அவல் பொங்கல்

Image

தேவையானவை:

அவல்- 1 1/2 டம்ளர்
பாசிப்பருப்பு- 1/2 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
இஞ்சி- 1 துண்டு
முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும். அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக வைக்கவும்.
2. அடுப்பை ஏற்றி ஒரு வாணலியில் எண்ணெய், நெய் இட்டுத் தாளிக்கக் கொடுத்தப் பொருட்களைப் போட்டு வறுக்கவும்.
3. வறுத்தனவற்றுடன் அவல் சேர்த்து வதக்கவும்.
4. குக்கரில் வெந்து வைத்திருக்கும் பாசிப்பருப்பினை அவல், தாளிசக்கூட்டணியுடன் சேர்த்து உப்பு, காயம் சேர்த்து 3 டம்ளர் அளவு தண்ணீரைச் சேர்க்கவும். கிளறி விடவும்.
5. அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
6. பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. அவல் பொங்கல் செய்வதற்கு எளிமையான ருசியான உணவு வகை.
2. அரிசி தவிர்க்க விரும்புவர்களுக்கு அருமையான மாற்று உணவு.
3. திடமான அவலைப் பயன்படுத்த வேண்டும்.
4. அவரவர் குடும்பத்திற்கு ஏற்பக் காரம் கூட்டியும் குறைத்தும் செய்து கொள்ளலாம்.
5. அலுவலகம்/பள்ளி/கல்லூரி சென்று வரும் குடும்பத்தினரையும் திடீர் விருந்தினரையும் அசத்த அருமையான உணவு.
6. கோசாலி மாங்காய் ஊறுகாய், தக்காளி, குடமிளகாய்ச்சட்னி, சாம்பார், இடிதுவையல்(சம்மந்திப்பொடி) வகையறாக்கள் தகுந்த இணைகள்.

 

Advertisements

பால் சர்க்கரைப்பொங்கல்

Image

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1கப்
பால் -4 கப்
தண்ணீர் -4கப்
வெல்லம் -2 கப்
நெய் -2 தேக்கரண்டி
முந்திரி -10
திராட்சை -10

செய்முறை:

1. அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிவந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும்.
2. அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும்.
3. அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
4. அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன், வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, அரிசியில் ஊற்றவும்.
5. தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்துப் போடவும்.

வேறொரு முறை:

1. அரிசியுடன் ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு சேர்த்துத் தண்ணீர் மிகுதியாகவும் பால் குறைவாகவும் வைத்து மிதமான தீயில் 4, 5 விசில்களுக்கு வேக விடவும்.

2. வெந்த அரிசி, பருப்புக் கலவை ஆறினதும் மின் அரைப்பானில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3. பிறகு மேலே குறிப்பிட்ட வெல்லக்கரைசலைச் சேர்த்து நெய்யில் வதக்கிய முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலக்கவும்.

4. வெண்ணெயாய் இருக்கும் பால் பொங்கல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பத்தக்க வகையில் இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல்

Image

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 கப்
பாசிப்பருப்பு -1/2 கப்
தண்ணீர் -4 கப்
வெல்லம் -21/2 கப்
ஏலக்காய்பொடி -1/2 தேக்கரண்டி
நெய் -3 தேக்கரண்டி
முந்திரி -10
திராட்சை -10

செய்முறை:

1.பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் அலம்பி 10 முதல் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு குக்கரில் ஊற வைத்த அரிசி, பருப்பு, தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
3. வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
4. குக்கரைத் திறந்து அரிசி, பருப்பை நன்கு மசித்துக் கொண்டு, வடிகட்டி வைத்துள்ள வெல்லத் தண்ணீரை சேர்த்து சிறிய தீயில் வேக வைக்கவும்.
5. ஒன்று சேர்ந்து வெந்தவுடன் ஏலக்காய் பொடி போட்டுக் கிளறி, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
6. விருப்பமுள்ளவர்கள் தேங்காய்த் துருவலோ கீறிப் போட்டோ சேர்க்கலாம்.

