சேமியா உப்புமா

தேவையானவை:

semiya upuma
சேமியா – 1 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
காய்கள்:
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1/2
குடமிளகாய்- 1/2
உருளைக்கிழங்கு-1
காரட்- 1
வேக வைத்தப் பட்டாணி- 1 கப்

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
துருவிய இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. சேமியாவைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. வேறொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு காய்கறிகளையும்(வெங்காயம், பிற காய்கள், தக்காளி) வரிசையில் வதக்கவும்.
3. ஒரு கப் சேமியாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் காய்கறிகளுடன் சேர்த்து வேக விடவும்.
4. தண்ணீர் கொதித்துக் காய்களும் வெந்ததும் வறுத்த சேமியாவைச் சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும்.
5. ஒரு சில நிமிடங்களிலேயே வெந்த உப்புமாவை எண்ணெய் விட்டுக் கிளறிக் கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
6. உப்புமாவில் மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாய் மட்டும் சேர்த்துச் செய்யத் தனிச்சுவை கிட்டும்.
7. மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாயைத் தவிர்த்து 1 தேக்கரண்டி சாம்பார் பொடி காய் வேகும் போது சேர்க்க அதுவும் தனிச்சுவை தரும்.
8.காய்கள் சேர்க்காமல் மஞ்சள் தூள் சேர்க்காமல் வெளீரென்று செய்யும் உப்புமாவிற்கும் ருசி அதிகம்.
9. காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வதே எப்போதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. உப்புமாவைச் சுடச் சுடச் சாப்பிட இன்னும் ருசி அதிகம். உப்புமாவை மாலை வேளைகளில் செய்து வைத்துக் கொண்டால் பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அசத்தலாம்.
10.ரவா உப்புமாவிற்குச் சொன்னது போல சேமியாவையும் வறுத்து வைத்துக் கொண்டால் உப்புமா, சேமியா கேசரி, சேமியா பாயசத்தை விரைவில் செய்து விடலாம். ரவை, சேமியாவை வறுத்து வைப்பதால் பூச்சிகளும் அண்டாது.

ரவா உப்புமா

தேவையானவை:

DSC08726

ரவை- 2 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
காய்கள்:
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1
குடமிளகாய்- 1/2
உருளைக்கிழங்கு-1
காரட்- 1
வேக வைத்தப் பட்டாணி- 1 கப்

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
துருவிய இஞ்சி- 1 துண்டு
முந்திரிப்பருப்பு- 1 கைப்பிடி(விரும்புவர்கள் போடலாம்)
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

DSC08722

 

1. ரவையைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்
2. வாணலியைச் சூடாக்கி எண்ணெய் விட்டு தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும்.
3. தாளிப்பானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும், பிறகு குடமிளகாய், காரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, தக்காளி(இறுதியாகச் சேர்க்கவும்) சேர்க்கவும்.
4. ஒரு கப் ரவைக்கு ஒன்ரறை கப் தண்ணீர் காய்ச்சித் தனியே வைத்துக் கொள்ளவும்(குழைவாக விரும்புபவர்கள் ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் சுட வைத்துக் கொள்ளலாம்)
5. காய்ச்சினத் தண்ணீரைக் காய்கறிக் கலவையுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
6. காயும் வெந்து தண்ணீரும் கொதிக்கும் போது தனியே வறுத்த ரவையை ஒரு புறம் விட்டுக் கொண்டே மறுபுறம் கெட்டிப் பிடிக்காமல் கிளறிக் கொண்டே வரவும், தீயைக் குறைத்து வைக்கவும், இல்லையேல் வென்னீர் கையில் பட்டு விடும்.
7. உப்புமா வெந்தவுடன் எண்ணெய் சேர்த்து அலங்கரிக்கக் கொத்தமல்லி தூவித் தேங்காய்ச்சட்னி, பீர்க்கங்காய்த் துவையல் போன்ற ஏதேனும் இணையுணவுடன் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. உப்புமா ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் போல அவசரத் தேவைகளுக்கு, திடீர் விருந்தினரைச் சமாளிக்க உதவும்.
2. உப்புமாவிற்கு உப்பு மா என்று கேட்டு விடாமல் இருக்க முன் ஜாக்கிரதை முத்தழகி(முத்தண்ணாவிற்கு எதிர்ப்பதம்)யாய்க் கவனமாக உப்பு சரியான அளவில் போட்டு விட வேண்டும். முதலில் உப்பு போட்டுக் கொதிக்க விட வேண்டும், ரவையைக் கொட்டின பிறகு உப்பு ஒன்று சேராது.
3. காரம் அவரவர் குடும்பத்தினரின் வசதிக்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
4. ஓய்வு நேரங்களில் ரவையை வறுத்துத் தனியே காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமாவோ ரவா கேசரியோ செய்வது எளிது.
5. வெங்காயம், தக்காளி போட்டும் செய்யலாம்.
6. காய்கறிகளுடன் உப்புமா செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
7. உப்புமா செய்து முடித்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்த உப்புமாவைக் கொட்டிச் சமப்படுத்தவும், பிறகு வேறொரு தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் கொட்ட அழகான வடிவத்துடன் வரும். சமையல் செய்வதை விட அழகாகப் பார்வையாளர்களை(இங்க நம்ம வீட்டு ஆட்கள் தான் பார்வையாளர்கள், ரசிகர்கள் எல்லாமே) கவரலாம். 8. உப்புமாவா என்று அலறுபவர்களைக் கூட அசத்தலாம்.

