ஓட்ஸ் இட்லி

Image

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 2 கிண்ணம்
தயிர் – 1/2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/4 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/4 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
துருவிய கேரட்- 1 கிண்ணம்
கொத்தமல்லி

செய்முறை:

1.முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மின்னரைப்பானில் பொடி செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, 1 நிமிடம் கிளறி இறக்கி, அதனைப் பொடி செய்த ஓட்ஸுடன் சேர்க்க வேண்டும்.

3.பிறகு அதில் தயிர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்குக் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இதில் தண்ணீரை சேர்க்கக்கூடாது. உடனடியாக இட்லிகளாக வார்க்காமல் ஒரு மணி நேரம் வெளியே வைக்கவும்.

4. பின்னர் அந்த மாவை இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.

தொட்டுக்கொள்ள சட்னி, துவையல், சாம்பார், மிளகாய்ப்பொடி அருமையாக இருக்கும்.

 

ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை

3

செய்முறை:

ஓட்ஸ்- 1 கப்
பச்சரிசிமாவு- 1 கப்
தேங்காய்த்துருவல்- 1/4 கப்
உப்பு- தேவையான அளவு
காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

தூவ:

மிளகாய்த்தூள்- சிறிதளவு
மிளகுத்தூள்- சிறிதளவு
இட்லி மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

2

1. மின்னரைப்பானில் ஓட்ஸைத் திரித்துக் கொள்ளவும்.
2. திரித்த ஓட்ஸ், அரிசிமாவைப் பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும்.
3. வழக்கமாகக் கொழுக்கட்டைக்குச் செய்வது போல சுடுதண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும்.
4. தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
5. அடுப்பை அணைத்து விட்டு சூடு லேசாக ஆறியதும் உருண்டைகள் ஆக்கவும்.
6. இட்லிப்பானையில் தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக்கட்டைகளை அடுக்கவும்.
7. ஆவியில் வேக விடவும்.
8. அவை வெந்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
9. கொழுக்கட்டை தயாரானதும் ஓரிரு நிமிடங்கள் வெளியே வைத்து சூடு ஆற விடவும்.
10. தாளித்தப் பொருட்களுடன் கொழுக்கட்டைகளைப் பிரட்டி எடுக்கவும்.
11. அப்போது முப்பொடிகளைத்(மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி) தூவிப் பிரட்டவும்.
12. மிகவும் ருசியாக இருக்கும் ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை. அம்மிணிக்கொழுக்கட்டையின் பாணியில் செய்வதால் ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை என்ற நாமகரணம்.

1

ஓட்ஸை வைத்துக் கொண்டு என்னடா செய்வது என்று திருதிருவென விழித்துக் கொண்டிருக்க வேண்டாம். இனி ஓட்ஸில் விதவிதமான சமையலைச் செய்து அசத்தலாம். உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

அம்மிணிக்கொழுக்கட்டை பாணியில் செய்யாமல் தாளித்ததை வதக்கிய கொழுக்கட்டைமாவுடன் சேர்த்தே ஆவியில் வேக வைக்கலாம்.

 

 

ஓட்ஸ் பணியாரம்

எளிய முறை:

0.oa

தேவையானவை:

ஓட்ஸ்- 1 டம்ளர்
பச்சரிசி மாவு- 1 டம்ளர்
ரவை- 1/4 கப்
தயிர்- 1/2 கப்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
இஞ்சி,பூண்டு விழுது- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
காயம்- சிறிதளவு
வெங்காயம்- 1/2 கப்

செய்முறை:

Image

1. ஓட்ஸையும் ரவையையும் தனித்தனியே வறுக்கவும், பிறகு ஒன்றாகத் திரிக்கவும்.
2. அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அரிசிமாவையும் சேர்க்கவும்.
2. இவற்றுடன் தயிர், உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
3. எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.
4. வதக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து அடுப்பை ஏற்றி மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் பச்சை வாடப் போக வதக்கவும்.
5. குழிப்பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும்.
6. வெந்த பிறகு திருப்பிப் போடவும்

சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார். மிளகாய்ப்பொடி, சட்னி சிறந்த இணையுணவுகள்.

***************************************************************************

ஓட்ஸ் பணியாரம்-இன்னொரு முறை

edit02511-300x198

ஓட்ஸ்- 1 டம்ளர்

ஊற வைத்து அரைக்க:

துவரம்பருப்பு- 1/4 கப்
கடலைப்பருப்பு- 1/4 கப்
பாசிப்பருப்பு- 1 தேக்கரன்டி

அரைக்க:

மிளகாய்வற்றல்- 3
காயம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு

செய்முறை:

1. மூன்று மணி நேரம் ஊற வைத்தப் பருப்புகளைத் தண்ணீர் நீக்கி மின்னரைப்பானில் உப்பு, மிளகாய்வற்றல், காயம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
2. ஓரளவு அரைபட்டவுடன் ஓட்ஸையும் சேர்த்து அரைக்கவும்
3. இதனுடன் தாளிசப்பொருட்கலவையையும் வெங்காயத்தையும் சேர்க்கவும்.
4. பணியாரச்சட்டியைச் சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை விடவும்.
5. அதிகமான தீயாகவும் இல்லாமல் மிகக் குறைவான தீயும் இல்லாமலும் மிதமான தீயில் வேக விட வேண்டும்.
6. வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும்.
7. சுவையான மொறுமொறு ஓட்ஸ் பணியாரம் தயார்.

