உளுத்தம் கொழுக்கட்டை

Image

தேவையானவை:

 

பச்சரிசி மாவு – 3 டம்ளர்
உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் (100 கிராம்)
மிளகாய்வற்றல் – 6
தேங்காய் – கால்மூடி
உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை:

 

பூரணம் செய்ய:

 

1. உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து கொஞ்சம் நீர் சேர்த்து மிளகாய்வற்றலுடன் உப்பும் சேர்த்துக் கரகரப்பாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த உளுந்தை இட்லித்தட்டுகள் அல்லது மைக்ரோவேவ்வில்(5 நிமிடங்கள்) வேக விட்டு வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி உதிர்க்கவும்..
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பச்சைமிளகாய் சின்ன சின்னதாக நறுக்கி, இஞ்சி போட்டு தாளித்துக் கொள்ளவும்.
4. பிறகு தாளித்ததில் உளுத்தம் மாவைக் கொட்டி கிளறி பொல பொல வென்று பூரணம் தயார் செய்யவும். உளுத்தம்மாவில் தேங்காய்த்துருவலையும் சேர்க்கவும்.

 

மேல்மாவு செய்ய:

 

1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
2. பச்சரிசி மாவைப் பச்சை வாடை போக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி கொதித்தத் தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
3. பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலைஅல்லது ஜிப்லாக் கவரில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.

 

கொழுக்கட்டை செய்ய:

 

1. தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை நடுவில் வைத்து மாவை சமமாக மடித்து ஓரங்களை ஒட்டவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டைகளாகத் தயாரித்துக் கொள்ளவும்.
2. பிறகு இட்லி குக்கரில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
3. சுவையான, ஆரோக்கியமான உளுத்தம் கொழுக்கட்டை தயார். எலும்புகளைப் பலப்படுத்தும் உளுத்தம் கொழுக்கட்டையை மாதம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும்.
4.வரலெட்சுமி நோன்பின் போதும் நவராத்திரி காலங்களிலும் இவ்வகைக் கொழுக்கட்டைகளை நைவேத்தியமாக்கிப் பிறருக்கும் வழங்கலாம்.

அவல் கொழுக்கட்டை

Image

தேவையானவை:

வெள்ளை அவல் அல்லது சிவப்பு அவல்- 2 டம்ளர்
தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
காயம்- சிறிதளவு
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு

செய்முறை:

1. அவலைத் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.
2. ஊறிய அவலைக் கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துப் பிசையவும்
3. அடுப்பை ஏற்றி வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு மசித்த அவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்
4. தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கி ஆற விட்டு உருண்டைகள் பிடித்து இட்லி குக்கரில் வேக விடவும்(மற்ற கொழுக்கட்டைகள், இட்லி போல அதிக நேரங்கள் வேக விடத் தேவையில்லை, ஐந்தே நிமிடங்கள் போதுமானது)
5. கொழுக்கட்டைகள் வெந்ததும் தக்காளிச்சட்னி அல்லது புதினாச்சட்னியுடன் பரிமாறவும். மிளகாய்ப்பொடி கூட அருமையான இணை.
6. வெங்காயம், கேரட் துருவிப் போட்டும் செய்யலாம்.
7. வெறும் தண்ணீரில் ஊற வைக்காமல் புளித்தண்ணீரில் ஊற வைத்தால் புளி அவல் கொழுக்கட்டை, புளி நீரில்லாமல் மோரில் ஊற வைத்துச் செய்தால் மோர் அவல் கொழுக்கட்டை.

கூடுதல் குறிப்புகள்:

1. செய்வதற்கு எளிமையான மற்ற கொழுக்கட்டைகள் போல அதிக மெனக்கெடல் இல்லாத வித்தியாசமான சிற்றுண்டி.

2. திடீர் விருந்தினரைச் சமாளிக்கவும் குழந்தைகளின் ரசனைக்குத் தீனி போடவும் ஏற்றது.

3. உருண்டைகளாகப் பிடிக்காமல் பிடி கொழுக்கட்டையாகவும் பிடித்து வைக்கலாம்.

4. வெள்ளை அவலில் ஒரு நாளும் சிவப்பு அவலில் ஒரு நாளும் செய்து பார்க்கலாம்.

