தேங்காய்ச்சாதம்

Image

தேவையானவை:

உதிராக வடித்த பச்சரிசி சாதம்- 2 கப்
துருவின தேங்காய்- அரை கப்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு- கைப்பிடி அளவு

செய்முறை:

Image

1. சாதத்தை விறைப்பாக வடித்து ஆற விடவும்.

2. துருவின தேங்காயை வறுத்து ஆற விடவும்.

3. தேங்காய் எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்து வறுத்தத் தேங்காய்த்துருவலையும் உப்பையும் சேர்த்து நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் கலந்து ஒரு புரட்டு புரட்டி ஆற விடவும்.

4. ஆறிய சாதத்துடன் வறுத்தத் தாளிசக் கலவையைக் கலக்க ருசியான தேங்காய்ச்சாதம் தயார்.

5. பூஜை நேரங்களில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய அம்சமான சித்ரான்னம் இந்தத் தேங்காய்ச்சாதம்.

கேரட் சாதம்

Image

தேவையானவை:

கேரட்- 6
வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
உதிர் உதிராக வேக வைத்த பாசுமதி அரிசி- 4 கப்

வறுத்துத் திரிக்க:

வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
மிளகு- 6
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 10 இலைகள்
மிளகாய்வற்றல்- 5

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. பாசுமதி அரிசியை உதிர் உதிராக வேக வைத்து வாயகன்ற பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.

2.கேரட்டை அலம்பிக் கொண்டு தோலைச் சிறிதளவு நீக்கி(தோலிற்கு நெருக்கமான பகுதியில் தான் உயிர்ச்சத்து உள்ளதால் அதிகம் நீக்கத் தேவையில்லை) துருவி வைத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும்.

4. இன்னொரு வாணலியில் வறுக்கக் கொடுத்தப் பொருட்களை(சீரகத்தை மட்டும் கடைசியில் சேர்க்கவும்) வறுத்து நற நறவென்று திரித்து வைக்கவும்.

5. கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.

6. கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான, எளிதான, ஆரோக்கியமான கேரட் சாதம் தயார்.

7.தொட்டுக் கொள்ள ரெய்தா, வடகம், அப்பளம், வறுவல் வகைகள் சிறந்தவை. வித்தியாசமான சித்ரான்னம்.

Image

இன்னொரு முறை:

மேற்கூறிய முறையில் கேரட்டைத் துருவவும், தாளிசப்பொருட்களைத் தாளித்து அதில் கேரட்டை வேக விடவும், வெந்த பிறகு தேங்காய்த்துருவலைப் போட்டுக் கிளறி இறக்கி இதனைச் சாதத்துடன் பிசறவும். மிளகாய்வற்றலிற்குப் பதிலாக பச்சைமிளகாய் சேர்க்கலாம், வெங்காயத்தையும் வதக்கிச் செய்யலாம்.

கூடுதல் குறிப்புகள்:

1. கேரட் சாதத்திற்கு வேண்டிய பொடியை நேரம் கிடைக்கும் போது செய்து வைத்துக் கொண்டால் நிமிடங்களில் இவ்வகை சாதத்தைச் செய்ய முடியும்.

2. கேரட் பிடிக்காதவர்கள் கூட இதன் ருசியில் கேரட்டி உணவில் சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம்.

3. வேலைக்குச் செல்பவர்களுக்கும் பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கும் அவசர நேரங்களில் கை கொடுக்கும் அருமையான உணவு.

4.பலவகைச் சத்துக்கள் நிரம்பிய கேரட்டைப் பல வகைகளில் தயாரித்து உண்டு உடல் ஆரோக்கியத்தைப் பேணல் அவசியம்.

 

மாங்காய் சாதம்

Image

தேவையானவை:

சாதம்- 2 கப்(உதிர் உதிராக)
மாங்காய்- 1
தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
நிலக்கடலை- 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்கச் சிறிதளவு

செய்முறை:

மாங்காய் சாதம்

1. மாங்காயின் தோலை அகற்றி துருவியோ அல்லது மின்னரைப்பானில் தேங்காய், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவோ செய்ய வேண்டும்.
2. தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு அரைத்தக் கலவையைக் கொட்டி மஞ்சள் தூளுமிட்டு வதக்கவும்.
3. மாங்காய்க் கலவை கெட்டியானதும் இறக்கி விடவும்.
4. சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற விடவும்
5. அரைத்து வெந்த கலவையும் ஆறின பிறகு சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.
6. எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பை வதக்கி சாதத்தில் போட சுவையான மாங்காய் சாதம் தயார்.
7. தயிர் பச்சடி, சிப்ஸ், வடகம், அப்பளம் போன்றவை அருமையான இணைகள்.

