
சாம்பார் பொடியைப் பலவகைகளில் செய்யலாம், அதனைப் பொடி வகைகள் பகுதி ஒன்றைத் தொடங்கி அதில் எழுதலாமென எண்ணுகிறேன். இப்போது எளிய விதத்தில் சாம்பார் செய்யும் முறையைப் பதிகிறேன். ஒரே வீட்டில் வாழும் அம்மா, அக்கா, தங்கை வைக்கும் சாம்பார் ருசி வேறுபடுவதன் காரணம் ஊருக்கு ஊர் தண்ணீர் மாறுபடும், தீயின் அளவு, பாத்திரத்தின் அமைப்பு ஆகியவையே. செய்யும் விதம், காய்களின் கூட்டணி போன்றவை ஒவ்வொருவரின் கைப்பக்குவத்தையும் ஒவ்வொரு ருசியாக்குகிறது.இனி சாம்பார் செய்முறையைக் காண்போம்.
தேவையானவை:
குழைய வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 குவளை(கப்)
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
காய்கள்:
சின்ன வெங்காயம், தக்காளி & முருங்கைக்காய்
அல்லது
குடமிளகாய், கேரட், தக்காளி
அல்லது
முள்ளங்கி, கேரட், பீன்ஸ், தக்காளி
அல்லது
பெரிய வெங்காயம், பூசணிக்காய், தக்காளி
வெண்டைக்காய், தக்காளி
சாம்பார் பொடி வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
தனியா- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- சிறிதளவு
துவரம்பருப்பு- 1/4 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம்- சிறிதளவு
தாளிக்க:
நல்லெண்ணெய் அல்லது நெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 11/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க
செய்முறை:

1. குக்கரில் பருப்பைக் குழைய வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. காய்களை அலம்பி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.(எந்தெந்த காய்கள் கூட்டணி நன்றாக இருக்குமென்பதைத் தேவையானவை பகுதியில் எழுதியிருக்கிறேன்)
3. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
4. வறுத்துத் திரிக்க வேண்டியவற்றைத் திரிக்கவும்(ஒன்றாகவே எண்ணெய் விட்டு வதக்க வேண்டும், மிளகாய்வற்றலைத் தனியாக வதக்கி, மற்றவற்றைத் திரித்தப் பின் கடைசியில் மிளகாய்வற்றலைச் சேர்க்கத் திரிபட்டு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும்)
5. வாணலியில் எண்ணெயிட்டு சின்னவெங்காயத்தைச் சிவப்பாக வறுக்கவும்.
6. பிறகு தக்காளி, முருங்கைக்காயும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டுக் கரைத்து வைத்தப் புளிக்கரைசலை(3 டம்ளர்) விடவும், உப்பு, மஞ்சள் தூள் போடவும்.
7. வறுத்துத் திரித்தப் பொடியைக் குழம்பில் சேர்க்கவும்.
8. காய் வெந்து ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள துவரம்பருப்பைப் போடவும்.
9. தனியே சிறு வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யிட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து குழம்பில் சேர்க்கவும்.
10. கொத்தமல்லி தூவி அலங்கரிக்க ருசியான சாம்பார் தயார். சாதம், இட்லி, தோசை, பொங்கல் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம், பீன்ஸ், கோஸ், அவரைக்காய், காலிபிளவர், கேரட் போன்ற எவ்வகை பொரியலும் அவியல், கூட்டு வகைகளும் சாம்பாருக்கு இணையாகும்.
கூடுதல் தகவல்கள்:
1. வறுத்துத் திரிக்க நேரமில்லாதவர்கள் சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம், புதிதாக வறுத்துத் திரிக்கும் போது தனியாவின் வாசம் சாம்பாரின் மணத்தைக் கூட்டும்.
2. வறுத்துத் திரிக்கக் கொடுத்தத் தேக்கரண்டி அளவை கப் அளவாக மாற்றிச் சிவக்க வறுத்துத் திரித்துக் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் சாம்பார் செய்வது சுலபம்.
3. ஒரே காய் போட்டு சாம்பார் செய்யாமல் பலவிதக் காய்கள் போட்டு செய்வதால் உடலிற்குச் சத்துக்கள் கிட்டும்.
4. உப்பு போட்டு ஊற வைத்து, காய வைத்த மாங்காய்த்துண்டுகளைச் சாம்பாரில் போட அதுவும் தனிச் சுவையைக் கொடுக்கும்.
5. காரம் அவரவருக்குத் தக்கக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
6. புளித்தண்ணீரில் காய் வேக நேரமெடுக்கும் என்பதால் அதிகமாகக் காய்கள் போட்டு சாம்பார் செய்யும் போது உப்பு, மஞ்சள் பொடியிட்டு காய்கள் வெந்த பிறகு புளித்தண்ணீரை விடலாம்.
7. முதலிலேயே தாளித்துக் கொண்டு அதிலே காய்களை வதக்கிச் சாம்பார் செய்யலாம், இவ்வகையில் சாம்பாருக்கென்று தனியே தாளிக்கும் வேலையும் பாத்திரமும் மிச்சமாகும்.
8. மேற்கூறிய வகையில் பாசிப்பருப்பு சாம்பாரையும் செய்து பார்க்கலாம், அல்லது பாசிப்பருப்பு 1/2 கப், துவரம்பருப்பு 1/2 கப் என்ற விகிதத்தில் செய்து பார்க்கலாம்.
9. வறுத்துத் திரிக்கும் போது 1 தேக்கரண்டி அரிசியையும் வறுத்துத் திரித்தால் சாம்பார் கெட்டியாக வரும்(துவரம்பருப்பு குறைவாக இருக்கும் போது தண்ணியாகக் குழம்பு வைப்பதற்குப் பதிலாக பொடி செய்யும் போது அரிசியையும் வறுத்துத் திரித்துச் செய்ய கெட்டியாக வரும்.