5. நவராத்திரியின் போதோ பண்டிகை நாட்களிலோ நைவேத்தியத்திற்கு ஏற்றது, மடி சமையலின் போதும் செய்வதற்கு நல்லது,

காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

Image

தேவையான பொருட்கள்:

பரோட்டாக்கள் – 10
வெங்காயம்- 2
நாட்டுத் தக்காளி(பெரியது) – 1
குடமிளகாய்(பெரியது)௧
காரட்- 1
பட்டாணி- 1 டம்ளர்
கொண்டைக்கடலை சுண்டல்- 1 டம்ளர்
பூண்டு- 2 பல்லு
எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்
கொத்தமல்லி- அலங்கரிக்க
காரப்பொடி- 2 டீஸ்பூன்
கேஸரி கலர்(சிவப்பு நிற)- 1/2 டீஸ்பூன்
பட்டை – 8
சோம்பு- 2 டீஸ்பூன்
ஏலக்காய்- 2
கிராம்பு- 6
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

1.பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3.காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4.அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கினதும் தக்காளி,குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை.
6.காரட்,பச்சைப் பட்டாணியையும் சேர்த்து உப்பு, காரப்பொடி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.
7.மசாலாக்குத் தேவையான பொருட்களைப் பச்சையாகவே திரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
8.காய்கறிகள் வெந்தவுடன் மசாலாப்பொடி, சிவப்பு நிறமூட்டி சேர்த்து நன்றாகக் கிளறவும்.
9.இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து காய்களுடன் ஒன்று சேர்க்கவும்.
10.காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.
11.பரோட்டா துண்டுகளைக் காய்கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
12.அலங்காரத்திற்கு கொத்தமல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1.எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெஜிடபிள் பரோட்டாக்களைச் செய்யலாம்.
2.காரப்பொடிக்குப் பதிலாக கடலைப்பருப்பு(1 டீஸ்பூன்),தனியா(1 டீஸ்பூன்),வெந்தயம்(5),மிளகாய்வற்றல்(4 டீஸ்பூன்) ஆகியனவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆற விட்டுப் பொடித்து காய்களில் சேர்த்தும் செய்யலாம். இவ்வகை முறையில் காரப்பொடியால் காரம் கூடி விட்டது போன்ற பதட்டங்களைத் தவிர்க்கலாம்.
3.காரப்பொடிக்குப் பதில் வீட்டில் தயாரித்த சாம்பார் பொடியையும் பயன்படுத்தலாம்.
4.எலுமிச்சைச்சாற்றைக் காய்கறிகள் வதங்கினதும் பரோட்டாக்களைச் சேர்க்கும் முன்பு தான் போட வேண்டும்.
5.கடைகளில் மசாலாப்பொருட்களுக்கு என்றே கறிமசலாப்பொடி என்று தனியே ஒரு பேக் கிடைக்கும்,அதை வாங்கித் திரித்தும் பயன்படுத்தலாம்.
6.இவ்வகை பரோட்டாக்களுக்கு ஆனியன் ரெய்த்தா,வெஜிடபிள் ரெய்த்தா,வெள்ளரிப் பச்சடி போன்றன சிறந்த இணைகள்.

ஆனியன் ரெய்த்தா

Image

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்- 2
பச்சைமிளகாய் – 2
தயிர்- 6 டீஸ்பூன்
கொத்தமல்லி- தேவையான அளவு

செய்முறை:

1.வெங்காயம்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி ஆகியனவற்றைத் தனித்தனியே மிகவும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வெங்காயம்,பச்சைமிளகாயுடன் தயிரைச் சேர்த்து சிறிது உப்பையும் போட்டு கொத்தமல்லியை அலங்கரிக்க நிமிடங்களில் ரெய்த்தா தயார்.

 

மூங் தால் மசாலா பரோத்தா

Image

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கிண்ணம்
பாசிப்பருப்பு- 1/2 கிண்ணம்
தனியாப்பொடி- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
சீரகம்- 1/2 தேக்கரண்டி
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறிதளவு
நறுக்கின கொத்தமல்லி- 3 தேக்கரண்டி

செய்முறை:

1. பாசிப்பருப்பை இரண்டு மணி நேரங்கள் ஊற விடவும், தண்ணீரை நீக்கி அலசி மின்னரைப்பானில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் அரைத்த கலவை, உப்பு, சீரகம், தனியாத்தூள், மிளகாய்த்தூள்,கரம் மசாலாத்தூள், இஞ்சித்துருவல், பெருங்காயம், கொத்தமல்லி ஆகியனவற்றைக் கலந்து தண்ணீர் சிறிதளவு விட்டு மாவாகப் பிசையவும்.