இன்னொரு முறை:

மாங்காயைத் துருவிக் கொண்டு தாளிசப்பொருட்களுடன் கலந்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி சாதத்துடன் சேர்த்தும் திடீர் மாங்காய் சாதமாகச் செய்யலாம். பாசுமதி அரிசியைப் பயன்படுத்தினால் விறைப்பாகவும் அழகாகவும் ருசியாகவும் அமையும்.

மாங்காயின் சத்துக்கள்:

1.வைட்டமின் ஏ, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
2.பசியைத் தூண்டும்.
3. தாது பலம் பெறும்.
4. செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும்.
5. மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் இயல்புடையது.
6. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது, சூட்டைக் கிளப்பும்.

மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு ஏற்படும். ஆனால் அளவாக சாப்பிட அது பல நன்மைகளைத் தரும். இது இயற்கை அளித்த கொடை. எனவே தினமும் சில துண்டுகள் மாங்காயைச் சாப்பிடுவது நல்லது.

———————————————————————————–

 

எலுமிச்சை சாதம்

lemon-rice

தேவையான பொருட்கள்:

உதிராக வடித்த சாதம்- 1 கப்
எலுமிச்சை- 3

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சைமிளகாய்- 2
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி 
காயம்- சிறிதளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு- சிறிதளவு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு – ஒரு கைப்பிடி

செய்முறை:

1. சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும்(குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்)

2. வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.

3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும், கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு கடுகு வெடித்தவுடன் சிவக்க வறுபட வேண்டும். துருவின இஞ்சி, பச்சைமிளகாய்(பச்சைமிளகாயை நீளமாக நறுக்கலாம், அல்லது மிகவும் பொடியாக நறுக்கிப் போடலாம்), கறிவேப்பிலை, காயம், மஞ்சள் தூள் அனைத்தும் போட்டு வதக்கவும்.

4. தனியொரு வாணலியில் எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வதக்கி இதனுடன் சேர்க்கவும்.

5. தாளிசப்பொருட்களுடன் எலுமிச்சையைப் பிழிந்து விடவும்.

6. ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.

7. கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். தொட்டுக் கொள்ள கத்திரிக்காய் துவையல், பருப்புத்துவையல், சிப்ஸ் போன்றவை அருமையான இணைகள்.

பின்குறிப்புகள்:

1. எளிதில் செய்து விடக் கூடிய எலுமிச்சைச் சாதத்தைப் பிரயாண நேரங்களிலும் பயன்படுத்தலாம்.

2. எலுமிச்சையின் பயன்கள் ஏராளம், அதனால் அடிக்கடி நம் உணவில் எலுமிச்சையைப் பயன்படுத்த வேண்டும்.

3. புளிப்புச்சுவை, காரச்சுவை அவரவர் விருப்பங்களுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளலாம்.

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்:

1. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது.

2.தினசரி வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது.

3.இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

4. இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகைப் பாதுகாக்கிறது. முகத்தைப் புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது.

5. எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.

6. இது ஜீரணமண்டலத்தைச் சீராக்குகிறது. உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

7. எலுமிச்சைச் சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தைப் பலமாக்குகிறது.