காய்கறிப் பொங்கல் & வெந்தயக்கீரைப் பொங்கல்:

Image

காய்கறிப் பொங்கல்

தேவையானவை :

பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கேரட்- 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப

தாளிக்க:
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – துண்டு
லவங்கம் – 2
ஏலக்காய் – 1
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை :

1. அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேருங்கள்.
2. சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
3. வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
4. நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி காய்கறிக்கலவையைச் சேருங்கள்.
5. சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
6. கமகம காய்கறிப் பொங்கல் தயார்.

வெந்தயக்கீரைப் பொங்கல்:

Image

மேற்கூறிய முறையிலே காய்கறிகளுக்குப் பதில் அலம்பி ஆய்ந்து வேக வைத்த வெந்தயக்கீரையைச் சேர்த்து வித்தியாசமான வெந்தயக்கீரை பொங்கலைப் பரிமாறலாம். புதுமை விரும்பிகளுக்கும் ஒரே மாதிரி செய்து அலுத்தவர்களுக்கும் மாற்று வழி.

இன்னொரு முறையில் கோதுமை ரவை, பாசிப்பருப்பு, பசலைக்கீரையைப் பயன்படுத்தி ரவாப் பொங்கல் செய்யும் முறையில் கோதுமை ரவை கீரைப் பொங்கலைச் செய்து அசத்தலாம்.

மசாலா சேமியா பொங்கல்

Image

சேமியா – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
நெய் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
முந்திரி – 10
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான மசாலா பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 2
மல்லி விதை – ஒரு தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
மிளகு – 8
பட்டை – ஒன்று
இலவங்கம் – 2
ஏலக்காய் – 2

 

செய்முறை:
1. சேமியாவுடன் பாசிப்பருப்பை வறுத்து தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 4 விசிலிற்கு வேக விடவும்.
2. காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியை லேசாக வறுத்து பொடித்து கொள்ளவும்.
3. நெய் சூடாக்கி மீதமுள்ள மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து முந்திரி சேர்த்து இறக்கவும்.
4. வேகவைத்த சேமியாவில் உப்பு மற்றும் திரித்த பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
5. தாளித்த பொருட்களை சேமியாவில் கொட்டி கிளறி சட்னியுடன் பரிமாறவும்.

சேமியா ரவா பொங்கல்

Image

தேவையான பொருள்கள்:

சேமியா-2 கப்
ரவை-1/2 கப்
பாசிப்பருப்பு-1/2 கப்
மஞ்சள் தூள்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

நெய்-2 தேக்கரண்டி
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
முந்திரி-10
இஞ்சி-ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை

செய்முறை:

1. வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

2. அதே வாணலியில் சேமியாவையும்,ரவையையும் தனித்தனியாக‌ச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.

3.பாசிப்பருப்பை நன்றாக அலம்பி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.

4. ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.

5.பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.

6. தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.

7.மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து,கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.

8.சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

9. ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.

10.ருசியான ரவா சேமியா பொங்கல் தயார். சாம்பார் அருமையான இணை.

ஓட்ஸ் பொங்கல்

Image

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் – இரண்டு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

நெய் – 1 அல்லது 2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
முந்திரிப்பருப்பு – சிறிது (விருப்பப்பட்டால்)

செய்முறை:

1. வாணலியில் ஓட்ஸ், பாசிப்பருப்பு ஆகியவற்றை, தனித்தனியாக இலேசாக வறுத்தெடுக்கவும்.

2. இஞ்சியின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும் மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

4. குக்கரில், வறுத்த ஓட்ஸ், பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீரை விட்டு, மூடி, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

5. சற்று ஆறியவுடன், குக்கரைத் திறந்து நன்றாக மசித்து விடவும்.

6. வாணலி ஒன்றில் நெய்யை விட்டுச் சூடாக்கவும். நெய் சூடானவுடன், அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகு, சீரகப் பொடியைப் போட்டு, அதை பொங்கலின் மேல் ஊற்றிக் கிளறி விடவும்.