பீன்ஸ் பொரியல்

Image

தேவையானவை:

பீன்ஸ்- 3 கிண்ணம்
தேங்காய்- 2 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
உப்பு, மஞ்சள்தூள்- தேவையான அளவு

செய்முறை:

1. பீன்ஸை நன்றாக அலம்பி நுனிகளைத் திருத்திக் கொள்ளவும்.
2. பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
3. அடுப்பை ஏற்றி வாணலியில் எண்ணெய் இட்டு தாளிசப்பொருட்களைத் தாளிசம் செய்து கொள்ளவும்.
4. பொடியாக நறுக்கிய பீன்ஸ், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துத் தண்ணீர் சிறிதளவு விட்டு மூடி வைக்கவும்.
5. இடையிடையே கிளறி விடவும்.
6. தயாரானதும் தேங்காய்த் துருவலைப் போட்டு பிரட்டி விடவும்.

Image

இன்னொரு முறை:

மேற்கூறிய முறையிலேயே தேங்காய்த்துருவலிற்குப் பதில் பீன்ஸ் வெந்ததும் 1 தேக்கரண்டி சாம்பார்பொடி போட்டுப் பிரட்ட காரசாரமான பீன்ஸ் பொரியல் தயார்.

பிரெஞ்ச் கட் பீன்ஸ் போல பீன்ஸை நீளவாக்கில் நறுக்கியும் மேற்கூறிய முறையில் பொரியல் செய்யலாம்(பிரெஞ்ச் கட் பீன்ஸ் கடையில் விற்கும், அதை வாங்கிக் குளிர்சாதனப்பெட்டியின் உள்ளறையில் வைத்துக் கொண்டு, அவசர நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்)விலை மலிவாகக் கிடைத்தாலும் இதில் சத்துக்கள் அதிகம்.

பீன்ஸ்-மருத்துவ குணங்கள்:

மனிதர்களுக்குத் தேவையான அனைத்து உயிர்ச் சத்துக்களும் கீரை, காய், கனி, விதை இவற்றில் உள்ளன. இதில் மனிதன் தினமும் உணவுக்காக அதிகம் உபயோகிப்பது காய்களையே..

வேகவைத்த காய்களைத்தான் மனிதக் குடலானது எளிதில் சீரணிக்கும். மற்றும் அதன் சத்துகளை எளிதாக உட்கிரகிக்கும்.அத்தகைய காய்களில் பீன்ஸ் வகையும் ஒன்று. இது அவரை இனத்தைச் சேர்ந்தது. பீன்ஸை இங்கிலீஷ் காய் என்பர். காரணம் ஆங்கிலேயர்கள் தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் காய்களில் இதுவும் ஒன்று.

பீன்ஸ் குச்சி போல் நீண்டு சற்று பருத்து காணப்படும். பயறு வகை காய்களைப் போல் விதைகள் உள்ளிருக்கும்.

பச்சையாகப் பறித்த பீன்ஸில் கலோரி அளவு குறைவாக உள்ளது. இது எளிதில் சீரணமாகக்கூடியது. வைட்டமின், தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது

100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்தும் தன்மை பீன்ஸ்க்கு உண்டு என்று அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்டிராலைக் குறைத்து அதைச் சத்தாக மாற்றுகிறது.

இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை தெளிவடையச் செய்கிறது. அதுபோல் ப்ளேவனாய்டு பாலிபினோலிக் ஆண்டி ஆக்ஸிடென்ட், லூட்டின், ஸியாசாந்தின், கரோட்டின் இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

இது சருமத்தையும், கண்களையும், புறஊதாக் கதிர்களின் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.

இதிலுள்ள வைட்டமின் பி 12 உடன் இணைந்து கருவுற்ற பெண்களுக்கு கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்புகள் ஏதும் பாதிக்காதவண்ணமும் தடுக்கிறது.

பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாது உடலுக்கு வலுவைக் கொடுக்கும் தன்மை கொண்டது.

பீன்ஸைச் சிறிதாக நறுக்கி நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல்புண் ஆறும்.

