அவியல்

அவியல் பிறந்த கதை

தமிழ் நாட்டுத் திருமண வைபவங்களிலும் பண்டிகை நாட்களிலும் வடை, பாயசம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பச்சடி என்று பலவித உணவு வகைகள் பரிமாறப்படுகின்றது, கேரளாவில் கூட்டிற்குப் பதில் அவியல் சிறப்பிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டிலும் அவியலைப் பண்டிகை நாட்களின் போது பயன்படுத்தினாலும் அவியல் கேரளாவிலிருந்து வந்த உணவு முறையாகும்.


ஒரு முறை திருவிதாங்கூர் மன்னனுக்குச் சமையல் செய்ய சமைப்பவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். எல்லாக் காய்கறிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் மீதமிருக்கிறது, இதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். மேற்பார்வையாளரிடம் கேட்க, எல்லாக் காய்கறிகளையும் நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரத்து தயிரையும் விட்டு வெந்ததில் சேர்த்து அவி என்றார், அதில் தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையையும் போடு என்றார், திருவிதாங்கூர் மன்னன் மதிய உணவு உண்டு விட்டு அவியலை பார்த்து புதுவிதமாக இருக்கிறதே? என்ன இது என்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ‘ஆஹா ஓஹோ’ என்று உணவையும் சமையல் செய்தவரையும் அதற்கு யோசனை தந்தவரையும் பாராட்டினதோடு மட்டுமில்லாமல் இன்று முதல் கேரளாவில் எல்லாப் பண்டிகையின் போதும் அவியலும் ஒரு உணவாகச் சிறப்பிடம் பெறட்டும் என்று ‘தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற்றுக் கொள்ளட்டும்’ என்று ஆணையிட்டார். இதுவே அவியல் பிறந்த கதை. செவி வழிக் கேட்ட கதை.

அவியல்

Image

தேவையானவை:

உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
கத்திரிக்காய்- 2
செளசெள(பெங்களூர் கத்திரிக்காய்)- 1
முருங்கைக்காய்- 2
கேரட்- 1
பீன்ஸ்- 7
உலர் மாங்காய்த்துண்டுகள்- 4
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி

அரைக்க:

தேங்காய்- 1/2 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்(சிறியது)- 4
தயிர்- 3 தேக்கரண்டி

செய்முறை:

1. காய்கறிகளை அலம்பி, தோல் சீவ வேண்டியவற்றைச் சீவி நீள நீளமாக நறுக்கவும்.
2. வாழைக்காயை முதலில் வேக வைக்க வேண்டும். அது பாதி வெந்தவுடன் பிற காய்கறிகளைப் போட வேண்டும். பாதி வெந்த பிறகே உப்பைச் சேர்க்க வேண்டும்(உப்பு சேர்த்தால் வேக நேரமெடுக்கும் என்பதால்) உப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து அதிக நீர் விடாமல் 1 டம்ளர் நீர் விட்டு வேக விடவும். உலர் மாங்காய்த்துண்டுகளையும் காய்கள் வேகும் போதே போடலாம்.
3. மின்னரைப்பானில் தேங்காய், சீரகம், பச்சைமிளகாயை அரைத்துக் கொண்டு 3 தேக்கரண்டி தயிரையும் சேர்த்து அரைக்கவும்.
4. தண்ணீர் குறைவாக விட்டதால் நீர் வற்றியிருக்கும்(அப்படி நீர் இருக்கும் பட்சத்தில் அதை இறுத்துத் தனியே வைத்துக் கொண்டு, காய்கள் வெந்த நீரில் சத்து அதிகம் என்பதால் வீணாக்காமல் குழம்பு செய்யும் போது இறுத்த நீரை விட்டுக் கொள்ளலாம்)
5. அரைத்ததைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கி வைக்கவும், தாளிக்கத் தேவையில்லை
6. அவியல் தயாரான பின்பு தண்ணியாக இருந்தால் 1 தேக்கரண்டி பச்சரிசிமாவைத் தூவி விட்டால் கெட்டியாக ஆகும்
7. கடலைப்பருப்பைச் சிவக்க வறுத்துப் பொடி செய்து கொதிக்கும் அவியலில் சேர்க்கக் கல்யாண அவியல் போல ருசி தரும்.
8.மோர் தவிர்த்த குழம்பு வகைகளான சாம்பார், வத்தக்குழம்பு, தீயல், புளிக்குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கும் ரசம் வகையறாக்களுக்கும் அடைக்கும் அருமையான இணை உணவு.

