கெட்டி வத்தக்குழம்பு

Image

வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் வாயூறச் செய்யும் உணவு. அப்பளம் தவிர வத்தக்குழம்பிற்குப் பருப்புசிலியும் அருமையான இணை. கெட்டியான முறையில் செய்து வைக்கும் வத்தக்குழம்பு பல நாட்களுக்குக் கெடாது. புளிக்காய்ச்சலுக்குச் செய்வது போலச் சிறிது மெனக்கெட வேண்டும். வேலைக்குப் போகிறவர்கள் வார இறுதி நாட்களில் இதைச் செய்து வைத்துக் கொண்டால் இட்லி, தோசை, பொங்கலிற்குத் தொட்டுக் கொள்ள மட்டுமில்லாமல் சாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தயிர்சாதத்திற்கு மணமணக்கும் வத்தக்குழம்பைத் தொட்டுச் சாப்பிட்டு விட்டுக் கையலம்பி விட்டு கைகளை முகர்ந்து பார்ப்பதில் உள்ள சுகமே அலாதி. மருதாணி வைத்து எடுத்து விட்டு கைகளை அலம்பி விட்டுத் தயிர்சாதமும் வத்தக்குழம்பும் சாப்பிட்டால் அதன் சுவை தனி…! அட ஒரு வத்தக்குழம்பிற்கு இத்தனை பொழிப்புரையா….இனி செய்முறையைக் காண்போமா?

தேவையானவை:

புளி- இரண்டு எலுமிச்சையளவு
பூண்டு- 12 பல்லு
உப்பு- தேவையான அளவு

திரிக்க:

மிளகு- 1 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 6

வறுத்தரைக்க:

பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. புளியைக் கரைத்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் 12 பல்லு பூண்டு(பாதிப் பாதியாக நறுக்கிக் கொள்ளலாம்) சேர்த்து ஓரளவு சிவக்க வதக்கவும்.
3. கெட்டியாகக் கரைத்து வைத்துள்ளப் புளியைத் தாளிசத்தில் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. தனியே ஒரு வாணலியில் தனியா, மிளகு, மிளகாய்வற்றலை வாசனை வரும் வரையும் ஓரளவிற்குச் சிவக்கும் வரையும் வறுத்து ஆற விட்டு மின்னரைப்பானில் திரித்து எடுத்துக் குழம்பில் கொட்டவும்.
5. அந்த வாணலியின் சூட்டிலேயே நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சிவக்க வறுக்கவும், வெங்காயம் ஓரளவிற்கு வெந்ததும் தக்காளியைச் சேர்த்து வதக்கி ஆற விட்டு அரைக்கவும்.
6. அரைத்த வெங்காயத் தக்காளி விழுதைக் குழம்புடன் சேர்க்கவும், மிதமான தீயில் குழம்பைக் கொதிக்க விடவும்.
7. கொதித்து வற்றும் போது இறக்கி மீண்டும் நல்லெண்ணெய் சேர்க்கவும்(இன்னொரு முறை நல்லெண்ணெயில் கடுகு தாளிசம் செய்தால் மணமாக இருக்கும்)

கூடுதல் குறிப்புகள்:

1. கால நிலை குளிராக இருந்தால் வெளியில் வைத்திருந்தாலே இரண்டு மூன்று நாட்களுக்குக் கெடாது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால் 10 நாட்கள் வரை கெடாதிருக்கும்.
2. குழம்பு பண்ணி உடனே சாப்பிடுவதை விட மறு நாள் சாப்பிடும் போது புளிப்பின் சுவை இறங்கிக் காரம் சிறிது மட்டுப்பட்டு ருசி அதிகமாக இருக்கும்.
3. சாதத்தைச் சுடச் சுடப் பரிமாறி வத்தக்குழம்பு விட்டுப் பரிமாற வேண்டும்.
4. வத்தக்குழம்பு செய்யும் போது பருப்பு சேர்க்காததால் பொரியலில் பருப்பு இருப்பது போல் பார்த்துக் கொள்ளலாம். மோர்க்குழம்பு, வத்தக்குழம்பு செய்யும் போது பருப்புசிலி செய்வதன் சூட்சமமும் அதுவே.
5. வத்தக்குழம்பு சூடு என்பதால் வத்தக்குழம்பு, மோர் ரசம், உசிலி செய்வது வழக்கம். ரசம் பகுதியில் மோர் ரசம் பதிவை எழுதுகிறேன்.

செய்யக் கூடாதன:

காயம், கொத்தமல்லி சேர்க்கத் தேவையில்லை(சேர்த்தால் வேறு சுவை வந்து விடும்)
பூண்டும் மேற்கூறிய அளவே செய்ய வேண்டும், அதிகம் சேர்த்தால் ருசி மாறிப் பூண்டுக்குழம்பு போலாகி விடும்.
வத்தக்குழம்பு செய்யும் போது மிளகாய்வற்றலின் காரத்தின் வீரியத்திற்கேற்ப சேர்க்க வேண்டும், காரம் கூடச் சேர்த்தால் மறு நாளைக்கு நன்றாக இருக்கும். வெங்காயம்,பூண்டு சேர்க்காதவர்கள் மேற்கூறிய முறையில் அவையில்லாமலும் செய்து கொள்ளலாம்(தக்காளி புளித்தொக்கு போல சுவை அமையும்)

சாதத்துடன் சேர்க்கும் போது ஒரு தேக்கரண்டி வத்தக்குழம்பு விழுதினைச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு உண்ணலாம். குழம்பினைப் போலத் தாராளமாக விட வேண்டும் என்றில்லை.