பீன்ஸைப் பொரியலாகச் செய்து சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த உணவாகும்.

பீன்ஸ் இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இரத்தக் குழாய் அடைப்புகளைப் போக்குகிறது. உயர் இரத்த அழுத்தத்தைச் சீர்செய்கிறது. இதய அடைப்பு, இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, அதிக உடல் எடையைப் போக்குகிறது.

பீன்ஸைக் கொதிக்கவைத்து ஆறிய நீரில் முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

பீன்ஸ் சருமத்தைப் பாதுகாக்கும். வியர்வையைத் தூண்டும்.

தொண்டைப்புண், வறட்டு இருமல், நாவறட்சி இவற்றைப் போக்கும்.

கை, கால் நடுக்கத்தைப் போக்கும்.

நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயினால் உண்டான பாதிப்புகள் குறையும்.

பல் வலியைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து, வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றத்தை சீராக வைத்திருக்கும்.

நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது, பீன்ஸ் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களை அலம்பி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

பீன்ஸைப் பொரியல், அவியல், சாம்பார் எனப் பலவாறு சமைத்து உண்ணலாம்.

பீன்ஸைப் பயன்படுத்தி நீண்ட ஆரோக்கியம் பெறுவோம்.

தகவலுக்கு நன்றி : இன்று ஒரு தகவல் பக்கம்

 

முட்டைக்கோஸ் பொரியல்

Image

தேவையானவை:

பெரிய முட்டைக்கோஸ்- 1
தேங்காய்- 2 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- 4 இலைகள்

 

DSC00617

 

 

செய்முறை:

1. கோஸை அலம்பிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தாளிசப்பொருட்களை எண்ணெய் கொதித்ததும் இட்டு சிவக்க வதக்கவும்.
3. நறுக்கின கோஸைப் போட்டு தண்ணீர் தெளித்தோ சிறிதளவோ விட வேண்டும்(அதிகம் என்றால் குழையும், தண்ணீரே இல்லை என்றால் அடிப் பிடிக்கும்)
4. உப்பு, மஞ்சள் தூள் இட்டு  மிதமான தீயில் வாணலியை  மூடி விடவும்.
5. அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
6. வெந்த பிறகு பச்சைத்தேங்காய்த்துருவலையும் கறிவேப்பிலையையும் போட்டு ஒன்று சேர்த்து அலங்கரிக்கவும்.

முட்டைக்கோஸின் நன்மைகள்:

உடல் இளைக்க உதவும் காய்களில் மிக முக்கியமானது முட்டைக்கோஸ்.உடலில் இருக்கும் வேண்டாத நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவுகிறது.

‘கிரேக்க வயாகரா’ என்று அழைக்கப்படும் கோஸ் ஆண்களின் தாது விருத்திக்கு உதவுகிறது.

முட்டைக்கோஸில் விட்டமின்கள் A,C, மற்றும் E இருக்கின்றன. இவற்றைத் தவிர நார்சத்து, இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம் சத்தும் இருக்கின்றன.

முட்டைக்கோசின் தனித் தன்மையான வாசனைக்குக் காரணம் அதில் இருக்கும் சல்பர். இந்த சல்பர் சத்து கிருமிகளுடன் போராடவும், திசுக்களைக் காக்கவும் பயன்படுகின்றன.

இதில் இருக்கும் வைட்டமின்கள் A மற்றும் E ஆரோக்கியமான சருமத்தையும் கண்களையும் பளபளப்பான கூந்தலையும் கொடுக்கின்றன.

விட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது; இதில் இருக்கும் நார் சத்தும் இரும்புச் சத்தும் நம் செரிமான உறுப்புகளை காக்கிறது.

இன்றைய அறிவியல் வல்லுனர்கள் முட்டை கோஸ் ஒரு விதமான புற்று நோய் வராமல் தடுக்கவும், இதயம் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது என்கிறார்கள்.

உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் இதன் குறைந்த கலோரிகளுக்காக இதனைச் சாப்பிட விரும்புகிறார்கள். ஒரு கோப்பை கோஸில் 15 கலோரிகள் தான் இருக்கிறது. உடலில் இருக்கும் கொழுப்பு குறையவும், இரத்தத்தில் இருக்கும் கொழுப்பு குறையவும் கோஸ் ஒரு அரு மருந்து. அரைக் கோப்பை பச்சைக் கோசில் 10 கலோரிகளே உள்ளது.

பழைய காலத்தில் கேபேஜ் ரசத்தை வயிறு மற்றும் குடல் புண்களுக்கு மருந்தாக குடித்து வந்தனர். சருமத்தில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கக் கோஸ் இலைகளை பச்சையாக அரைத்து பூசி வந்தனர். இதன் இலைகளை எரித்து அந்தச் சாம்பலைக் காயங்களுக்கு வெளியே பூசும் கிருமி நாசினியாக பயன்படுத்தினர்.

மிகுந்த நன்மைகள் அளிக்கும் கோஸைப் பொரியல், கூட்டு, குழம்பில் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சாலட்டாகவும் உண்ணலாம்.

சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் கோஸைத் தவிர்க்க வேண்டும்.

கொத்தவரங்காய் பருப்புசிலி

Image

தேவையானவை

கொத்தவரங்காய்- 3 கைப்பிடி

கடலைப்பருப்பு- 1 டம்ளர்

உப்பு- தேவையான அளவு

காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 2 டீஸ்பூன்

கடுகு- 1 டீஸ்பூன்

வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் – 1

கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்திருக்க வேண்டும்.

2. கொத்தவரங்காயை நன்றாக அலம்பிக் கொண்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

3. கொத்தவரங்காயைத் தனியே நீரிட்ட பாத்திரத்தில் உப்பு போட்டு வேக வைக்க வேண்டும்.

4. வெந்தவுடன் தண்ணீரை நீக்கி காயைத் தனியே வைக்கவும்.

5. ஊற வைத்த பருப்பை மிக்சியில் உப்பு, காயம், இரண்டு மிளகாய் வற்றல் போட்டு நற நறவென அரைத்துக் கொள்ள வேண்டும்.

6. ஒரு வாணலியில் அரைத்த கலவையை இட்டு வதக்க வேண்டும். மைக்ரோ வேவ் வைத்திருப்பவர்கள் அதில் 4 நிமிடங்கள் வைத்து எடுத்து விட்டு வாணலியில் வதக்கலாம். இட்லி குக்கரில் எண்ணெய் தடவி வேக வைத்து எடுத்து உதிர்க்கலாம்.

7.வதக்கி உதிர் உதிராகப் பருப்புகள் உதிர்ந்தவுடன் வேறொரு வாணலியில் தாளிக்கத் தேவையான பொருட்களை வதக்கி உதிரான பருப்பைச் சேர்க்கவும்.

8. அதனுடன் வேக வைத்த காயையும் சேர்க்கவும்.

9. ஒன்று கலந்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு சூடாகப் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

1. கொத்தவரங்காய் வேக வைத்த தண்ணீரைத் தூரக் கொட்டுவது நல்லது. ஏனென்றால் அந்தத் தண்ணீரை உணவில் சேர்த்தால் பித்தம் வரும்.

2. கடலைப்பருப்பிற்குப் பதில் 1 டம்ளர் துவரம்பருப்பு அல்லது 1/2 கப் கடலைப்பருப்பு, 1/2 கப் துவரம்பருப்பு என்ற விகித்ததில் கூட ஊற வைத்து உசிலி செய்யலாம்.

3. கொத்தவரங்காய் மட்டுமில்லாமல் பீன்ஸ், அவரைக்காய், கோஸ், கோவைக்காய், குடமிளகாய், புடலங்காய் போன்ற காய்களிலும் உசிலி செய்யலாம்.

4.காயிலும் உப்பு போட்டு பருப்புசிலியிலும் உப்பு போடுவதால் சிறிதளவு உப்பு போட்டு தேவையென்றால் உப்பு கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

5. மோர்க்குழம்பு அல்லது வத்தக்குழம்பிற்கு பருப்புசிலியை அடித்துக் கொள்ள வேறு ஜோடியே இல்லை எனலாம்.

