அரிசிமாவு கொழுக்கட்டை

Image

தேவையானவை:

பச்சரிசி மாவு- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்- 1/4 மூடி
காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி

செய்முறை:

1. அரிசி மாவைச் சிவக்க வறுக்கவும்.
2. தண்ணீரைச்(ஒன்றுக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் கணக்கு, ஆனால் கண்ணளவில் பார்த்து பார்த்தே சேர்க்க வேண்டும், தண்ணீர் அதிகமாகச் சுட வைத்துக் கொண்டாலும் சிறிது சிறிதாகவே ஊற்றி வர வேண்டும்) சுட வைத்து உப்பு சேர்த்து வதக்கிய மாவில் சேர்க்கவும்.
3. தாளிசப் பொருட்களைச் சேர்த்து(பாதியை இப்போதும் கொழுக்கட்டைகள் வெந்து வந்த பிறகு மீதியைச் சேர்க்க வேண்டும்)மாவில் கிளறவும்.
4. மாவை உருண்டைகள் பிடித்து இட்லித்தட்டுகளில் பரப்பி வேக விடவும்.
5. ஒரு கைப்பிடி பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
6. கொழுக்கட்டைகள் வெந்து வந்ததும் தாளிசப்பொருட்களின் பாதியையும் வறுத்தப் பாசிப்பருப்பையும் தேங்காய்த்துருவலையும் போட்டுக் கலந்து கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
7. சுவையான அரிசிமாவு கொழுக்கட்டைக்குத் தக்காளிச்சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி, தொக்கு வகைகள் சிறந்த இணைகள்.

 

அம்மிணிக் கொழுக்கட்டை

எளியமுறை:

Ammini kolukkattai

தேவையானவை:

பச்சரிசி மாவு- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி
காரப்பொடி – சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. அரிசிமாவைச் சிவக்க வறுக்கவும்.
2. தனியொரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடுபடுத்தவும். உப்பும் சேர்க்கவும்.
3. அரிசி மாவு கெட்டியாகும் வரைச் சிறிது சிறிதாகத் தண்ணீரை ஊற்றிக் கிளறவும்
4. மாவு கெட்டியானதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
5. கொழுக்கட்டைகள் வேகுவதற்குள் வாணலியில் எண்ணெயிட்டுத் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
6. வெந்த கொழுக்கட்டைகளைத் தாளிசப் பொருட்களுடன் சேர்க்கவும்.
7. காரப் பொடியைச் சிறிதளவு சேர்த்து பிரட்டவும்(பச்சைமிளகாயும் சேர்ப்பதால் காரப்பொடியைச் சிறிதளவே சேர்க்க வேண்டும்)
8. காரக்கொழுக்கட்டையில் வேக வைக்கும் முன்பு வதக்கும் போது காரப்பொடி சேர்ப்போம், அது ஒரு சுவை, இது வெந்து கொழுக்கட்டைகளை வதக்கி அப்போது சேர்ப்போம், இது ஒரு சுவை.

சற்றுப் பொறுமையுடன் செய்ய வேண்டிய முறை:

1. பச்சரிசி இரண்டு கப் எடுத்து கழுவி தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
2. நீரை வடிகட்டி அப்படியே பிசிறி வைக்கவும்.
3. அரை மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து ஒரு வெள்ளைத் துண்டில் பரப்பி ஆற விடவும். பத்து நிமிடங்கள் கழித்து மின்னரைப்பானில் நன்றாகப் பொடிக்கவும். மாவு மிகப் பொடியாக இருக்க வேண்டியது அவசியம்.
4.வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் 4 கப் நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
5. கொதி வந்ததும் பொடித்த மாவைத் தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.
6. மாவு நன்றாக சுருண்டு ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
7. சிறிய உருண்டைகளாக்கி மேற்கூறிய முறையில் வேக வைத்துத் தாளித்துப் பரிமாறவும்.
8. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் இம்முறையில் செய்யலாம், இல்லாதவர்கள் பச்சரிசி மாவிலேயே செய்து கொள்ளலாம், அதுவும் நன்றாக வரும்.