 

கெட்டி வத்தக்குழம்பு

Image

வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் வாயூறச் செய்யும் உணவு. அப்பளம் தவிர வத்தக்குழம்பிற்குப் பருப்புசிலியும் அருமையான இணை. கெட்டியான முறையில் செய்து வைக்கும் வத்தக்குழம்பு பல நாட்களுக்குக் கெடாது. புளிக்காய்ச்சலுக்குச் செய்வது போலச் சிறிது மெனக்கெட வேண்டும். வேலைக்குப் போகிறவர்கள் வார இறுதி நாட்களில் இதைச் செய்து வைத்துக் கொண்டால் இட்லி, தோசை, பொங்கலிற்குத் தொட்டுக் கொள்ள மட்டுமில்லாமல் சாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தயிர்சாதத்திற்கு மணமணக்கும் வத்தக்குழம்பைத் தொட்டுச் சாப்பிட்டு விட்டுக் கையலம்பி விட்டு கைகளை முகர்ந்து பார்ப்பதில் உள்ள சுகமே அலாதி. மருதாணி வைத்து எடுத்து விட்டு கைகளை அலம்பி விட்டுத் தயிர்சாதமும் வத்தக்குழம்பும் சாப்பிட்டால் அதன் சுவை தனி…! அட ஒரு வத்தக்குழம்பிற்கு இத்தனை பொழிப்புரையா….இனி செய்முறையைக் காண்போமா?

தேவையானவை:

புளி- இரண்டு எலுமிச்சையளவு
பூண்டு- 12 பல்லு
உப்பு- தேவையான அளவு

திரிக்க:

மிளகு- 1 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 6

வறுத்தரைக்க:

பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. புளியைக் கரைத்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் 12 பல்லு பூண்டு(பாதிப் பாதியாக நறுக்கிக் கொள்ளலாம்) சேர்த்து ஓரளவு சிவக்க வதக்கவும்.
3. கெட்டியாகக் கரைத்து வைத்துள்ளப் புளியைத் தாளிசத்தில் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. தனியே ஒரு வாணலியில் தனியா, மிளகு, மிளகாய்வற்றலை வாசனை வரும் வரையும் ஓரளவிற்குச் சிவக்கும் வரையும் வறுத்து ஆற விட்டு மின்னரைப்பானில் திரித்து எடுத்துக் குழம்பில் கொட்டவும்.
5. அந்த வாணலியின் சூட்டிலேயே நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சிவக்க வறுக்கவும், வெங்காயம் ஓரளவிற்கு வெந்ததும் தக்காளியைச் சேர்த்து வதக்கி ஆற விட்டு அரைக்கவும்.
6. அரைத்த வெங்காயத் தக்காளி விழுதைக் குழம்புடன் சேர்க்கவும், மிதமான தீயில் குழம்பைக் கொதிக்க விடவும்.
7. கொதித்து வற்றும் போது இறக்கி மீண்டும் நல்லெண்ணெய் சேர்க்கவும்(இன்னொரு முறை நல்லெண்ணெயில் கடுகு தாளிசம் செய்தால் மணமாக இருக்கும்)

கூடுதல் குறிப்புகள்:

1. கால நிலை குளிராக இருந்தால் வெளியில் வைத்திருந்தாலே இரண்டு மூன்று நாட்களுக்குக் கெடாது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால் 10 நாட்கள் வரை கெடாதிருக்கும்.
2. குழம்பு பண்ணி உடனே சாப்பிடுவதை விட மறு நாள் சாப்பிடும் போது புளிப்பின் சுவை இறங்கிக் காரம் சிறிது மட்டுப்பட்டு ருசி அதிகமாக இருக்கும்.
3. சாதத்தைச் சுடச் சுடப் பரிமாறி வத்தக்குழம்பு விட்டுப் பரிமாற வேண்டும்.
4. வத்தக்குழம்பு செய்யும் போது பருப்பு சேர்க்காததால் பொரியலில் பருப்பு இருப்பது போல் பார்த்துக் கொள்ளலாம். மோர்க்குழம்பு, வத்தக்குழம்பு செய்யும் போது பருப்புசிலி செய்வதன் சூட்சமமும் அதுவே.
5. வத்தக்குழம்பு சூடு என்பதால் வத்தக்குழம்பு, மோர் ரசம், உசிலி செய்வது வழக்கம். ரசம் பகுதியில் மோர் ரசம் பதிவை எழுதுகிறேன்.

செய்யக் கூடாதன:

காயம், கொத்தமல்லி சேர்க்கத் தேவையில்லை(சேர்த்தால் வேறு சுவை வந்து விடும்)
பூண்டும் மேற்கூறிய அளவே செய்ய வேண்டும், அதிகம் சேர்த்தால் ருசி மாறிப் பூண்டுக்குழம்பு போலாகி விடும்.
வத்தக்குழம்பு செய்யும் போது மிளகாய்வற்றலின் காரத்தின் வீரியத்திற்கேற்ப சேர்க்க வேண்டும், காரம் கூடச் சேர்த்தால் மறு நாளைக்கு நன்றாக இருக்கும். வெங்காயம்,பூண்டு சேர்க்காதவர்கள் மேற்கூறிய முறையில் அவையில்லாமலும் செய்து கொள்ளலாம்(தக்காளி புளித்தொக்கு போல சுவை அமையும்)

சாதத்துடன் சேர்க்கும் போது ஒரு தேக்கரண்டி வத்தக்குழம்பு விழுதினைச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு உண்ணலாம். குழம்பினைப் போலத் தாராளமாக விட வேண்டும் என்றில்லை.

 

கொத்தமல்லித் துவையல்

Image

தேவையானவை:

கொத்தமல்லி- 3 கட்டு
புளி- சிறிதளவு
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 6
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. கொத்தமல்லிக் காம்பு நீக்கி இலைகளை மட்டும் தனியே ஆய்ந்து வைக்க வேண்டும்.
2. மண் போக நீரில் அலசி ஒரு காகிதத்தால் ஒற்றித் தண்ணீரை நீக்கவும்.
3. அடுப்பை ஏற்றி வாணலியில் எண்ணெய் இட்டு வெள்ளை உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலைச் சிவக்க வறுக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.
4. அதனுடன் கொத்தமல்லியையும் சேர்த்து ஒரு பிரட்டுப் பிரட்டி உப்பு(சிறிதளவு) சேர்க்க வேண்டும்.
5. மின்னரைப்பானில் மையாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் விடக் கூடாது.
6. தாளிக்க விரும்புபவர்கள் தாளிக்கலாம். இல்லையென்றால் தேவையில்லை.
7. புளி சிறிதளவு போட்டால் பச்சை நிறமாக வரும், இல்லையென்றால் மருதாணிப்பச்சை நிறமாக துவையல் ஜொலிஜொலிக்கும்.

1.2.kotha

கூடுதல் தகவல்கள்:

1. கொத்தமல்லி- கறிவேப்பிலை துவையலையும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அது தனி சுவையுடன் இருக்கும்.
2. கொத்தமல்லியில் அகற்றிய காம்புகளை ஒரு பாத்திரத்தில் போட்டு ரசத்திற்குப் போடலாம். காம்பு போட்டு துவையல் செய்யக் கூடாது, நீர்த்து விடும், விரைவில் கெட்டு விடும், ஆனால் இந்தத் துவையல் ஒரு வாரத்திற்குக் கெடாது.
3. தயிர்சாதம், இட்லி, பொங்கலிற்கு ஏற்ற இணையுணவு.