கொசுறுச்செய்தி:

சூடான சாதத்தில் வத்தக்குழம்பைப் போட்டு அதில் கொஞ்சம் நல்லெண்ணெயிட்டு பிசைந்து பக்கத்தில் பருப்புசிலியைப் பரிமாறி முடிந்தால் உளுந்து அப்பளம் பொரித்தோ சுட்டோ உங்களவருக்குப் பரிமாறிப் பாருங்களேன், அப்புறம் உங்களுக்குக் கிடைக்கும் சமையல் ராணி பட்டம் தான்(ரொம்பக் கவனம்: வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிமாறும் முன் உப்பு, காரம் இன்ன பிற விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பரிமாறுவது உங்கள் சாமர்த்தியம்)

 

கொத்தவரங்காயின் நன்மைகள்:

 
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

 
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

 
இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

 
இது சிறுநீரைப் பெருக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது. 

 
இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்.

 
தேகச்சூட்டை அதிகரிக்கும் குணம் இதற்கு உண்டு என்பதால் இதை அளவோடு எடுத்துக்கொள்வதுதான் நல்லது.

வாழைக்காய்ப் புட்டு

Image

தேவையானவை:

வாழைக்காய்- 2
உப்பு-தேவையான அளவு
காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்- 3
கறிவேப்பிலை- 5,6 இலைகள்

செய்முறை :

1. வாழைக்காயை நன்றாக அலம்பிக் கொள்ளவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் அளவிற்கு அல்லது வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை வேக வைக்கவும்.
3. வாழைக்காய் ஓரங்களைச் சிறிது நறுக்கி விட்டு 2 துண்டுகளாக நறுக்கி வெந்நீரில் போடவும்.
4. வாழைக்காய் பாதி வெந்தும் வேகாத பதத்தில் எடுத்து ஆற விடவும். வாழைக்காய் சூடு ஆறினவுடன் தோலைச் சீவி விட்டு வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, வெள்ளைஉளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு. வாழைக்காய் துருவியதைப் போட்டு உப்பு போட்டு வதக்கவும்.
6. லேசாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். துருவப்பட்டிருப்பதால் சீக்கிரம் அடி பிடிக்கவும் வாய்ப்பிருப்பதால் அடுப்பினருகிலேயே இருந்து கிளறி வரவும்.
7.காயம் போட்டு நன்றாகக் கிளறி விடவும். புட்டு வெந்தவுடன் உப்பு சரியாக இருக்கிறதா? புட்டு தயாராகி விட்டதா என்று சோதிதுக் கொண்டு வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. ஒரே மாதிரி பொரியல் செய்து அலுத்தவர்களுக்கும் வித்தியாசச் சுவை விரும்பிகளுக்கும் இது அருமையான மாற்று இணை.
2. வாழைக்காயைப் பிடிக்காதவர்களுக்குக் கூட புட்டு பிடிக்கும்.
3. இம்முறையில் செய்யும் வாழைக்காய், தோல் பொரியலுக்கு உதவாது.
4. வத்தக்குழம்பு, சாம்பார், மோர்க்க்குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்குப் பொருத்தமான பொரியல்.

வாழைக்காய்த்தோல் பொரியல்

Vaazaikkai thol poriyal

 

 

 

தேவையானவை:

 
வாழைக்காய் தோல்- 2 டம்ளர்
சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

 
செய்முறை:

 
1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும். வாழைக்காயைப் பொரியலாகச் செய்வது போல் அதன் தோலையும் வீணாக்காமல் பொரியலாகச் செய்து அசத்தலாம்.
2. மிகவும் பொடியாக வாழைக்காய் தோலைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும்.
4. வாழைக்காய் தோல்களைத் தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வேக விடவும்.
5. தோல் வெந்ததும் சாம்பார்பொடி, காயம் சேர்த்து திறந்து வைத்துக் கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் இட்டு வரவும்.
6. காய் வெந்தவுடன் பாத்திரத்திற்கு மாற்றவும். துவர்ப்புச் சுவையுடன் இருக்கும் இந்த வித்தியாசமான பொரியல் மோர்க்குழம்பு, தீயல், சாம்பார், ரசம் என்று எவ்வகைக் குழம்பு, ரசத்திற்கும் சரியான ஜோடியாக இருக்கும்.

