கீரையின் மருத்துவ குணங்கள்

தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.

முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.

1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.

2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.

3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.

4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.

5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.

6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.

8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.

10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.

11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.

12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.

13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.

14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.

15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.

ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

http://www.eegarai.net/t71266-topic கீரை பற்றிய தகவல்களுக்கு நன்றி.

கீரை பொரித்தகரை

Image

தேவையானவை

கீரை(பசலை/அரை/தண்டு)- ஒரு கட்டு
தேங்காய்- 1/4 மூடி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 4

செய்முறை:

1. கீரையை மண் போக அலசிக் கொள்ளவும்
2. கொதிக்கும் சுடு நீரில் கீரையைப் போட்டு வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
3. துருவிய தேங்காய், சீரகம், மிளகாய்வற்றலைச் சேர்த்து மின்னரைப்பானில் ஆறிய கீரையுடன் சேர்த்து அரைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிசம் செய்யவும்.
5. சுவையும் ஆரோக்கியம் மிகுந்த கீரை பொரித்தகீரையைச் சில நிமிடங்களில் எளிதில் செய்து விடலாம்.
6. எவ்விதப் பொரியலும் பொருந்தும் இக்குழம்பிற்கு அப்பளம் சிறந்த இணை.
7. காரம் அவரவர் விருப்பத்திற்கேற்றாற் போலக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

பீட்ரூட் குருமா

Image

தேவையானவை:

பீட்ரூட்- 2
உருளைக்கிழங்கு- 1
காரட்- 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி – 1 கிண்ணம்
வெங்காயம்- 2
தக்காளி- 1
காலிபிளவர்- ஒரு கிண்ணம்
பட்டர் பீன்ஸ்- ஒரு கிண்ணம்
நூல்கூல்- 1
உப்பு- தேவையான அளவு

வறுத்து அரைக்க:

நெய்- 2 தேக்கரண்டி
தனியா- ஒரு கைப்பிடி
பொட்டுக்கடலை- ஒரு கைப்பிடி
முந்திரிப்பருப்பு- அரைக்கைப்பிடி
சோம்பு- 2 தேக்கரண்டி
பட்டை- 6 இலைகள்
கிராம்பு- 3
ஏலக்காய்- 4
பச்சைமிளகாய்- 5
பூண்டு- 3 பல்லு
தேங்காய்- கால் மூடி

அலங்கரிக்க:

கொத்தமல்லி

செய்முறை:

1. காய்கறிகளைத் தோலகற்றி அலம்பிக்கொண்டு நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பச்சை வாடை போக வதக்கவும், தக்காளி, பிற காய்களையும் சேர்க்கவும். பாத்திரத்தில் காய்கறிகள் மூழ்குமளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக விடவும், பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும்(உப்பு முதலிலேயே சேர்த்தால் வேக நேரமாகும் என்பதால்…), காய்களை நறுக்கிப் போடும் போது பீட்ரூட்டை முதலில் போடலாம்(வேக நேரமாகும் காய்களை முதலில் சேர்க்கலாம்)
3. ஒரு வாணலியில் நெய்யை விட்டு வறுக்கத் தேவையானவற்றில் தனியா, முந்திரிப்பருப்பு, சோம்பு, பொட்டுக்கடலையைச் சிவக்க வறுக்கவும்.
4. பிறகு தனியே தட்டில் வறுத்ததை ஆற விடவும்.
5. பட்டை சோம்பு கூட்டணி, இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டை வறுத்துத் தனியே பாத்திரத்தில் சேர்த்து விட்டு தேங்காயைச் சிவக்க வறுக்கவும்.
6. வறுத்ததை ஆற விடவும்.
7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மின்னரைப்பானில் மைய அரைத்தெடுக்கவும்(சரியாக அரைக்கா விட்டால் தனியா அரைபடாமல் உண்ணும் போது நகம் போலத் தோன்றும்)
8. காய்கள் வெந்ததும் அரைத்ததைக் கொட்டிக் கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான வண்ணமயமான பீட்ரூட் குருமா தயார்.
9. காய்கள் நம் விருப்பத்திற்கேற்பச் சேர்த்துக் கொள்ளலாம்(காலிபிளவர், நூல்கூல் சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை)
10. சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். முந்தின நாள் மீந்த சப்பாத்திகளைத் துண்டுகளாக்கிக் குருமாவுடன் சேர்த்து உண்ண ருசி அதிகம்.