பின் குறிப்புகள்:

1. என்னென்ன காய்கள் இருக்கிறதோ அதை வைத்தே அவியல் செய்யலாம்.

2. ஒரு சிலர் அரைக்கும் போது அவியல் ஒன்று சேர்ந்து வருவதற்காக 1 தேக்கரண்டி அரிசியையும் சேர்த்து அரைத்துக் கொட்டுவர்,

3.குக்கரில் வேக விடுபவர்கள் 2 விசிலிலேயே இறக்கி விடலாம், குக்கரில் நன்றாகக் குழைந்து விடுமென்பதால் நேரம் பிடித்தாலும் பாத்திரத்தில் நீரூற்றி வேக விடுவது சாலச் சிறந்தது.

4. குக்கரில் வேக வைக்க விரும்பினால் முருங்கைக்காயைத் தவிர அனைத்துக் காய்கறிகளையும் பெரிதாகவும் நீளமாகவும் நறுக்க வேண்டும், முருங்கைக்காயை உப்பு, மஞ்சள் பொடி போட்டுத் தனியொரு பாத்திரத்தில் வேக வைத்து வெந்ததுடன் சேர்க்க முருங்கைக்காய் உடைந்து போகாது.

 

 

 

மிளகாய்ப்பொடி இட்லி

Image

தேவையானவை:

இட்லிகள்- 10
பெரிய வெங்காயம்- 1
கேசரித்தூள்- சிறிதளவு

வறுத்துத் திரிக்க:

கடலைப்பருப்பு- 1 கைப்பிடி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 கைப்பிடி
மிளகாய்வற்றல்- 4
காயம்- சிறிதளவு
உப்பு- சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. இட்லிகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்(காலையில் மீந்த இட்லிகளையும் பயன்படுத்தலாம்)

2. வறுக்கக் கொடுத்தப் பொருட்களைச் சிவக்க வறுத்து நற நறவென்று திரிக்கவும், அல்லது இட்லி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டியளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. இட்லிகளை விருப்பமான வடிவில் நறுக்கவும்.

4. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். நிறமூட்டியைச் சேர்க்கவும்.

5. இட்லிப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.

6. நறுக்கின இட்லிகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தால் மிளகாய்ப்பொடி இட்லி தயார்.

வேறொரு முறை:

Spicy Idli Recipe

இம்முறையில் வெங்காயமோ நிறமூட்டியோ சேர்க்காமல் மேற்கூறிய முறையில் செய்யலாம். இம்முறை இட்லிகளால் காலையில் மீந்த இட்லியும் நன்றாக வியாபாரமாகி விடும். நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த சிற்றுண்டி செய்யவும் எளிது.

பருப்புருண்டைக்குழம்பு

Image

தேவையானவை:

துவரம்பருப்பு- 1 கிண்ணம்
மிளகாய்வற்றல்- 3
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

வறுத்துத் திரிக்க:

வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
தனியா- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 4 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தெக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1

உருண்டைகள் செய்முறை:

1. துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்தப் பருப்பைக் களைந்து விட்டு தண்ணீர் விடாமல் உப்பு, காயம், மிளகாய்வற்றல் போட்டு மையாக அரைக்காமல் நற நறவென்று அரைத்து எடுக்கவும்.
3. மைக்ரோவேவ் இருப்பவர்கள் அரைத்ததை ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கலாம், அல்லது இட்லித்தட்டில் அரைத்தக் கலவையைப் பரப்பி வெந்து எடுக்கலாம்.
4. ஒரு வாணலியில் குறைந்த தீயில் எண்ணெய் விட்டு வேக வைத்தப் பருப்பை வதக்கவும்.
5. ஆற விட்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்(குழம்பில் ஊறிப் பெரிதாக வரும்)
6. சிலர் எண்ணெயில் பொரித்து வைத்தும் குழம்பில் போடுவார்கள், இவ்வகையில் உருண்டைகள் உடையாது, குழம்பும் சீக்கிரம் தயாராகும்.

