வாழைப்பூ மசியல்

தேவையான பொருட்கள்

வாழைப்பூ- 1
வேக வைத்த துவரம்பருப்பு – 1/2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
புளி- எலுமிச்சை அளவு
தாளிக்க
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 3
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை- 1 கொஞ்சம்

செய்முறை:

1. வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி (கருக்காமல் இருக்க) மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

2. அடுப்பை ஏற்றி ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் பொடியிட்டு வாழைப்பூவை வேக வைக்க வேண்டும்.

3. வேறொரு வாணலியில் தாளிக்கத் தேவையான பொருட்களைப் போட்டு கடுகு வெடித்ததும் பச்சைமிளகாய், மிளகாய் வற்றலைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

4. வேக வைத்த வாழைப்பூவை தாளித்தவற்றுடன் சேர்த்து வதக்கவும்.
5. ஊற வைத்துள்ள புளித்தண்ணீரை(கெட்டியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்)வெந்து கொண்டிருக்கும் வாழைப்பூவுடன் சேர்த்துக் கொதிக்க விடவும், அடிபிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே வரவும்.

6. குழைவாக வேக வைத்த துவரம்பருப்பை வாழைப்பூவுடன் சேர்த்து கெட்டியாக வரும் பதத்தில் ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

துவரம்பருப்பு பாதி, பாசிப்பருப்பு பாதியாக வேக வைத்தும் செய்யலாம்.

மிகவும் ருசியான சத்தான வாழைப்பூ மசியலைச் சாதத்தில் கலந்து உண்ணலாம், தொட்டுக்க அப்பளம்.

வாழைப்பூவா? துவர்க்குமென்று ஓட்டம் பிடிக்கும் சின்னஞ்சிறுசுகள் கூட பிரியமுடன் மசியலைச் சாப்பிட வருவார்கள்.

வாழைப்பூ உசிலி

Usuli

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ- 1
கடலைப்பருப்பு- 1 டம்ளர்
மிளகாய்வற்றல்- 3
காயம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. வாழைப்பூவை இலைகளை நீக்கி ஒவ்வொரு பூவிலும் உள்ளே இருக்கும் கள்ளனை நீக்கி பூக்களாகச் சேர்த்து பொடியாக நறுக்கி 2 டீஸ்பூன் மோர் கலந்த நீரில் போடவும்(கறுக்காமலும் கசக்காமலும் இருக்கும்).

2. பிறகு வாழைப்பூ ஊற வைத்த தண்ணீரை அலசி விட்டு 1 டம்ளர் நீர் விட்டு வேக வைக்கவும்.

3. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

4. ஊற வைத்த பருப்புடன் உப்பு, காயம், மிளகாய்வற்றல் போட்டு நற நறவென்று அரைத்து ஒரு வாணலியில்(மைக்ரோவேவ் அவனில் 4 நிமிடங்கள்) வேக வைத்து எண்ணெயிட்டு உசிலியாக உதிர்க்கவும்.

5. வெந்த வாழைப்பூவையும் உசிலியையும் ஒன்று சேர்த்து சிறிது எண்ணெயிட்டு கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட சுவையான வாழைப்பூ பருப்புசிலி தயார்.