3. இருபது நிமிடங்கள் மாவை ஊற விடவும்.

4. இப்போது மாவை உருண்டைகளாக உருட்டி மசாலாவை உள்ளே வைத்துப் பரோத்தாக்களாக இடவும், இதையே எண்ணெய் தடவி மடக்கி முக்கோண வடிவிலோ சதுர வடிவிலோ செய்து கொள்ளலாம்.

5. சப்பாத்திக்கல்லில் இட்டதைப் போட்டு இரு பக்கமும் சிவக்க எடுத்து நெய் அல்லது எண்ணெயைத் தடவிப் பரிமாறவும்.

சன்னா தால் பரோத்தா

Image

தேவையானவை:

மைதா மாவு- 1 கிண்ணம்
கோதுமை மாவு- 1 கிண்ணம்
பால்- கால் கிண்ணம்
உப்பு- சிறிதளவு
வெண்ணெய் அல்லது உருக்கிய நெய்- 1 தேக்கரண்டி

பூரணம் செய்ய:

கடலைப்பருப்பு- 3/4 கிண்ணம்
துருவின வெங்காயம்
பச்சைமிளகாய்- 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 2 தேக்கரண்டி
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி
உப்பு- சிறிதளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி

Image

செய்முறை:

1. மைதா மாவு, கோதுமைமாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று கலந்து உப்பு, வெண்ணெய் அல்லது நெய் போட்டுப் பிசையவும்.

2. 15 நிமிடங்கள் மாவை ஊற விடவும்.

3. பூரணம் செய்ய, ஒரு மணி நேரம் கடலைப்பருப்பை ஊற வைக்கவும். அதிக நீரில் பருப்பை வேக விட்டுக் குழைவாக வெந்து எடுக்கவும்.

4. வாணலியில் எண்ணெயிட்டு தால் விட்டுக் கெட்டியாகும் வரை குறைந்த தீயில் வதக்கவும். துருவின வெங்காயம், துருவின இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், கொத்தமல்லியைச் சன்னா தாலுடன் கலக்கவும்.ஆற விடவும்.

5. மாவை உருண்டைகளாக்கி பூரணத்தை உள்ளே வைத்து மடிக்கவும். இடவும். போளிக்குச் செய்வது போல் தான்.

6. அடுப்பை ஏற்றிச் சப்பாத்திக்கல்லில் இரு பக்கமும் திருப்பிச் சிவக்க எடுக்கவும்.

7. எண்ணெய் தடவிப் பரிமாறவும்.

 

 

 

கோஸ் பரோத்தா

Image

தேவையானவை;

கோதுமை மாவு- 1 1/2 கிண்ணம்
துருவின முட்டைக்கோஸ்- 1 கிண்ணம்
பச்சைமிளகாய்- 1
சீரகம்- 1 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. கோதுமை மாவைச் சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.

2. வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் துருவின கோஸூடன் சீரகம், பொடியாக நறுக்கின பச்சைமிளகாய், காரப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து ஈரம் ஓரளவிற்குப் போக வதக்க வேண்டும்.

3. பிறகு பூரணத்தைச்(ஈரம் போகப் பிழிந்து) சப்பாத்தி மாவு உருண்டைக்குள் வைத்துப் பரோத்தாக்களாக இடவும்.

4. சப்பாத்திக்கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி வெந்தவுடன் எண்ணெய் தடவிப் பரிமாறவும்.

5. தால், குருமா, கொத்ஸூ வகைகள் இணை உணவுகள்.

கூடுதல் குறிப்புகள்:

1. கோஸில் பொரியல், கூட்டு என்று செய்திருப்போம், இது வித்தியாசமான ருசியான சிற்றுண்டி.

2. மேற்கூறிய முறையிலேயே பூரணமாகச் செய்யாமல் கோதுமை மாவுடன் மேலே குறிப்பிட்டவற்றை ஒன்றாகக் கலந்தும் சப்பாத்தி போலச் செய்யலாம்.

3. வித்தியாச விரும்பிகளுக்கும் ஒரே மாதிரி சிற்றுண்டி செய்து அலுத்தவர்களுக்கும் இது மாறுபட்ட வகை.