உளுத்தம் கொழுக்கட்டை

Image

தேவையானவை:

 

பச்சரிசி மாவு – 3 டம்ளர்
உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் (100 கிராம்)
மிளகாய்வற்றல் – 6
தேங்காய் – கால்மூடி
உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை:

 

பூரணம் செய்ய:

 

1. உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து கொஞ்சம் நீர் சேர்த்து மிளகாய்வற்றலுடன் உப்பும் சேர்த்துக் கரகரப்பாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த உளுந்தை இட்லித்தட்டுகள் அல்லது மைக்ரோவேவ்வில்(5 நிமிடங்கள்) வேக விட்டு வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி உதிர்க்கவும்..
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பச்சைமிளகாய் சின்ன சின்னதாக நறுக்கி, இஞ்சி போட்டு தாளித்துக் கொள்ளவும்.
4. பிறகு தாளித்ததில் உளுத்தம் மாவைக் கொட்டி கிளறி பொல பொல வென்று பூரணம் தயார் செய்யவும். உளுத்தம்மாவில் தேங்காய்த்துருவலையும் சேர்க்கவும்.

 

மேல்மாவு செய்ய:

 

1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
2. பச்சரிசி மாவைப் பச்சை வாடை போக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி கொதித்தத் தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
3. பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலைஅல்லது ஜிப்லாக் கவரில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.

 

கொழுக்கட்டை செய்ய:

 

1. தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை நடுவில் வைத்து மாவை சமமாக மடித்து ஓரங்களை ஒட்டவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டைகளாகத் தயாரித்துக் கொள்ளவும்.
2. பிறகு இட்லி குக்கரில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
3. சுவையான, ஆரோக்கியமான உளுத்தம் கொழுக்கட்டை தயார். எலும்புகளைப் பலப்படுத்தும் உளுத்தம் கொழுக்கட்டையை மாதம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும்.
4.வரலெட்சுமி நோன்பின் போதும் நவராத்திரி காலங்களிலும் இவ்வகைக் கொழுக்கட்டைகளை நைவேத்தியமாக்கிப் பிறருக்கும் வழங்கலாம்.

கீரைக்கரை

Image

பொரிச்சகரைக்குச் சொன்ன அதே செய்முறையே இதற்கும், காய்களுடன் கீரையைச் சேர்ப்பது தான் கீரைக்கரை.

தேவையானவை:

கீரை- ஒரு கட்டு
வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 டம்ளர்
உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
காரட்- 1
முருங்கைக்காய்- 1
பீன்ஸ் அல்லது புடலங்காய்- சிறிதளவு
(மேற்குறிப்பிட்ட காய்களில் 2 அல்லது 3 காய்கள் இருந்தால் கூடப் போதும்)
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

வறுக்க:

மிளகு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5

அரைக்க:

தேங்காய்- 1/2 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. மிளகு, மிளகாய்வற்றலை ஒரு வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும்.
2. காய்களை அலம்பிப் பொடியாக நறுக்கி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. வறுத்துத் திரித்த மிளகு, மிளகாய்வற்றல் பொடியைச் சேர்த்து அதில் காய்களை வேக விடவும், காய்கள்(வாழைக்காய் சேர்க்கும் போது வேக நேரம் எடுக்கும் என்பதால் அதை முதலில் சேர்க்க வேண்டும்) பாதி வெந்ததும் கீரையைச் சேர்க்கவும்(கீரை எளிதில் வெந்து விடுமாதலால் கடைசியாகச் சேர்க்கிறோம்)
4. பருப்பைக் குழைவாக வேக வைத்துத் தனியே வைக்கவும்
5. மின்னரைப்பானில் தேங்காய், சீரகத்தை அரைத்துத் தயாராக வைக்கவும்.
6. காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்து அரைத்தத் தேங்காய்க்கலவையையும் கொட்டி தாளிசம் செய்து இறக்கவும்.
7. குழம்பு தண்ணியாக வந்து விட்டால் 2 தேக்கரண்டி பச்சரிசி மாவைத் தண்ணீரில் கரைத்துக் குழம்பில் கொட்டி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும்.
8. சுவையான கீரைக்கரை தயார், கீரைக்கரை செய்யும் போது பருப்பைத் தனியே எடுத்து பருப்பு ரசம் செய்து குழைவான சாதத்தில் ரசத்தைப் பிசைந்துத் தொட்டுக் கொள்ள கீரைக்கரையை விட்டுக் கொண்டால் தேவாமிர்தம் தான். தயிர்சாதத்துடனும் கீரைக்கரை அசத்தல் இணையாகும்.