***********************************************************************

 

புளிக்காய்ச்சல் & புளியோதரை

புளிக்காய்ச்சல் செய்யும் விதம்:

Image

 

தேவையானவை:

புளி- இரண்டு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகு- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- 1 தேக்கரண்டி
தனியா- 3/4 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5
எள்- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உடைத்தத் தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கைப்பிடி

செய்முறை:

1. புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
2. தாளிசப்பொருட்களை ஓர் வாணலியில் தாளித்துக் கொண்டு 2 டம்ளர் அளவிலான கரைத்தப் புளித்தண்ணீரை விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. வறுக்கக் கொடுத்தவற்றை வறுத்து மையாக இல்லாமல் நற நற பதத்திற்குத் திரித்துக் கொதிக்கும் புளித்தண்ணீரில் விட்டுத் தீயைக் குறைத்து வைக்கவும். தனியொரு வாணலியில் எண்ணெயிட்டு தோல் நீக்கிய நிலக்கடலையை வறுத்துக் கொதிப்பதுடன் சேர்க்கவும்.
4. கெட்டியாகும் போது நல்லெண்ணையைக் கொட்டிக் கிளறி ஆற விடவும்.
5. சுவையான புளிக்காய்ச்சல் தயார்.
6.விருப்பமானவர்கள் சிறிது வெல்லத்தையும் சேர்க்கலாம்.

*******************************************************

புளியோதரை

Image

தேவையானவை:

உதிர் உதிராக வேக வைத்தப் பச்சரிசி சாதம்- 2 கப்
புளிக்காய்ச்சல்- ஒரு கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. வாயகன்ற பாத்திரத்தில் உதிராக வேக வைத்த சாதத்தை ஆற விடவும்.

2. ஓரளவுக்கு ஆறினவுடன் ஆறின புளிக்காய்ச்சலைப் போட்டுப் பூத்தாப்பில் கிளறவும், அழுத்திக் கிளறினால் குழைந்து விடும்.

3. சிறிது நல்லெண்ணெய் கலந்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு அப்பளம், வடகத்துடன் பரிமாறவும்.

4. தயிர்சாதமும் கிளறிக் கொண்டால் புளியோதரை சாப்பிட்ட பின் அதையும் உண்ணலாம்.

Image

எளியமுறை புளிக்காய்ச்சல்:

தேவையானவை:

புளி- இரண்டு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
வறுத்துத் திரித்த வெந்தயம்- 1 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உடைத்தத் தோல் நீக்கிய நிலக்கடலை- 1 கைப்பிடி
எள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. நல்லெண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், காயம் போன்ற தாளிசப் பொருட்களைத் தாளித்து விட்டுப் புளித்தண்ணீரை விட்டு உப்பு, மஞ்சள் தூள், காயம் போட்டுக் கொதிக்க விடவும்.

2. வறுத்த வெந்தயப்பொடியை முதலில் சேர்க்கவும்.

3. கொதித்து வற்றும் வேளையிலே மீதி வெந்தயப்பொடியைச் சேர்க்கவும்.

4. வேறு எதுவும் வறுத்து அரைக்கத் தேவையில்லை.

5. எளிய முறையில் செய்து விடக் கூடிய இந்தப் புளிக்காய்ச்சலைப் பயன்படுத்தி மேற்கூறிய முறையில் புளியோதரை தயாரிக்கலாம்.

கூடுதல் குறிப்புகள்:

Image

1. முதல் முறையில் கடலைப்பருப்பு இல்லாமல் மற்ற பொருட்களை வறுத்து அரைத்துச் செய்ய வித்தியாசமான சுவை கிடைக்கும்.

2.புளிக்காய்ச்சலை முந்தின நாளே தயாரித்துக் கொண்டால் மறு நாள் புளிப்புச் சுவை கூடி ருசி அமிழ்தமாய் இருக்கும்.

3. பயண நேரங்களின் போது புளிக்காய்ச்சலைச் செளகரியப்படும் நேரத்தில் செய்து விட்டு சாதத்துடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

4. வேலைக்குச் செல்பவர்கள் வார இறுதி நாட்களில் பொறுமையுடன் சற்று மெனக்கெட்டு செய்து வைத்துக் கொண்டால் சாதம் வைத்துக் கலப்பது மட்டும் தான் வார நாட்களில் வேலையாக இருக்கும்.

5. காரம் தூக்கலாகப் போடுவது நல்லது, ஏனென்றால் போகப் போகப் புளிப்புத்தன்மை மேலோங்குவதால் காரம் கட்டுப்படும்.