 

கார்ன் பரோத்தா

Image

தேவையானவை:

சோளம்(கார்ன்)- 1/4 கிண்ணம்
கோதுமை மாவு- 1/2 கிண்ணம்
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி- சிறிதளவு

Image

செய்முறை:

1. சோளம், பச்சமிளகாய், சீரகத்தை நீர் அதிகம் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
2. கோதுமை மாவுடன், அரைத்த கலவையைப் போட்டு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, காரப்பொடி, எண்ணெயைச் சேர்த்துப் பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3. பிறகு சப்பாத்திக்கல்லில் இட்டு கார்ன் சப்பாத்திகளாகச் செய்தெடுக்கவும்.

 

இன்னொரு முறை:

1. இம்முறையில் அரைத்த சோளக்கலவையை எண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய கீரையையும் சேர்த்துக் கெட்டியாக்கவும்.
2. கோதுமை மாவு தனியே பிசைந்து கொள்ளவும்.
3. சோளம் பூரணத்தை உள்ளே வைத்து பரோத்தாக்களாகச் செய்யவும்.

ஆலூ பரோத்தா

Image

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கிண்ணம்
உருளைக்கிழங்கு- 2
சிறிய பச்சைமிளகாய்- 4
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு- கால் மூடி
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி

செய்முறை:

1. கோதுமை மாவைச் சலித்துச் சுடு தண்ணீரில் சப்பாத்தி மாவிற்குப் பிசைவது போலப் பிசைந்து கொள்ளவும்.

2. உருளைக்கிழங்கைக் குழைவாகக் குக்கரில் வேக விட்டு மசிக்கவும்.

3. வெந்த உருளைக்கிழங்குடன் உப்பு,மஞ்சள் தூள், சீரகம், பச்சைமிளகாய், எலுமிச்சைச்சாறு, அலம்பி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியனவற்றைச் சேர்த்து மசிக்கவும். குழந்தை உண்பது போல மென்மையாகப் பிசிறின்றி ஆலூ அமைய வேண்டும்.

4. மசித்த கிழங்கை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவை இட்டு நடுவில் பூரணமாக வைத்து வட்டமாக இடவும்.(உருளைக்கிழங்கும் மாவும் சமமான அளவில் இருக்க வேண்டும்)

5. அடுப்பை ஏற்றிச் சப்பாத்திக்கல்லில் இந்தப் பரோத்தாக்களைப் போட்டு, திருப்பிப் போட்டு, வெந்த பிறகு எண்ணெயைத் தடவி சிவப்பாகச் செய்து எடுத்துப் பரிமாறவும்.

6. தால், குருமா, கொண்டைக்கடலை மசாலா என்று சப்பாத்திக்குச் செய்யும் இணை உணவுகளையே இதற்கும் செய்யலாம்.

7.குழந்தைகளுக்கு விருப்பமான இந்தப் பரோத்தாக்களின் காரத்தைக் கூட்டியும் குறைத்தும் அவரவர் விருப்பத்திற்கேற்பச் செய்து கொள்ளலாம்.

முள்ளங்கி பரோத்தா

Image

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கிண்ண அளவு
வெள்ளை முள்ளங்கி- 2
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சைமிளகாய்- 2
பூண்டு- 2 பல்லு
சீரகம்- 1 தேக்கரண்டி
காரப்பொடி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. முள்ளங்கியை அலம்பித் தோல் நீக்கி அரிப்பானில் துருவிக் கொள்ளவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, துருவிய பூண்டு, சீரகம்,காரப்பொடி, உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் கலந்து சுடு நீர் விட்டு சப்பாத்தி மாவுக்குப் பிசைவது போல் பிசையவும். அரை மணி நேரம் ஊற விடவும்.
3. சப்பாத்திக்குச் செய்வது போல் பந்துகளாக உருட்டி, வட்டமாக சப்பாத்தி போல் இட்டு, அடுப்பை ஏற்றிக் கல்லில் போட்டுத் திருப்பி எடுக்கவும். எடுக்கும் வேளையில் எண்ணெயைத் தடவவும்.

mooli-paratha

இன்னொரு முறை (மூளி பரோத்தா):

1. இம்முறையில் செய்வதை மூளிப்பரோத்தா என்றழைப்பர்.
2. இதே முறையில் முள்ளங்கி, பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி அனைத்தையும் வதக்கி நீர் போகப் பிழிந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
3. சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, இந்த முள்ளங்கி மசாலாவை உள்ளே பூரணமாக வைத்துப் பரோத்தா போல் இட்டு கல்லில் போட்டு எடுக்கலாம்.
4. இம்முறையில் முள்ளங்கி ஈரமில்லாமல் இருந்தால் தான் இட வரும், அதனால் கவனமாகச் செய்ய வேண்டும்.
5. இதற்குத் தால், பனீர் பட்டர் மசாலா, குருமா, கொத்ஸூ போன்றவை அருமையான இணை உணவுகள்.