 

கோவக்காய்-பீர்க்கங்காய் துவையல்

Image
தேவையானவை:

கோவக்காய்- 2 கிண்ணம்
பீர்க்கங்காய்- 2
பச்சைமிளகாய்- 5
மிளகாய்வற்றல்- 2
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. கோவக்காயை அலம்பித் துடைத்துக் கொள்ளவும்.
2. பீர்க்கங்கங்காயைத் தோலகற்றி நறுக்கிக் கொள்ளவும்.
3. வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பைச் சிவக்க வறுக்கவும், ஓரளவு சிவந்ததும் வெள்ளை உளுத்தம்பருப்பி வறுக்கவும். இதனுடன் பச்சைமிளகாய், மிளகாய்வற்றல், புளியையும் சேர்த்து வதக்கித் தனியே ஆற விடவும்.
4. அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டுப் பொரியலுக்குச் செய்வதற்கு ஏற்ற வண்ணம் கோவைக்காயைப் போட்டு வதக்க வேண்டும்.  உப்பு சேர்த்து, ஓரளவு வெந்ததும் பீர்க்கங்காயைச் சேர்த்து வதக்க வேண்டும், பிறகு அடுப்பை அணைக்கவும்.
5. கொத்தமல்லி(மண் போக அலசி, நீர் இன்றி துடைத்தது) சேர்க்கவும்.
6. எல்லாம் ஆறியதும் வறுத்த பருப்பு, மிளகாய்க் கலவையுடன் கோவக்காய், பீர்க்கங்காயையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
7. பிறகு நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்து துவையலுடன் சேர்க்கவும்.

கூடுதல் தகவல்கள்:

1. நீர் படாததாலும் கைப்படாமல் செய்திருப்பதாலும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இந்தத் துவையல் கெடுவதில்லை.
2. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், தயிர்சாதம், பொங்கல், உப்புமா என்று அனைத்து உணவு வகைகளுக்கும் சிறந்த இணையுணவு இந்தத் துவையல்.
3. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களும் அதிகமாகக் காரம் சேர்க்க விரும்பாதவர்களும் அடிக்கடி செய்யத் தேவையில்லை. பச்சைமிளகாய் காரத்திற்குப் பதில் மிளகாய்வற்றலைச் சேர்த்தும் செய்யலாம்.

 

கீரையின் மருத்துவ குணங்கள்

தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.

முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.

1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.

2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.

3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.

4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.

5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.

6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.

8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.

10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.

11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.

12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.

13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.

14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.

15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.

ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

http://www.eegarai.net/t71266-topic கீரை பற்றிய தகவல்களுக்கு நன்றி.

கீரை பொரித்தகரை

Image

தேவையானவை

கீரை(பசலை/அரை/தண்டு)- ஒரு கட்டு
தேங்காய்- 1/4 மூடி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 4

செய்முறை:

1. கீரையை மண் போக அலசிக் கொள்ளவும்
2. கொதிக்கும் சுடு நீரில் கீரையைப் போட்டு வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
3. துருவிய தேங்காய், சீரகம், மிளகாய்வற்றலைச் சேர்த்து மின்னரைப்பானில் ஆறிய கீரையுடன் சேர்த்து அரைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிசம் செய்யவும்.
5. சுவையும் ஆரோக்கியம் மிகுந்த கீரை பொரித்தகீரையைச் சில நிமிடங்களில் எளிதில் செய்து விடலாம்.
6. எவ்விதப் பொரியலும் பொருந்தும் இக்குழம்பிற்கு அப்பளம் சிறந்த இணை.
7. காரம் அவரவர் விருப்பத்திற்கேற்றாற் போலக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

பீட்ரூட் குருமா

Image

தேவையானவை:

பீட்ரூட்- 2
உருளைக்கிழங்கு- 1
காரட்- 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி – 1 கிண்ணம்
வெங்காயம்- 2
தக்காளி- 1
காலிபிளவர்- ஒரு கிண்ணம்
பட்டர் பீன்ஸ்- ஒரு கிண்ணம்
நூல்கூல்- 1
உப்பு- தேவையான அளவு

வறுத்து அரைக்க:

நெய்- 2 தேக்கரண்டி
தனியா- ஒரு கைப்பிடி
பொட்டுக்கடலை- ஒரு கைப்பிடி
முந்திரிப்பருப்பு- அரைக்கைப்பிடி
சோம்பு- 2 தேக்கரண்டி
பட்டை- 6 இலைகள்
கிராம்பு- 3
ஏலக்காய்- 4
பச்சைமிளகாய்- 5
பூண்டு- 3 பல்லு
தேங்காய்- கால் மூடி

அலங்கரிக்க:

கொத்தமல்லி

செய்முறை:

1. காய்கறிகளைத் தோலகற்றி அலம்பிக்கொண்டு நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பச்சை வாடை போக வதக்கவும், தக்காளி, பிற காய்களையும் சேர்க்கவும். பாத்திரத்தில் காய்கறிகள் மூழ்குமளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக விடவும், பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும்(உப்பு முதலிலேயே சேர்த்தால் வேக நேரமாகும் என்பதால்…), காய்களை நறுக்கிப் போடும் போது பீட்ரூட்டை முதலில் போடலாம்(வேக நேரமாகும் காய்களை முதலில் சேர்க்கலாம்)
3. ஒரு வாணலியில் நெய்யை விட்டு வறுக்கத் தேவையானவற்றில் தனியா, முந்திரிப்பருப்பு, சோம்பு, பொட்டுக்கடலையைச் சிவக்க வறுக்கவும்.
4. பிறகு தனியே தட்டில் வறுத்ததை ஆற விடவும்.
5. பட்டை சோம்பு கூட்டணி, இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டை வறுத்துத் தனியே பாத்திரத்தில் சேர்த்து விட்டு தேங்காயைச் சிவக்க வறுக்கவும்.
6. வறுத்ததை ஆற விடவும்.
7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மின்னரைப்பானில் மைய அரைத்தெடுக்கவும்(சரியாக அரைக்கா விட்டால் தனியா அரைபடாமல் உண்ணும் போது நகம் போலத் தோன்றும்)
8. காய்கள் வெந்ததும் அரைத்ததைக் கொட்டிக் கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான வண்ணமயமான பீட்ரூட் குருமா தயார்.
9. காய்கள் நம் விருப்பத்திற்கேற்பச் சேர்த்துக் கொள்ளலாம்(காலிபிளவர், நூல்கூல் சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை)
10. சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். முந்தின நாள் மீந்த சப்பாத்திகளைத் துண்டுகளாக்கிக் குருமாவுடன் சேர்த்து உண்ண ருசி அதிகம்.

 

 

ஓட்ஸ் இட்லி

Image

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 2 கிண்ணம்
தயிர் – 1/2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/4 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/4 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
துருவிய கேரட்- 1 கிண்ணம்
கொத்தமல்லி

செய்முறை:

1.முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மின்னரைப்பானில் பொடி செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, 1 நிமிடம் கிளறி இறக்கி, அதனைப் பொடி செய்த ஓட்ஸுடன் சேர்க்க வேண்டும்.

3.பிறகு அதில் தயிர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்குக் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இதில் தண்ணீரை சேர்க்கக்கூடாது. உடனடியாக இட்லிகளாக வார்க்காமல் ஒரு மணி நேரம் வெளியே வைக்கவும்.

4. பின்னர் அந்த மாவை இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.

தொட்டுக்கொள்ள சட்னி, துவையல், சாம்பார், மிளகாய்ப்பொடி அருமையாக இருக்கும்.

 

ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை

3

செய்முறை:

ஓட்ஸ்- 1 கப்
பச்சரிசிமாவு- 1 கப்
தேங்காய்த்துருவல்- 1/4 கப்
உப்பு- தேவையான அளவு
காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

தூவ:

மிளகாய்த்தூள்- சிறிதளவு
மிளகுத்தூள்- சிறிதளவு
இட்லி மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

2

1. மின்னரைப்பானில் ஓட்ஸைத் திரித்துக் கொள்ளவும்.
2. திரித்த ஓட்ஸ், அரிசிமாவைப் பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும்.
3. வழக்கமாகக் கொழுக்கட்டைக்குச் செய்வது போல சுடுதண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும்.
4. தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
5. அடுப்பை அணைத்து விட்டு சூடு லேசாக ஆறியதும் உருண்டைகள் ஆக்கவும்.
6. இட்லிப்பானையில் தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக்கட்டைகளை அடுக்கவும்.
7. ஆவியில் வேக விடவும்.
8. அவை வெந்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
9. கொழுக்கட்டை தயாரானதும் ஓரிரு நிமிடங்கள் வெளியே வைத்து சூடு ஆற விடவும்.
10. தாளித்தப் பொருட்களுடன் கொழுக்கட்டைகளைப் பிரட்டி எடுக்கவும்.
11. அப்போது முப்பொடிகளைத்(மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி) தூவிப் பிரட்டவும்.
12. மிகவும் ருசியாக இருக்கும் ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை. அம்மிணிக்கொழுக்கட்டையின் பாணியில் செய்வதால் ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை என்ற நாமகரணம்.

1

ஓட்ஸை வைத்துக் கொண்டு என்னடா செய்வது என்று திருதிருவென விழித்துக் கொண்டிருக்க வேண்டாம். இனி ஓட்ஸில் விதவிதமான சமையலைச் செய்து அசத்தலாம். உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

அம்மிணிக்கொழுக்கட்டை பாணியில் செய்யாமல் தாளித்ததை வதக்கிய கொழுக்கட்டைமாவுடன் சேர்த்தே ஆவியில் வேக வைக்கலாம்.