வாழைக்காய் பொரியல்

Image

 

தேவையானவை:

 
வாழைக்காய்- 1
சாம்பார்பொடி- 2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
காயம்- சிறிதளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு

 
செய்முறை:

 
1. வாழைக்காயை நன்றாக அலம்பி, தோலைச் சீவி தனியே வைத்துக் கொள்ளவும்.
2. பிடித்த வடிவத்தில் வாழைக்காயைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
3. அடுப்பில் எண்ணெய்யிட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொண்டு கடுகு வெடித்தவுடன் சீரகத்தைப் போட்டு வதக்கி விடவும்.
4. வாழைக்காய் துண்டுகளை தாளித்தவற்றுடன் போட்டு உப்பு போட்டு 1/4 டம்ளர் நீரிட்டு மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும்.
5. பாதி வெந்ததும் சாம்பார்பொடி, காயம் சேர்த்து திறந்து வைத்துக் கிளறி வரவும். அடிப்பிடிக்காமல் இருக்க எண்ணெய் இட்டு வரவும்.
6. வறுவலாகத் தயாரானதும் அடுப்பை அணைத்து விட்டு பொரியலை வேறு பாத்திரத்திற்கு மாற்றிப் பரிமாறவும்.

 
கூடுதல் குறிப்புகள்:

 
1. சாதா நீரில் வேக வைப்பதை விட புளித்தண்ணீரைக் கரைத்து அதை விட்டு வேக வைத்து பொரியல் செய்தால் புளிப்பு வாழைக்காய் வறுவலாக ருசி அருமையாக இருக்கும். புளி நீரில் வேக வைத்தால் பொரியல் ஆக கூடுதல் நேரம் பிடிக்கும்.
2. உடல் எடை கூட விரும்புவோர் வாழைக்காயை உணவில் சேர்த்து வந்தால் எடை கூடும்.வாழைக்காயைப் பொரியல் செய்யும் போது இஞ்சி, பூண்டு விழுதையும் வதக்கிச் சேர்த்தால் வாயுத்தொல்லை இருக்காது. இந்த குறிப்பளித்தத் தோழி கல்பனாவிற்கு நன்றி.
3. வாழைக்காய் தோலைப் பத்திரப்படுத்தி அதிலும் பொரியல் செய்து அசத்தலாம்.

பீட்ரூட் பொரியல்

Image

தேவையானவை:

பீட்ரூட் – 2
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
மிளகாய்வற்றல்- 3
காயம்- சிறிதளவு
தேங்காய்த்துருவல்- 3 டீஸ்பூன்

செய்முறை:

1. பீட்ரூட்டை அலம்பிக் கொண்டு தோலை அகற்றவும்.
2. அரிப்பில் துருவிக் கொள்ளவும்.
3. தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளிசம் செய்து பீட்ரூட்டைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
4. துருவி இருப்பதால் பீட்ரூட் சீக்கிரம் வெந்துவிடும்.
5. வெந்த பீட்ரூட்டுடன் 3 டீஸ்பூன் தேங்காய்ப்பூவைச் சேர்த்து அலங்கரிக்கவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. பீட்ரூட்டைத் துருவச் சிரமமாக இருக்கும் தோலை அகற்றிய பிறகு மைக்ரோவேவ்வில் ஒரு நிமிடத்திற்கு வைத்து எடுத்தால் துருவுவதற்குச் சுலபமாக இருக்கும்.
2. இதே முறையில் கேரட், கோஸ் பொரியலையும் செய்யலாம். கோஸ் சிறிதாக ஆகி விடும் போது பீட்ரூட்,கோஸ் துருவி மேற்கூறிய முறையில் பொரியல் செய்யலாம். பீட்ரூட்டுடன் கேரட்டையும் துருவி இம்முறையில் செய்யலாம்.
3. இனிப்புச்சுவை இருப்பதால் மிளகாய்வற்றலை அதிகமாகப் போடுவது பொரியலிற்குக் காரச்சுவையைத் தரும். மிளகாய் வற்றல் நிறமும் பீட்ரூட் நிறமும் ஒரே மாதிரி இருப்பதால் உண்ணும் போது மிளகாய்வற்றலை அகற்றி விட்டு உண்ண வசதியாக நீளமாகவே மிளகாய்வற்றலைத் தாளிசம் செய்யலாம்.

