உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும்.
3. மின்னரைப்பானில் வறுத்தனவற்றை அரைக்கவும்.
4. வாணலியில் கடுகு தாளித்து விட்டு அரைத்தக் கலவையைக் கெட்டியாகும் வரை ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
5. இட்லிகளை விருப்பமான அளவில் துண்டுகளாக்கிக் கொண்டு கெட்டியான புதினாக்கலவையில் பிரட்டவும்.
6. சுவையான ஆரோக்கியமான புதினா இட்லி தயார்

கூடுதல் குறிப்புகள்:

1. புதினா சளித்தொந்தரவுகளைப் போக்குவதோடு மட்டுமல்லாமல் பல் தொடர்பான பிரச்சினைகள், வாய்த் துர் நாற்றத்தையும் போக்க வல்லது, துவையல், புதினா இட்லி, புதினா சாதம் என்று விதவித முறைகளில் புதினாவைச் சேர்ப்பதன் மூலம் உடலிற்குத் தேவையான சத்துக்களைப் பெறலாம்.
2. காலையில் செய்து மீந்த இட்லிகளைக் கூட இவ்விதச் செய்முறைகளால் சூடாகச் செய்து புதியதாய் பரிமாறலாம்.

அவல் பொங்கல்

Image

தேவையானவை:

அவல்- 1 1/2 டம்ளர்
பாசிப்பருப்பு- 1/2 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
இஞ்சி- 1 துண்டு
முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும். அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக வைக்கவும்.
2. அடுப்பை ஏற்றி ஒரு வாணலியில் எண்ணெய், நெய் இட்டுத் தாளிக்கக் கொடுத்தப் பொருட்களைப் போட்டு வறுக்கவும்.
3. வறுத்தனவற்றுடன் அவல் சேர்த்து வதக்கவும்.
4. குக்கரில் வெந்து வைத்திருக்கும் பாசிப்பருப்பினை அவல், தாளிசக்கூட்டணியுடன் சேர்த்து உப்பு, காயம் சேர்த்து 3 டம்ளர் அளவு தண்ணீரைச் சேர்க்கவும். கிளறி விடவும்.
5. அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
6. பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. அவல் பொங்கல் செய்வதற்கு எளிமையான ருசியான உணவு வகை.
2. அரிசி தவிர்க்க விரும்புவர்களுக்கு அருமையான மாற்று உணவு.
3. திடமான அவலைப் பயன்படுத்த வேண்டும்.
4. அவரவர் குடும்பத்திற்கு ஏற்பக் காரம் கூட்டியும் குறைத்தும் செய்து கொள்ளலாம்.
5. அலுவலகம்/பள்ளி/கல்லூரி சென்று வரும் குடும்பத்தினரையும் திடீர் விருந்தினரையும் அசத்த அருமையான உணவு.
6. கோசாலி மாங்காய் ஊறுகாய், தக்காளி, குடமிளகாய்ச்சட்னி, சாம்பார், இடிதுவையல்(சம்மந்திப்பொடி) வகையறாக்கள் தகுந்த இணைகள்.

 

புதினாத் துவையல்

Image
தேவையான பொருட்கள்:

புதினா- ஒரு கட்டு
உப்பு- தேவையான அளவு

வறுக்க:

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
காயம்- சிறிதளவு
மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாய்- 3

செய்முறை:

1. புதினாவை மண் போக அலசவும்
2. ஈரம் போகத் துணியால் ஒற்ற வைத்து ஆற விடவும்
3. வாணலியில் எண்ணெயிட்டு வெள்ளை உளுத்தம்பருப்பு, காயம், மிளகாய்வற்றலைச் சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்
4. காய வைத்திருந்த புதினாவுடன் வறுத்தவற்றைச் சேர்த்து உப்பிட்டு மின்னரைப்பானில் அரைத்தெடுக்கவும்
5. புதினாவை வறுத்தப் பொருட்களுடன் சேர்ந்து வதக்கியும் புளி சேர்க்க விரும்புபவர்கள் புளி சேர்த்து அரைத்தும் செய்யலாம்.
6. தாளிக்க விரும்புபவர்கள் தாளித்துக் கொள்ளலாம்.

வேறொரு முறை:

மேற்கூறிய முறையுடன் தனியே வெங்காயம், பூண்டு(ஒரு பல்லு) வறுத்து அரைத்துச் சேர்க்கத் தனிசுவை கிட்டும்.