பணியாரம் போன்ற சிற்றுண்டிகளைச் சூடாகச் சாப்பிட்டால் தான் ருசி அதிகம்.

 

 

 

ஆப்பம்-தேங்காய்ப்பால்

Image

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு டம்ளர்
வெள்ளை உளுத்தம்பருப்பு – 4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சோடா உப்பு – சிறிதளவு
சாதம்- ஒரு கப்
உப்பு – தேவைக்கு

செய்முறை:

1.அரிசி,உளுந்து,வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
3. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து 10 முதல் 12 மணி நேரம் வெளியில் வைத்து விட வேண்டும்.
4. ஆப்பம் செய்யும் 2 மணி நேரத்திற்கு முன்பு சோடா உப்பைச் சேர்க்க வேண்டும்.

ஆப்பம் செய்யும் முறை:

1. ஆப்பச்சட்டி(நான்ஸ்டிக்) நன்கு சூடான பின்பு ஆப்பச் சட்டியின் கைப்பிடியை பிடித்து மாவு வட்டமாக பரவுமாறு திருப்பி விடவும்.மூடி வைக்கவும்.
2. சுற்றி இலேசாக வெந்து மேலெழுந்து வரும்.
3. எடுக்க ஏதுவாக வந்த பிறகு ஆப்பத்தைத் தட்டிற்கு மாற்றலாம்.
சூடாகப் பரிமாற ருசி அதிகம்

இன்னொரு முறை:

Image

இட்லி அரிசி- 1/4 டம்ளர்
பச்சரிசி- 1/4 டம்ளர்
உளுந்து – ஒரு கைப்பிடி
வெந்தயம் – 25 கிராம்

செய்முறை:

மேற்கூறியவற்றை நான் கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்து இட்லிமாவு பதத்தை விட மென்மையாக அரைத்துக் கொண்டு ஆப்பம் செய்யும் ஓரிரு மணி நேரத்திற்கு முன்பு உப்பு, சோடா உப்பு கலந்து செய்து பார்க்கலாம்.

தேங்காய் பால் செய்முறை:
தேங்காய்-2மூடி(துருவி பால் எடுத்துக்கொள்ளவும் )
வெல்லம் -300கிராம்
ஏலக்காய் மற்றும் சுக்கு-சிறிதளவு
செய்முறை:
தேங்காய் பாலுடன் வெல்லத்தை கலந்து கைபொறுக்குமளவு சூடுபடுத்தி அதனுடன் ஏலக்காய் மற்றும் சுக்கை தட்டி போட்டு இறக்கவும்.

இணைகள்:

ஆப்பத்திற்குத் தேங்காய்ப்பால், தேங்காய்ப்பால் குருமா, காய்கறி குருமா, தக்காளி குருமா, மிளகாய்ப்பொடி அருமையான இணைகள்.

 

 

 

கீரைச்சப்பாத்தி

0.o
தேவையான பொருட்கள்:

கீரை- ஒரு கட்டு
கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
சீரகம்- 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய்- 2
கரம்மசாலாத்தூள்- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. கீரையை மண் போக அலசிப் பொடியாக நறுக்கவும்.
2. கோதுமை மாவுடன் தேவையான பொருட்கள் வரிசையில் இருக்கும் அனைத்தையும் சேர்த்து, கீரையையும் சேர்த்துத் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மாவு பிசையவும்.
3. மாவை ஒரு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
4. பிறகு சப்பாத்தி செய்வது போல் உருண்டைகளாக்கி இட்டு கல்லில் போட்டு எடுக்கவும்.
5. கீரை வேகச் சிறிது நேரமாகுமாதலால் எண்ணெய் விட்டு இரு புறங்களிலும் மாறி மாறி வேக விட வேண்டும்.கீரைச்சப்பாத்தி செய்யும் போது பாதி வெந்ததும் அடுப்பில் நேரடியாக இரு புறமும் சுட வைத்துக் கல்லில் போட்டு எண்ணெய் தடவலாம். எண்ணெய் தடவி விட்டுத் தணலில் காட்டக் கூடாது, அப்பளம் போல ஆகி விடும்.
6. வெந்த பிறகு தால், கொத்ஸூ வகையறாக்களுடன் பரிமாற வேண்டும்.
7. வெந்தயக்கீரையையும் இதே முறையில் செய்யலாம்.