குழம்பு செய்முறை:

1. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

2. வறுக்கக் கொடுத்தவற்றைச் சிவக்க வறுத்து எடுக்கவும்(வெந்தயம், கடலைப்பருப்பு, தனியாவை வறுத்துத் தனியே வைத்து விட்டு கடைசியில் மிளகாய்வற்றலை வறுக்க வேண்டும்)

3. மின்னரைப்பானில் திரிக்கும் போது மிளகாய்வற்றலைக் கடைசியில் போட்டுத் திரிக்க வேண்டும். வறுத்துத் திரிப்பதற்குப் பதிலாக சாம்பார் பொடியையே பயன்படுத்தலாம்.

4. வாணலியை ஏற்றி எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு,கரைத்தப் புளித்தண்ணீரை 3 டம்ளர் அளவு விட்டு உப்பு, மஞ்சள் தூள், வறுத்துத் திரித்த பொடி அல்லது சாம்பார் பொடி போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

5. பிடித்து வைத்த உருண்டைகளைக் கொதிக்கும் புளித்தண்ணீரில் போட வேண்டும், போட்டவுடன் கரண்டி வைத்து அமுக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் உடைந்து விடும், தீயையும் குறைத்து விட வேண்டும்.

6. முதலில் 5, 6 உருண்டைகளைப் போட்டு அது வெந்து மேலே வரும் போது மீதி உருண்டைகளைப் போடவும்.

7. குழம்பு கெட்டியாக வந்தால் கொஞ்சம் நீர் விடலாம், தண்ணியாக இருந்தால் 1 தேக்கரண்டி பச்சரிசி மாவைக் கரைத்துக் கொட்டி கறிவேப்பிலை போட்டு இறக்கவும்..

8. முட்டைக்கோஸ், பீன்ஸ், அவரைக்காய் பொரியல் என்று எவ்வகைப் பொரியலும் இக்குழம்பிற்கு இணையாகும்.

பின் குறிப்புகள்:

பருப்புருண்டைக் குழம்பு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், குறைந்த தீயில் செய்ய வேண்டும், புளி நீர் அதிகம் கொதிக்க விட்டுப் பின் உருண்டைகளைப் போடக் கூடாது. உருண்டைகளைப் போட்டதும் கரண்டியால் நசுக்கக் கூடாது.

கீரை பொரியல்

Image

தேவையானவை:

கீரை- 1 கட்டு
பாசிப்பருப்பு- 1 கப்
தேங்காய்- 1 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 2

செய்முறை:

1. கீரையை மண் போக அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்.

2. பாசிப்பருப்பைச் சுண்டல் பதத்திற்கு(ஒரு கிண்ணத்திற்கு ஒரு குவளை தண்ணீர் விட்டு) 2 விசில் விட்டு உதிராக வேக விடவும்.

3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு கீரையைப் போட்டு வேக விடவும்.

4. பாதி வெந்த பிறகு உப்பு போடவும்(கணிசம் குறையும் முதலிலேயே உப்பு போட்டால் உப்பின் சுவை கூடி விடும்).

5. தனியொரு வாணலியில் வெந்த பாசிப்பருப்பை உதிர்க்கவும்

6. கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பையும் சேர்த்து ஒன்றாக வதக்கவும்.

7. தேங்காய்த்துருவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அலங்கரிக்கவும்.

7. சுவையான கீரைப் பொரியல் தயார், பருப்பின் சத்தும் கிடைக்கும். வெந்தயக்கீரை தவிர்த்து எல்லா விதக் கீரையிலும் செய்யலாம், ருசி அதிகம், குறிப்பாக முருங்கைக்கீரையில் சத்துக்களும் ருசியும் அதிகம்.

 

எலுமிச்சை சாதம்

lemon-rice

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம்- 1 கப்
எலுமிச்சை- 3

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சைமிளகாய்- 2
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி 
காயம்- சிறிதளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு- சிறிதளவு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு – ஒரு கைப்பிடி

செய்முறை:

1. சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும்(குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்)

2. வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.

3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும், கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு கடுகு வெடித்தவுடன் சிவக்க வறுபட வேண்டும். துருவின இஞ்சி, பச்சைமிளகாய்(பச்சைமிளகாயை நீளமாக நறுக்கலாம், அல்லது மிகவும் பொடியாக நறுக்கிப் போடலாம்), கறிவேப்பிலை, காயம், மஞ்சள் தூள் அனைத்தும் போட்டு வதக்கவும்.