6. இன்னும் ஒரு வழியில் வறுத்து அரைப்பதற்குப் பதிலாக வீட்டில் வறுத்துத் திரித்த சாம்பார் பொடியைப் பயன்படுத்தியும் திடீர் புளியோதரை செய்து அசத்தலாம். புளிக்காய்ச்சல் வாசனை ஆளைத் தூக்கும், புளிக்காய்ச்சல் செய்ய அரை மணி நேரம் தான் ஆகும், மொத்தத்திலே புளியோதரையை அரை மணி நேரத்தில் செய்து முடிக்கலாம்.

 

 

 

 

தயிர்சாதம்

Image

தேவையானவை:

பச்சரிசி- 1 கப்
பால்- 1 டம்ளர்
தண்ணீர்- 1 1/2 டம்ளர்
தயிர்-3 கப்
உப்பு- தேவையான அளவு
வேகவைத்த பச்சைப்பட்டாணி- 1 கப்
வெள்ளரிக்காய்த்துருவல்- 1 கப்
கேரட் துருவல்- 1 கப்
மாங்காய்த்துண்டுகள்- 3 தேக்கரண்டி
மாதுளை முத்துக்கள்- 2 தேக்கரண்டி
திராட்சை(மாதுளைமுத்துக்கள் இருந்தால் வேண்டாம்)

தாளிக்க:

எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
பெருங்காயம்- சிறிதளவு
இஞ்சி- 1 துண்டு
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை:

1. சாதத்தைத் தண்ணீர், பால் கொண்டு குழைவாக வேக விடவும்.
2. ஆற விட்டுக் கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
3. பிறகு தயிர் கலந்து நன்றாகக் கிளறவும்.
4. மாங்காயைப் பொடித் துண்டுகளாக நறுக்கவும்
5. வெள்ளரிக்காய், கேரட் போன்றவற்றைத் தோலகற்றித் துருவிக் கொள்ளவும்.
6. அலங்கரிக்கச் சிறிது துருவலை வைத்துக் கொண்டு மீதியைஅலங்கரிக்கச் சிறிது துருவலை வைத்துக் கொண்டு மீதியைத் தயிர்சாதத்துடன் கலந்து விடவும்.
7. தாளிசப்பொருட்களைத் தாளித்து அதையும் தயிர்சாதத்துடன் சேர்க்கவும்.
8. அரை டம்ளர் பாலைச் சூடாக்கி அதையும் தயிர்சாதத்தில் போட்டுத் தளரக் கிளறவும்.
9. அலங்கரிக்க வைத்திருக்கும் மாதுளை முத்துக்கள் அல்லது திராட்சையைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கச் சுவையான தயிர்சாதம் தயார்.

Image

 

கூடுதல் குறிப்புகள்:

 

 

1. எளிதில் செய்து விடக் கூடிய தயிர்சாதத்திற்கு மாவடு, ஊறுகாய் வகைகள், துவையல்கள், உருளைக்கிழங்கு வறுவல், காலிபிளவர் வறுவல், கோவைக்காய்ப் பொரியல், கொண்டைக்கடலைச்சுண்டல்,வெங்காய பக்கோடா, மிக்ஸர் போன்றவை நல்ல இணைகள்.

 
2. அரிசியை வேக வைக்கும் போது தண்ணீர் அதிகமாகவும் பால் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும், ஏனெனில் பாலில் அரிசி வேகாது, வேகவும் நேரம் பிடிக்கும், வெந்து வந்தாலும் விறைப்பாக இருக்கும்.

 
3. சிவப்பு குடமிளகாய், வெங்காயம் போன்றவற்றை வதக்கிக் காய்கறி தயிர்சாதமாகச் செய்யலாம்.

 
4. புளித்த தயிரும் தாளிக்க்கும் விஷயங்களும் இஞ்சியும் காயமும் பச்சை மிளகாயும் கொத்தமல்லியுமே தயிர்சாதத்தை மணக்க வைக்கும் அம்சங்கள்.எதுவுமே இல்லா விட்டாலும் இவற்றைச் சேர்த்தாலே தயிர்சாதம் தயார்.

 
5. சுற்றுலா செல்லுவோருக்குத் தயிர்சாதம் வரப்பிரசாதம். அவ்வாறு செல்லும் போது பாலைக் காய்ச்சி உறவூற்றின அரைகுறை தயிரைக் கலந்து எடுத்துக்கொள்ளலாம், அவ்வாறு செய்யும் போது தயிராகப் புளித்துத் தயிர்சாதம் ருசிக்கும், தயிராகவே கலந்தால் புளிக்கவோ கெட்டுப் போகும் வாய்ப்புகளோ அதிகம்.