 

காலிபிளவர்-காரட் சப்பாத்தி

Image
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
சீரகம்- 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள்- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
துருவிய காலிபிளவர்
துருவிய காரட்
கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

1. காலிபிளவரை உப்பிட்ட சுடுதண்ணீரில் ஊற வைக்கவும். அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் அழிந்து விடும்.
2. பிறகு நல்ல தண்ணீரில் அலசி ஒரு துணியால் ஈரத்தைத் துடைத்து விட்டு துருவிக் கொள்ளவும். காரட்டையும் துருவிக் கொள்ளவும்.
3. காரட்-காலிபிளவருடன் உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
4. கோதுமை மாவுடன் சிறிது உப்பு கலந்து இந்தக் கலவையையும் ஒன்றாகக் கலந்து மாவு பிசையவும்.
5. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் கல்லில் போட்டு இரு புறமும் வெந்த பிறகு எண்ணெய் தடவி இறக்கவும்.
6. பச்சைமிளகாய் சேர்க்க விரும்புவர்கள் சேர்க்கலாம், ஆனால் காரப்பொடியும் இருப்பதால் காரத்தைப் பார்த்துச் சேர்க்க வேண்டும்.
7. மிகவும் ருசியான காலிபிளவர்- காரட் சப்பாத்தி விருந்தினரையும் குழந்தைகளையும் கவரும்.
8. காலிபிளவர்- உருளைக்கிழங்கு, காலிபிளவர்-உருளைக்கிழங்கு-பீன்ஸ் இணைகளில் சப்பாத்திகளும் ருசி அள்ளும்.

 

உருளைக்கிழங்கு(ஆலூ) சப்பாத்தி

Image
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- ஒரு உருளைக்கிழங்கிற்கு 2 சிறிய பச்சைமிளகாய்கள் வீதம்
மசாலாத்தூள்- சிறிதளவு

செய்முறை:

1. உருளைக்கிழங்கைத் தோலகற்றி மசிய வேக வைத்து மசித்து அதனுடன் உப்பு, சீரகம், பச்சைமிளகாயை, கரம் மசாலாத்தூளைச் சேர்க்கவும்.
2. கோதுமைமாவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி மாவைப் பிசையவும்.
3. சப்பாத்தி செய்வது போல வட்ட வடிவில் இட்டு கல்லில் போட்டு இரு புறமும் சிவந்த பிறகு திருப்பிப் போட்டு எண்ணெய் தடவிப் பரிமாறவும்.
4. ஆலோ பரோத்தாவில் தனியாக உருளைக்கிழங்கு மசாலவைப் பூரணமாக வைத்துச் செய்வோம், நேரடியாகக் கோதுமை மாவில் சேர்த்துச் சப்பாத்திப் போல் செய்வது உருளைக்கிழங்கு சப்பாத்தி.
5. காரங்களும் மசாலாப் பொருட்களும் அவரவர் விருப்பத்திற்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
6. காரம் கூடி விட்டதென்றால் எலுமிச்சைச்சாறு அல்லது தயிர் சேர்க்கக் காரம் மட்டுப்படும்.

 

அவகோடா சப்பாத்தி

Image

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
துருவி மசிக்கப்பட்ட அவகோடா- நடுத்தர அளவில்

மசாலா:

சீரகத்தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு- சிறிதளவு
கொத்தமல்லி- 1/4 கப்
புதினா- 1 தேக்கரண்டி(வேண்டுமானால்)

செய்முறை:

1. அவகோடாவின் தோல் சீவி விதை நீக்கி மசித்துக் கொள்ளவும், அதனுடன் எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மசாலாப் பொருட்களுடன் மசித்த அவகோடாவையும் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
3. இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
4. சப்பாத்திக்குச் செய்வது போல மாவினை உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் இட்டு அடுப்பில் இரண்டு புறமும் வேகும் படி எண்ணெய் தடவி வெந்து எடுக்கவும்.
5. அவகோடா சப்பாத்தி மென்மையாக இருப்பதுடன் தனி ருசியுடன் அசத்தலாக இருக்கும்.
6. பிற சப்பாத்தி, பரோத்தா வகைகளுக்கான இணையுணவுகள் இதற்கும் பொருந்தும்.

 

புல்கா/சுக்கா சப்பாத்தி

Image

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

1. கோதுமை மாவுடன் உப்பு, மற்றும் நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
2. பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம்.
3. 2 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.
4 மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம்.
5. ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாகக் காட்டி வேகவிடவும்.
6. சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
7. சப்பாத்தி கருகாத அளவிற்குப் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் இப்படி செய்யப்படும் சப்பாத்தியே புல்கா ரொட்டி.

 

முள்ளங்கி சப்பாத்தி

Image

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 1
கோதுமை- 2 கப்
மிளகாய்த்தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை:

முள்ளங்கிப் பரோத்தாவிற்குச் சொன்னது போலப் பூரணம் தனியாகச் செய்யாமல் மாவில் மொத்தமாகக் கலப்பதே முள்ளங்கிச்சப்பாத்தி.

1. முள்ளங்கியைத் துருவிக் கொள்ளவும்.

2. கோதுமைமாவுடன், உப்பு, மஞ்சள் தூள், முள்ளங்கி, காரப்பொடி,கொத்தமல்லி எல்லாம் கலந்து பிசையவும். இரண்டு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

3. உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாக இட்டுக் கல்லில் போட்டு எடுக்கவும்.

4. சிவந்தவுடன் எண்ணெய் தடவிப் பரிமாறவும். தால், துவையல் அருமையான இணையுணவுகள்.