4. தனியொரு வாணலியில் எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.

5. தாளிசப்பொருட்களுடன் எலுமிச்சையைப் பிழிந்து விடவும்.

6. ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.

7. கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.

பின்குறிப்புகள்:

1. எளிதில் செய்து விடக் கூடிய எலுமிச்சைச் சாதத்தைப் பிரயாண நேரங்களிலும் பயன்படுத்தலாம்.

2. எலுமிச்சையின் பயன்கள் ஏராளம், அதனால் அடிக்கடி நம் உணவில் எலுமிச்சையைப் பயன்படுத்த வேண்டும்.

3. புளிப்புச்சுவை, காரச்சுவை அவரவர் விருப்பங்களுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளலாம்.

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்:

1. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது.

2.தினசரி வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது.

3.இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

4. இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகைப் பாதுகாக்கிறது. முகத்தைப் புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது.

5. எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.

6. இது ஜீரணமண்டலத்தைச் சீராக்குகிறது. உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

7. எலுமிச்சைச் சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குகிறது.

***********************************************************************

 

புளிக்காய்ச்சல் & புளியோதரை

புளிக்காய்ச்சல் செய்யும் விதம்:

Image

 

தேவையானவை:

புளி- இரண்டு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகு- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- 1 தேக்கரண்டி
தனியா- 3/4 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5
எள்- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உடைத்தத் தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கைப்பிடி

செய்முறை:

1. புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
2. தாளிசப்பொருட்களை ஓர் வாணலியில் தாளித்துக் கொண்டு 2 டம்ளர் அளவிலான கரைத்தப் புளித்தண்ணீரை விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மையாக இல்லாமல் நற நற பதத்திற்குத் திரித்துக் கொதிக்கும் புளித்தண்ணீரில் விட்டுத் தீயைக் குறைத்து வைக்கவும். தனியொரு வாணலியில் எண்ணெயிட்டு தோல் நீக்கிய நிலக்கடலையை வறுத்துக் கொதிப்பதுடன் சேர்க்கவும்.
4. கெட்டியாகும் போது நல்லெண்ணையைக் கொட்டிக் கிளறி ஆற விடவும்.
5. சுவையான புளிக்காய்ச்சல் தயார்.
6.விருப்பமானவர்கள் சிறிது வெல்லத்தையும் சேர்க்கலாம்.

*******************************************************

புளியோதரை

Image

தேவையானவை:

உதிர் உதிராக வேக வைத்தப் பச்சரிசி சாதம்- 2 கப்
புளிக்காய்ச்சல்- ஒரு கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. வாயகன்ற பாத்திரத்தில் உதிராக வேக வைத்த சாதத்தை ஆற விடவும்.

2. ஓரளவுக்கு ஆறினவுடன் ஆறின புளிக்காய்ச்சலைப் போட்டுப் பூத்தாப்பில் கிளறவும், அழுத்திக் கிளறினால் குழைந்து விடும்.

3. சிறிது நல்லெண்ணெய் கலந்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு அப்பளம், வடகத்துடன் பரிமாறவும்.

4. தயிர்சாதமும் கிளறிக் கொண்டால் புளியோதரை சாப்பிட்ட பின் அதையும் உண்ணலாம்.

Image

எளியமுறை புளிக்காய்ச்சல்:

தேவையானவை:

புளி- இரண்டு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
வறுத்துத் திரித்த வெந்தயம்- 1 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உடைத்தத் தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கைப்பிடி
எள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், காயம் போன்ற தாளிசப் பொருட்களைத் தாளித்து விட்டுப் புளித்தண்ணீரை விட்டு உப்பு, மஞ்சள் தூள், காயம் போட்டுக் கொதிக்க விடவும்.

2. வறுத்த வெந்தயப்பொடியை முதலில் சேர்க்கவும்.

3. கொதித்து வற்றும் வேளையிலே மீதி வெந்தயப்பொடியைச் சேர்க்கவும்.

4. வேறு எதுவும் வறுத்து அரைக்கத் தேவையில்லை.

5. எளிய முறையில் செய்து விடக் கூடிய இந்தப் புளிக்காய்ச்சலைப் பயன்படுத்தி மேற்கூறிய முறையில் புளியோதரை தயாரிக்கலாம்.