பீட்ரூட்டின் நன்மைகள்:

பீட்ரூட்டில் நிறைய உணவுச் சத்துகள் உண்டு. விட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலாசின், பீட்டா கரோட்டின், மாவுச்சத்து, இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளன. பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உண்டோ, அத்தனையும் அதன் இலைகளிலும் இருப்பதுதான் இதன் விசேஷம். இலைகளைப் பொடியாக நறுக்க வேண்டாம். அதிலிருக்கும் விட்டமின் சி அழிந்துவிடும். வேகும் போது மூடி போட்டு வேகவிட வேண்டாம். ஏனெனில், இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் ஆவியாக வெளியேற வேண்டும். அப்போது இலைகளிலுள்ள அதிகமான சுண்ணாம்புச் சத்தை உடல் கிரகிப்பதைத் தடுக்க முடியும்.

பீட்ரூட்டில் இருக்கும் முக்கியமான தன்மை இதில் கொழுப்புச் சத்து கிடையாது. இதை ஒரு காலத்தில் ஐரோப்பாவில் புற்றுநோய்த் தடுப்பாக பயன்படுத்தினார்கள். இதன் சிவப்பு வண்ணத்தில் (பீட்டா கரோட்டின்) புற்றுநோய் தடுப்புத் தன்மை சேர்ந்திருப்பதால் புற்றுநோயுடன் போராடும் சக்தி உள்ளது. மேலும் பீட்ரூட் நமது உடலின் ஆக்ஸிஜன் உறிஞ்சும் சக்தியை அதிகரிக்கிறது. இதே சிவப்பு நிறத்தில் ஃபோலாசின், பீட்டா கரோட்டின் இருப்பதால், பெண்களின் உடல்நலத்துக்கு மிகச் சிறந்தது. முக்கியமாக கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் நிறைய இருக்கின்றன. மலச்சிக்கலை நீக்கும், ரத்தசோகையைப் போக்கும் சக்தி பீட்ரூட்டிற்கு உண்டு. புற்று நோய், பெண்களைத் தாக்கும் மார்பகப்புற்றுநோய் வராமல் காக்கும் வல்லமை பீட்ரூட்டிற்கு இருப்பதால் அனைவரும் ஒதுக்காமல் அடிக்கடி பீட்ரூட்டை உணவில் சேர்த்து வர வேண்டும்.

வெண்டைக்காய் பொரியல்

Image

தேவையானவை

1. வெண்டைக்காய்- 20
2. உப்பு- தேவையான அளவு
3. தயிர்- 1 டீஸ்பூன்
4. எண்ணெய்- 1 டீஸ்பூன்
5. கடுகு- 1 டீஸ்பூன்
6. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
7. மிளகாய்வற்றல்- 2
8. கறிவேப்பிலை- 1 இணுக்கு
9.காயம்- சிறிதளவு
10.தேங்காய்த்துருவல்- 2 டீஸ்பூன்

செய்முறை:

1. வெண்டைக்காயை நன்றாக அலம்பிக் கொண்டு வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். அதனுடன் தயிரைச் சிறிது சேர்க்கவும். காயத்தையும் போடவும்.
3.வெண்டைக்காய் வதங்கினவுடன் தேங்காய்பூவைப் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெண்டைக்காயை ஐந்தே நிமிடங்களில் தயார் செய்து விடலாம். அறிவு வளர்ச்சிக்கு உதவும்.
2. வெண்டைக்காயை வட்டமாகப் பொடியாக நறுக்குவதற்குப் பதிலாக நீளமாக நறுக்கியும் செய்து பார்க்கலாம்.
3. வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை உடையது என்பதால் தயிர் சேர்ப்பது கொழகொழப்பை எடுத்து விடும். அதிகத் தயிர் விடக் கூடாது.
4. தயிருக்குப் பதில் புளித்தண்ணீர் சிறிது விட்டும் செய்யலாம்.
5. காரம் சேர்க்க விரும்புவோர் மிளகாய் வற்றலைத் தாளிக்காமல் வெண்டைக்காய் வதங்கும் போது சிறிது காரப்பொடி சேர்த்து நீண்ட நேரம் வதக்கி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வெண்டைக்காய் வறுவலாகவும் செய்து உண்ணலாம்.

 

வெண்டைக்காயின் சத்துக்கள்:

 
பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும். கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து குடல் அழற்சி, குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.இது வறண்ட குடலைப் பதப்படுத்தும்.

 
குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இதில் வைட்டமின் `சி’, `பி’ மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். மேலும், வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவு ஆண்களுக்கு விந்துவைக் கெட்டிப் படுத்தி உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றைப் பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்றுவலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக்காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.

முள்ளங்கி பொரியல்

Image

தேவையானவை:

முள்ளங்கி- 1
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
சாம்பார்பொடி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
காயம்- சிறிதளவு

 
செய்முறை:

 
1. முள்ளங்கியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளிசம் செய்து விட்டு முள்ளங்கியையும் சேர்த்து உப்பு போட்டு சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
3. பாதி வெந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு வதக்கவும்.
4. அடிப்பிடிக்காமல் எண்ணெய் விட்டுக் கிளறிக் கொண்டே வரவும்.
5. முள்ளங்கி தயாரானதும் குழம்பு, ரசத்துடன் பரிமாறவும்.

 
கூடுதல் குறிப்புகள்:

 
1. முள்ளங்கியைக் குழம்பில் போடுவது மட்டுமில்லாமல் இவ்வகையில் பொரியல் செய்தும் நார்ச்சத்தைப் பெறலாம்.
2. முள்ளங்கியை நறுக்காமல் துருவிக் கொண்டு இதே முறையில் பொரியல் செய்து கொள்ளலாம்.
3. துருவிச் செய்யும் முள்ளங்கி பொரியலில் சாம்பார் பொடி காரத்திற்குச் சேர்ப்பதற்குப் பதில் மிளகாய்வற்றலைத் தாளிக்கும் போது சேர்த்து துருவினதைப் போட்டு வதக்கி பொரியலைப் பரிமாறும் முன் தேங்காய்த்துருவலை இட்டும் செய்யலாம். மிளகாய்வற்றலிற்குப் பதில் பச்சைமிளகாயைச் சேர்த்தும் செய்ய வித்தியாசமான ருசி கிடைக்கும்.

 

முள்ளங்கியின் சத்துக்கள்:

 
முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலிற்குத் தேவையான சத்துக்களும் தாதுப்பொருட்களும் இருக்கின்றன. மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா பிரச்சினைகளைத் தீர்க்கிறது.

 
முள்ளங்கிச்சாறுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் சளித்தொந்தரவுகள், மலச்சிக்கல் நீங்கும்.உடலிற்குக் குளிர்ச்சியைத் தரும் இயல்புடைய முள்ளங்கி, சிறு நீர் உபாதைகள் இருப்பவர்களின் பிரச்சினைகளைப் போக்கி இயல்பாக்குகிறது.

 
ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே, வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம். முள்ளங்கியை அடிக்கடி சேர்த்தால் வயிற்றுப்பொருமல், எரிச்சல் வரும் வாய்ப்பிருப்பதால் அளவாக உண்ணலாம்.