யார் இந்தக் காயசண்டிகை?

 

 

silver_thali

சமையல் செய்வது தனிக்கலை. அன்பும் அக்கறையும் கொண்டு சமைக்கப்படும் பதார்த்தம் அமிழ்தத்திற்கு ஒப்பானது. பாத்திர ஷுத்தி, பதார்த்த ஷுத்தி, பண்ட ஷுத்தி என்பார்கள். சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். சமைக்கும் காய்கறிகள், பொருட்களையும் சுத்தமாக அலம்பியே சமைக்க வேண்டும், இவ்வாறு சுத்தமுடன் சமையல் செய்யும் போது சமைத்தப் பண்டமும் ருசியாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ நோய் நொடியில்லாத நல் வாழ்விற்கு ஆரோக்கியமான உணவுமுறை அவசியமானதாகும். உணவில் காய்கறிகளும் பழங்களும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், தண்ணீர் பருக வேண்டும். ஆவியில் வேக வைத்த பொருட்களை உண்ணுதல் நல்லது. எந்தெந்த காய்கள் என்னென்ன நன்மைகளைத் தருகிறன்றது என்ற குறிப்புகளையும் வழங்கியிருக்கிறேன்.’பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்ற பழமொழி உண்டு.சமையலைப் பெண் தான் செய்ய வேண்டும், ஆண் தான் செய்ய வேண்டும் என்றில்லை. விருப்பமுள்ள எவரும் செய்யலாம், செய்வதைச் சிரத்தையாகவும் மகிழ்வுடனும் செய்தாலே போதும். ரசித்துச் சமைக்கப்படும் சமையலின் ருசியே தனி. சமைத்ததைப் பாத்திரங்களில் அலங்கரித்து வைத்து அன்புடன் பரிமாறினால் அது ருசியோ ருசி.நான் கற்றறிந்த, செய்தறிந்த சமையல் படைப்புகளை உங்களுடன் பகிர்கின்றேன்.

காயசண்டிகை – வலைப்பூ பெயர்க்காரணம்:

 
காயசண்டிகை:

 
காஞ்சனன் கணவன், காயசண்டிகை மனைவி, இமயமலைச் சாரலில் காஞ்சனாபுரத்தில் வசித்தனர்.
பொதிகைமலையின் வனப்பு காணச் சுற்றுலாப் பயணிகளாகத் தமிழகம் வந்தனர். வியந்து, மகிழ்ந்து பல்வேறு இடங்களுக்கும் பயணித்தனர்.

 
ஒருநாள், குளக்கரையருகே முனிவன் ஒருவன் குளிக்கச் செல்லும் பொழுது விட்டுச் சென்ற நாவல்பழத்தை, விவரமறியாது காலால் காயசண்டிகை மிதித்தாள். குளித்துவிட்டு மீண்ட முனிவன், நாவல் பழத்தை மிதித்த காயசண்டிகையைச் சினந்தான்.

 
என் பசிக்கு உணவாகிய பழத்தை மிதித்தனை, என்னைப்போல் உனக்கும் தீராப் பசிப்பிணி வருவதாக என முனிவன் சபித்தனன். காயசண்டிகையின் தீராப் பசிப்பிணியைத் தீர்க்கக் காஞ்சனன் முயன்றான். தமிழகமெங்கும் ஊரூராகச் சென்றான். மருத்துவர்களை நாடினான்.

 
சோழத் தலைநகர் பூம்புகார் வந்தான். வருவோர்க்கெல்லாம் வற்றாது உணவு வழங்கும் உலக அறவியில் காயசண்டிகையைச் சேர்த்தான். இணையோடு வந்தவன் தனியாக வடக்கே காஞ்சனாபுரத்திற்குத் திரும்பினான்.

மணிமேகலை:

1.kayasandigai

கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் மணிமேகலை. மூப்பு, பிணி, சாக்காடு ஆய மூன்றுக்கான இப்பிறவியின் உடல், துன்பங்களின் கொள்கலன்; துறவே பிறவியின் பயன்; இவற்றைத் தேர்ந்த மணிமேகலை சிறுவயதிலேயே துவராடையை உடுத்தித் தேரரானாள்.

துறவுபூண்ட மணிமேகலை, யாழ்ப்பாணம் சென்றாள். கந்தரோடையில் கோமுகிப் பொய்கையில் அமுதசுரபிப் பாத்திரத்தைப் பெற்றாள்.

புகார் நகரம் திரும்பிய மணிமேகலை, பாரகம் அடங்களும் பசிப்பிணி அறுகென அமுதத்தை அனைவருக்கும் அள்ளி ஈந்தாள்.

காயசண்டிகை தங்கியிருந்த உலக அறவியில் மணிமேகலை பசிப்பிணி போக்கிக் கொண்டிருந்தாள். அங்கிருந்த காயசண்டிகைக்கு அமுதசுரபியிலிருந்து அள்ளிக் கொடுத்த உணவே மருந்தாயிற்று. தீராப் பசியை மணிமேகலை தீர்த்தாள். நன்றி கூறிய காயசண்டிகை தன் கணவனைத்தேடி வடக்கே காஞ்சனாபுரத்திற்குப் புறப்பட்டாள்.

south-indian-thali1

காயசண்டிகையின் தீராப்பசியைத் தீர்த்த மணிமேகலையின் அமுத சுரபியாய் உங்கள் விழிகளில் சமையல் செய்முறைகள் பதிந்து ரசித்துச் சமைக்க, இல்லத்தினரின் காயசண்டிகைப் பசியினை இந்த வலைப்பூ தீர்க்கட்டும். அமிழ்தென உணவைப் புசிக்கட்டும்;ருசிக்கட்டும். :-) உலகத்தில் உள்ள அனைவரும் தேக ஆரோக்கியத்துடனும் எல்லா வளங்களுடனும் நலமுடன் வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்.  நன்றி.

அன்புடன்,
காயத்ரி.

14 responses to “யார் இந்தக் காயசண்டிகை?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s