கூடுதல் குறிப்புகள்:

Image

1. முதல் முறையில் கடலைப்பருப்பு இல்லாமல் மற்ற பொருட்களை வறுத்து அரைத்துச் செய்ய வித்தியாசமான சுவை கிடைக்கும்.

2.புளிக்காய்ச்சலை முந்தின நாளே தயாரித்துக் கொண்டால் மறு நாள் புளிப்புச் சுவை கூடி ருசி அமிழ்தமாய் இருக்கும்.

3. பயண நேரங்களின் போது புளிக்காய்ச்சலைச் செளகரியப்படும் நேரத்தில் செய்து விட்டு சாதத்துடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

4. வேலைக்குச் செல்பவர்கள் வார இறுதி நாட்களில் பொறுமையுடன் சற்று மெனக்கெட்டு செய்து வைத்துக் கொண்டால் சாதம் வைத்துக் கலப்பது மட்டும் தான் வார நாட்களில் வேலையாக இருக்கும்.

5. காரம் தூக்கலாகப் போடுவது நல்லது, ஏனென்றால் போகப் போகப் புளிப்புத்தன்மை மேலோங்குவதால் காரம் கட்டுப்படும்.

6. இன்னும் ஒரு வழியில் வறுத்து அரைப்பதற்குப் பதிலாக வீட்டில் வறுத்துத் திரித்த சாம்பார் பொடியைப் பயன்படுத்தியும் திடீர் புளியோதரை செய்து அசத்தலாம். புளிக்காய்ச்சல் வாசனை ஆளைத் தூக்கும், புளிக்காய்ச்சல் செய்ய அரை மணி நேரம் தான் ஆகும், மொத்தத்திலே புளியோதரையை அரை மணி நேரத்தில் செய்து முடிக்கலாம்.

 

 

 

 

கேரட் பொரியல்

Image

தேவையானவை:

கேரட்- 4
தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிள்காய்வற்றல் – 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. கேரட்டை மேலோட்டமாகத் தோல் சீவி(தோலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் அழிந்து விடுமென்பதால்) பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் இருப்பவர்கள் ஒரு நிமிடத்திற்கு கேரட்டை வைத்து நறுக்கினால் நறுக்க சுலபமாக இருக்கும்.

2. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு கேரட்ட், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.

3. அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.

4. கேரட் வெந்தவுடன் தேங்காய்த்துருவலைப் போட்டுப் பிரட்டிப் பரிமாறவும்.

5. கேரட்டைப் பொடியாக நறுக்காமல் துருவிப் போட்டும் செய்யலாம், இவ்வாறு செய்யும் போது கோஸையும் துருவிப் போட்டுப் பொரியல் செய்யலாம்.

6. காலிபிளவர், பீட்ரூட், கோஸ், கேரட் போன்ற காய்களைத் துருவிப் பொரியல் செய்ய மேற்கூறிய காய்களின் பலன் அத்தனையும் உடலிற்குக் கிடைக்கும்.

 

கேரட்டின் நன்மைகள்:
1. தாவரத்தங்கம் என்று அழைக்கப்படுகின்ற, பச்சையாகவே சாப்பிடக் கூடிய கேரட்டின் மருத்துவ குணங்கள் ஏராளம். இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடலில் உள்ள பல நோய்கள் போய் விடும். கேரட்டில் வைட்டமின் சத்து நிறைய உள்ளது. கேரட்டில் உள்ள கரோட்டீன் சத்தை ஈரல் வைட்டமின் ஏ சத்தாக மாற்றி உடம்பினுள் சேமித்து வைக்கும்.

 
2. கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்குக் கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது.

 
3.கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. 

 
4. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

 

5. பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

 
6. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் அவசியம் சேர்க்க வேண்டிய காயிது(46 கலோரிகள் மட்டுமே கொண்டது)

 
7.இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

 
8. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.

 
9.கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 
10.இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்குப் பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

 
11.கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

 
12.கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் அதிக நன்மை தருவதுடன் செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.

 
13.வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள் கேரட்டைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் படி படியாக குறையும்.

 
14.புற்றுநோய்,எலும்புருக்கி,சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும்தேனும் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
15.கர்ப்பிணிகள் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று தின்றால் கர்ப்பப்பையின் சுவர்களில் நச்சுத்தன்மையை விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும்.சீரணத்தைத் துரிதப்படுத்தும்.

 

***********************************************************