கூடுதல் குறிப்பு:

மாவைச் சுவைத்துப் பார்க்கும் போது காரம் கூடி விட்டது போல் தோன்றினால் தயிரோ எலுமிச்சைச்சாறோ சிறிதளவு சேர்க்கலாம், சப்பாத்தி போல் செய்யும் வேளைகளின் எண்ணெய்க்குப் பதில் வெண்ணெய் தடவினாலும் ருசி அதிகம்.

 

 

 

 

காய்கறி ரவா உப்புமா

Image

தேவையானவை:

ரவை- 2 கப்
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1
குடமிளகாய்- 1
காரட்- 1
பச்சைப்பட்டாணி- 1 கப்
உருளைக்கிழங்கு- 1
முட்டைக்கோஸ்- துருவியது ஒரு கப்
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய்- 2
மிளகாய்வற்றல்- 2
உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 1/2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. ரவையைச் சிவக்க வறுக்கவும், வறுத்த ரவையாக இருப்பின் ஓரளவுக்கு வறுக்கவும்.
2. 1 குவளை ரவைக்கு 1 1/2 குவளை தண்ணீரை வேக வைக்க வேண்டும், இங்கு 2 குவளை ரவை என்றதால் 3 முதல் மூன்றரை வரை அளவிலானத் தண்ணீரைத் தனியே கொதிக்க விடவும்.
3. வாணலியில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாழிசம் செய்து, இஞ்சி, வெங்காயத்தை வதக்க வேண்டும்.
4. பிறகு குடமிளகாய் உட்பட பிற காய்கறிகளைச் சேர்த்து வதக்கின பிறகு கடைசியாகத் தக்காளியைச் சேர்க்க வேண்டும், தக்காளி சீக்கிரம் வதங்குமாதலால் இறுதியால் சேர்த்தால் போதும்.
5. கொதித்த தண்ணீரைக் காய் வதக்கலுடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.
6. காய் வெந்தவுடன் தனியே ஆற வைத்த ரவையைக் கொதிக்கும் கலவையுடன் கொட்டிக் கொண்டே கிளற வேண்டும்(இல்லையென்றால் அடி பிடித்து விடும்). சிறிது வேக விடவும், கிளறிக் கொண்டே வரவும், எண்ணெயிடும் போது ஒட்டாமல் வரும், அப்போது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

DSC08725

கூடுதல் குறிப்புகள்:

1. ரவா உப்புமாவின் சுவை ரவையை வதக்குவதிலே இருக்கிறது, சிலருக்கு உப்புமா ருசிக்காததற்கு இது கூடக் காரணமாக இருக்கலாம்.

2. காய்கறிகள் அவரவர் விருப்பம் போல் கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்.

3. முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடியை நெய்யில் வதக்கி உப்புமாவை அடுப்பிலிருந்து இறக்கும் முன் தூவலாம்.

4. ரவையுடன் சேமியாவும் சேர்த்து(இரண்டுமே தனித்தனியே வதக்கப்பட வேண்டும், அளவில் ஒரு குவளைத் தண்ணீரைக் கூடச் சேர்க்க வேண்டும்.) ரவா சேமியா உப்புமாவும் ருசியை அள்ளும்.

5. கோதுமை ரவை உடலிற்கு மிகவும் நல்லது, அதையும் மேற்கூறிய வகையில் செய்யலாம்.

6. மோர் கரைத்து தண்ணீர் வேக விடும் போது சேர்த்தும் ரவா உப்புமா செய்யலாம், புளிப்புச் சுவையுடன் வித்தியாசமாக இருக்கும்.

7. பத்து நிமிடங்களில் தயார் செய்து விடக் கூடிய எளிய சுவை மிகுந்த சிற்றுண்டி வகை இது.