காலிபிளவர் பொரியல்

Image

தேவையானவை:

காலிபிளவர் – 1
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. காலிபிளவரைச் பத்து நிமிடங்கள் சுடு நீரில் ஊறவைக்கவும் (கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழுக்கள் அழிந்து விடும்)

2. காலிபிளவரைச் சிறிது துடைத்து விட்டுப் பிடித்த வடிவங்களில் (பெரிதாகவோ, பொடிதாகவோ) நறுக்கவும்.

3. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு நறுக்கின காலிபிளவரையும் உப்பு, மஞ்சள் தூளையும் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி விட்டு வேக விடவும்.(அதிகத் தண்ணீர் விட்டால் கணிசம் குறையும், குழைந்தும் விடும்.)

4. காய் வெந்ததும் சாம்பார்த்தூளைக் காரத்திற்குச் சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெயிட்டுக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

5. சப்பாத்தி, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு அருமையான பொரியல்.

6. மஞ்சள் தூள் சேர்ப்பது கண்ணுக்குத் தெரியாத புழுக்களை அழித்து உடலிற்கு நன்மை சேர்க்கும் என்பதாலாகும்.

7. பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், குருமா, தால், பரோத்தா வகைகளிலும் காலிபிளவரைப் பயன்படுத்தி உடலிற்குச் சத்துக்களைச் சேர்க்க வேண்டும்.

காலிபிளவர் சத்துக்கள்

காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம்.
முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும்.
காலிப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிப்ளவரானது முதன் முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது.

காலிப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கிய இந்தக் காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும் போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது.

அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும்.

இதைத் தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.
மேலும் காலிப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.

பூ வேகும் போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.
இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளைப் போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.

http://jokavitha.blogspot.com/2012/09/blog-post_20.html தகவல்களுக்கு நன்றி.

 

பின்னூட்டமொன்றை இடுக