கோவைக்காய் பொரியல்

Image

தேவையானவை:

கோவைக்காய் -2 கப்
உப்பு- தேவையான அளவு
கோவைக்காய் பொரியல்

வறுத்துத் திரிக்க:

கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
தனியா- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- சிறிதளவு
மிளகாய்வற்றல்- 2 தேக்கரண்டி
தோல் நீக்கிய நிலக்கடலை- 1 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
சீரகம்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறிதளவு
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. கோவைக்காயை அலம்பி நீளமாகவோ வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

2. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டுக் கோவைக்காயையும் சிறிது நீர் விட்டு உப்பைச் சேர்க்கவும்.

3. காய் வெந்ததும் திரித்தத் தூளைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

கோவைக்காயிலுள்ள சத்துக்கள்:

Image
1. வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.
2. கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கோவைக்காய் உண்டவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
3.கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதைச் சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
4. நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.
5. கண்குளிர்ச்சியை உண்டாக்கும்.
6. இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.
7. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

காலிபிளவர் பொரியல்

Image

தேவையானவை:

காலிபிளவர் – 1
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. காலிபிளவரைச் பத்து நிமிடங்கள் சுடு நீரில் ஊறவைக்கவும் (கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழுக்கள் அழிந்து விடும்)

2. காலிபிளவரைச் சிறிது துடைத்து விட்டுப் பிடித்த வடிவங்களில் (பெரிதாகவோ, பொடிதாகவோ) நறுக்கவும்.

3. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு நறுக்கின காலிபிளவரையும் உப்பு, மஞ்சள் தூளையும் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி விட்டு வேக விடவும்.(அதிகத் தண்ணீர் விட்டால் கணிசம் குறையும், குழைந்தும் விடும்.)

4. காய் வெந்ததும் சாம்பார்த்தூளைக் காரத்திற்குச் சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெயிட்டுக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

5. சப்பாத்தி, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு அருமையான பொரியல்.

6. மஞ்சள் தூள் சேர்ப்பது கண்ணுக்குத் தெரியாத புழுக்களை அழித்து உடலிற்கு நன்மை சேர்க்கும் என்பதாலாகும்.

7. பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், குருமா, தால், பரோத்தா வகைகளிலும் காலிபிளவரைப் பயன்படுத்தி உடலிற்குச் சத்துக்களைச் சேர்க்க வேண்டும்.

காலிபிளவர் சத்துக்கள்

காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம்.
முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும்.
காலிப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிப்ளவரானது முதன் முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது.

காலிப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கிய இந்தக் காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும் போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது.

அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும்.

இதைத் தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.
மேலும் காலிப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.

பூ வேகும் போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.
இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளைப் போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.

http://jokavitha.blogspot.com/2012/09/blog-post_20.html தகவல்களுக்கு நன்றி.

 

அவரைக்காய் பொரியல்

தேவையானவை:

Image

அவரைக்காய்- 2 கப்
தேங்காய்த்துருவல்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. அவரைக்காயை நன்றாக அலம்பிக்கொண்டு நுனியைப் பிரித்து நாரைப் பிரிக்கவும். ஒவ்வொரு அவரைக்காயையும் இவ்விதம் செய்து கூறு பிரித்துப் பொடியாக நறுக்கவும்.

2. அடுப்பில் தீயேற்றி வாணலியில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும்.

3. பொடியாக நறுக்கின அவரைக்காயைத் தாளிசப்பொருட்களுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.

4. அடிக்கடி கிளறி விடவும்.

5. அவரைக்காய் வெந்த பிறகு துருவிய தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் குழம்பு, ரசத்துடன் பரிமாறவும்.

6. தேங்காய்த்துருவல், மிளகாய்வற்றல் சேர்ப்பதற்குப் பதில் 1 தேக்கரண்டி சாம்பார் தூள்(காய் வெந்தவுடன்) சேர்த்து வதக்கிப் பொரியல் செய்யவும் ருசிக்கும்.

கூடுதல் குறிப்புகள்:

Image

1. அவரைக்காயில் உயர் நிலைப்புரதம், இரும்பு, சுண்ணாம்புச்சத்து போன்ற அதிக சத்துக்கள் நிரம்பியுள்ளன.

2. நீரிழிவு உள்ளவர்களுக்கும் செரிமானப்பிரச்சினை, மலச்சிக்கல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்றது.

3. நார்ச்சத்து அதிகம் என்பதாலும் ஜீரணம் ஆவது கடினம் என்பதாலும் இரவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், கூட்டு வகைகளிலும் செய்து பலன் பெறலாம்.

இணையத்தில் தொகுத்தத் தகவல்கள்:

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

ரத்தத்தைச் சுத்தமாக்கும்

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

நீரிழிவைக் குணமாக்கும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்

சரும நோய்களை குணமாக்கும்

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

http://nerudal.com/nerudal.31431.html தகவல்களுக்கு நன்றி.