தேவையானவை:
கொத்தமல்லி- 3 கட்டு
புளி- சிறிதளவு
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 6
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. கொத்தமல்லிக் காம்பு நீக்கி இலைகளை மட்டும் தனியே ஆய்ந்து வைக்க வேண்டும்.
2. மண் போக நீரில் அலசி ஒரு காகிதத்தால் ஒற்றித் தண்ணீரை நீக்கவும்.
3. அடுப்பை ஏற்றி வாணலியில் எண்ணெய் இட்டு வெள்ளை உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலைச் சிவக்க வறுக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.
4. அதனுடன் கொத்தமல்லியையும் சேர்த்து ஒரு பிரட்டுப் பிரட்டி உப்பு(சிறிதளவு) சேர்க்க வேண்டும்.
5. மின்னரைப்பானில் மையாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் விடக் கூடாது.
6. தாளிக்க விரும்புபவர்கள் தாளிக்கலாம். இல்லையென்றால் தேவையில்லை.
7. புளி சிறிதளவு போட்டால் பச்சை நிறமாக வரும், இல்லையென்றால் மருதாணிப்பச்சை நிறமாக துவையல் ஜொலிஜொலிக்கும்.
கூடுதல் தகவல்கள்:
1. கொத்தமல்லி- கறிவேப்பிலை துவையலையும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அது தனி சுவையுடன் இருக்கும்.
2. கொத்தமல்லியில் அகற்றிய காம்புகளை ஒரு பாத்திரத்தில் போட்டு ரசத்திற்குப் போடலாம். காம்பு போட்டு துவையல் செய்யக் கூடாது, நீர்த்து விடும், விரைவில் கெட்டு விடும், ஆனால் இந்தத் துவையல் ஒரு வாரத்திற்குக் கெடாது.
3. தயிர்சாதம், இட்லி, பொங்கலிற்கு ஏற்ற இணையுணவு.