கூடுதல் தகவல்கள்:

1. பாசிப்பருப்பை வேக வைத்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அல்லது பாசிப்பருப்பும் துவரம்பருப்பும் சரி பாதி அளவாக எடுத்து வேக வைத்துச் செய்யலாம்
2. காய்களைப் பெரிதாக நறுக்கிச் செய்தால் அதனைப் கீரைபொரிச்ச குழம்பு என்றும் பொடியாக நறுக்கிச் செய்தால் கீரைக்கரை என்றும் அழைக்கிறார்கள்
3.தண்ணீர் குறைவாக விட்டு வேக வைத்துச் செய்தால் இதுவே கீரைபொரிச்ச கூட்டு.
4. வறுக்கும் போது மிளகின் அளவைக் கூட்டி மிளகாய்வற்றலின் அளவைக் குறைத்துச் செய்தால் இதுவே மிளகு கீரைக்கரை.

பொரிச்சகரை

Image

தேவையானவை:

வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 டம்ளர்
உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
காரட்- 1
முருங்கைக்காய்- 1
பீன்ஸ் அல்லது புடலங்காய்- சிறிதளவு
(மேற்குறிப்பிட்ட காய்களில் 2 அல்லது 3 காய்கள் இருந்தால் கூடப் போதும்)
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

வறுக்க:

மிளகு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5

அரைக்க:

தேங்காய்- 1/2 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. மிளகு, மிளகாய்வற்றலை ஒரு வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும்.
2. காய்களை அலம்பிப் பொடியாக நறுக்கி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. வறுத்துத் திரித்த மிளகு, மிளகாய்வற்றல் பொடியைச் சேர்த்து அதில் காய்களை வேக விடவும்
4. பருப்பைக் குழைவாக வேக வைத்துத் தனியே வைக்கவும்
5. மின்னரைப்பானில் தேங்காய், சீரகத்தை அரைத்துத் தயாராக வைக்கவும்.
6. காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்து அரைத்தத் தேங்காய்க்கலவையையும் கொட்டி தாளிசம் செய்து இறக்கவும்.
7. குழம்பு தண்ணியாக வந்து விட்டால் 2 தேக்கரண்டி பச்சரிசி மாவைத் தண்ணீரில் கரைத்துக் குழம்பில் கொட்டி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும்.
8. சுவையான பொரிச்சகரை தயார், இதற்கு முட்டைக்கோஸ், பீன்ஸ், வெண்டைக்காய் பொரியல்கள் அட்டகாசமான இணைகள்.

கூடுதல் தகவல்கள்:

1. பாசிப்பருப்பை வேக வைத்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அல்லது பாசிப்பருப்பும் துவரம்பருப்பும் சரி பாதி அளவாக எடுத்து வேக வைத்துச் செய்யலாம்
2. காய்களைப் பெரிதாக நறுக்கிச் செய்தால் அதனைப் பொரிச்ச குழம்பு என்றும் பொடியாக நறுக்கிச் செய்தால் பொரிச்சகரை என்றும் அழைக்கிறார்கள்
3.தண்ணீர் குறைவாக விட்டு வேக வைத்துச் செய்தால் இதுவே பொரிச்ச கூட்டு.
4. வறுக்கும் போது மிளகின் அளவைக் கூட்டி மிளகாய்வற்றலின் அளவைக் குறைத்துச் செய்தால் இதுவே மிளகு பொரிச்சகரை.

அவல் கொழுக்கட்டை

Image

தேவையானவை:

வெள்ளை அவல் அல்லது சிவப்பு அவல்- 2 டம்ளர்
தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
காயம்- சிறிதளவு
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு

செய்முறை:

1. அவலைத் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.
2. ஊறிய அவலைக் கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துப் பிசையவும்
3. அடுப்பை ஏற்றி வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு மசித்த அவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்
4. தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கி ஆற விட்டு உருண்டைகள் பிடித்து இட்லி குக்கரில் வேக விடவும்(மற்ற கொழுக்கட்டைகள், இட்லி போல அதிக நேரங்கள் வேக விடத் தேவையில்லை, ஐந்தே நிமிடங்கள் போதுமானது)
5. கொழுக்கட்டைகள் வெந்ததும் தக்காளிச்சட்னி அல்லது புதினாச்சட்னியுடன் பரிமாறவும். மிளகாய்ப்பொடி கூட அருமையான இணை.
6. வெங்காயம், கேரட் துருவிப் போட்டும் செய்யலாம்.
7. வெறும் தண்ணீரில் ஊற வைக்காமல் புளித்தண்ணீரில் ஊற வைத்தால் புளி அவல் கொழுக்கட்டை, புளி நீரில்லாமல் மோரில் ஊற வைத்துச் செய்தால் மோர் அவல் கொழுக்கட்டை.

கூடுதல் குறிப்புகள்:

1. செய்வதற்கு எளிமையான மற்ற கொழுக்கட்டைகள் போல அதிக மெனக்கெடல் இல்லாத வித்தியாசமான சிற்றுண்டி.