 
6. தயிர்சாதம் தானே என்ற அலட்சியமின்றி சில மெனக்கெடல்களுடன் செய்யும் போது சுவை அமிழ்தமாய் ருசிக்கும்.

புதினா-கொத்தமல்லி சாதம்

pudinarice

 

தேவையான பொருட்கள்

புதினா- ஒரு கட்டு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
புளி- நெல்லிக்காய் அளவு
மிளகாய்வற்றல்- 3
பூண்டு- 2 பல்லு
இஞ்சி- 1 துண்டு
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
தேங்காய்- 4 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
காயம், உப்பு- தேவையான அளவு
கலந்த சாதப்பதத்துக்கு ஏற்றவாறு உதிர் உதிராக வடித்த சாதம்

தாளிக்க:

நல்லெண்ணய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 1
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரி- 1 தேக்கரண்டி

செய்முறை:

1.புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக மண் போக அலசி வைக்கவும்.
2. அடுப்பை மிதமான தீயிலிட்டு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளைஉளுத்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்
3. வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி அலம்பிய கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்.
4. அரைப்பானில் வதக்கினவற்றோடு தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
5.எண்ணயிலிட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்
6. அரைத்தவற்றைப் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் உறிஞ்சும் வரை வதக்கி இறக்கவும்.உடைத்த நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் எண்ணெயில் வறுத்துக் கலக்கவும்.
7. உதிர் உதிராக வடித்த சாதத்தை ஆற விடவும்
8. கலவையின் சூடு குறைந்ததும் சாதமும் ஆறினவுடன் கிளறவும்.
சுவையான பல்வகைச்சத்துள்ள புதினா-கொத்தமல்லி சாதம் தயார்.

இதற்கு இணையாக வெள்ளரிப்பச்சடி, கிச்சடி, வறுவல், அப்பளம் வடகம் பொரித்து பரிமாறலாம்.

கோவக்காய் சாதம்

Image

தேவையான பொருட்கள்:

கோவக்காய்-20
பெரிய வெங்காயம்-2
சாம்பார் பொடி-2 டீஸ்பூன்
நிலக்கடலை-ஒரு கைப்பிடி
எலுமிச்சைச்சாறு-1 டீஸ்பூன்
எண்ணெய்-2 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு-2 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-2 டீஸ்பூன்
சீரகம்-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு இணுக்கு
உப்பு-தேவையான அளவு

செய்முறை:

1.சாதத்தை விறைப்பாக வடித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விடவும்.
2.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ளவும்.
3.பெரிய வெங்காயத்தையும் கோவக்காயையும் நீளமாக நறுக்கவும்.
4.தாளித்த பொருட்களுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கினவுடன் கோவக்காயைச் சேர்த்து உப்பு, சாம்பார்பொடி போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.சாம்பார் பொடிக்குப் பதிலாகக் காரத்திற்கு இட்லி மிளகாய்ப்பொடியையும் சேர்த்துச் செய்யலாம்.
6.இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும்.தனியே வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு நிலக்கடலையை வறுத்து கோவக்காய் கலவையுடன் சேர்க்கவும்.
7.கோவக்காய் வெந்தவுடன் அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாற்றை விட்டு ஆற விட்டு சாதத்துடன் கலக்கவும்.

Kovakkai satham

 

கூடுதல் குறிப்புகள்:

1.பயணங்களுக்கு வசதியான எளிமையான செய்முறை இது. கோவக்காயை வட்ட வடிவமாக நறுக்கியும் செய்யலாம்.
2.சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த காய் கோவக்காய். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
3.கோவக்காயைச் சாம்பாரிலும் கூட்டிலும் சேர்த்தும் பயன் பெறலாம்.
4.காரம் குறைவாக இருந்தால் இட்லி மிளகாய்ப் பொடியைச் சிறிது சேர்த்து கோவக்காய் சாதத்துடன் கலக்கலாம். இந்த ருசி அருமையாக இருக்கும்.