2. திடீர் விருந்தினரைச் சமாளிக்கவும் குழந்தைகளின் ரசனைக்குத் தீனி போடவும் ஏற்றது.

3. உருண்டைகளாகப் பிடிக்காமல் பிடி கொழுக்கட்டையாகவும் பிடித்து வைக்கலாம்.

4. வெள்ளை அவலில் ஒரு நாளும் சிவப்பு அவலில் ஒரு நாளும் செய்து பார்க்கலாம்.

5. நவராத்திரியின் போதோ பண்டிகை நாட்களிலோ நைவேத்தியத்திற்கு ஏற்றது, மடி சமையலின் போதும் செய்வதற்கு நல்லது,

உருளைக்கிழங்கு பொரியல்

DSC02170

தேவையானவை:

உருளைக்கிழங்கு- 4
பெரிய வெங்காயம் – 1
சாம்பார் தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. உருளைக்கிழங்கை ஒரு பாத்திரம் அல்லது குக்கரில் தோலுடன் 4 சத்தத்திற்கு வேக வைக்கவும்.
2. எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளிக்கவும்
3. பெரிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
3. வெந்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிக் கொண்டு வதக்கின வெங்காயத்துடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் தீயைக் குறைத்து வைத்துக் கிளறவும்.
4. வெந்ததும் சாம்பார் தூள் சேர்த்து ஓரிரு முறை கிளறவும், பொடியின் பச்சை வாசனை போனதும் சிறிதளவு எண்ணெய் விட்டு இறக்கிப் பரிமாறவும் சுவையான வெங்காய உருளைக்கிழங்கு பொரியல் தயார். சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு அருமையான இணை.

குறிப்புகள்:

1. தோலுடன் பொடியாக நறுக்கியும் பொரியல் செய்யலாம்.
2. சாம்பார் தூளிற்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம், மசாலா தோசை அல்லது பூரி போன்றவற்றிற்கு இம்முறையில் செய்வது நன்றாக இருக்கும்.
3. உருளைக்கிழங்கை மசியும் படி வேக வைத்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம், குழந்தைகள் விரும்பி உண்ணுவர்.

உருளைக்கிழங்கின் நன்மைகள்:
மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது.

வாழைப்பழத்தில் உள்ளதைப் போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.

1. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது. பச்சை உருளைக்கிழங்கு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.

2. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.

3. இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு இரு தேக்கரண்டி வீதம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.

4. உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.

5. உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும், வலியும் நீங்கும்.

6. அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும்.

இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும். உருளைக்கிழங்கு வைத்தியம் தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக் கொள்வது தான் உருளைக் கிழங்கு வைத்தியம்.

7. சாதம், சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக் கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

8. இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

தவிர்க்க வேண்டியவர்கள்:

கர்ப்பகால நீரிழிவு உள்ளவர்களும் சர்க்கரை உள்ளவர்களும் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

 

ரவா கேசரி

Image
தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்- சிறிதளவு
ஏலப்பொடி- சிறிதளவு
முந்திரிப் பருப்பு- ஒரு கைப்பிடி
கிஸ்மிஸ்-1 தேக்கரண்டி

செய்முறை:

1. அடுப்பில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

2. மீண்டும் 2 தேக்கரண்டிநெய் விட்டு ரவை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும்.

3. இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.

4. ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.

5. ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.

6. கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.

7.வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து கொள்ளவும்.

8. கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ்
முந்திரி தூவி, வில்லைகள் போடலாம்

பின்குறிப்புகள்:

1. ரவையைச் சிவக்க வறுத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி போன்றவற்றை விரைவில் செய்து முடிக்க வசதியாக இருக்கும், வறுத்து வைப்பதால் பூச்சிகளும் ரவையை அண்டாது.

2. சர்க்கரை அளவைக் குறைக்க விரும்புவர்கள் ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கலாம், சர்க்கரை குறைவாக இருப்பதால் அதிகம் உண்ணலாம்

3. ரவையைச் சிவக்க வறுப்பதிலும் கொதி நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான் சூட்சமம் உள்ளது.

4. கேசரி நிறமூட்டி மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும், சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும், அதே போல் ரவையையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும், கருக விட்டால் கேசரி கசக்கும்.

5. திடீர் விருந்தினரை அசத்தும் பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய செய்வதற்கு எளிமையான, அருமையான இனிப்பு வகை. பெண் பார்க்கும் வைபவங்கள், திருமணங்களிலும் கேசரி சிறப்பிடம் வகிக்கிறது.