எளிய மதிய விருந்து

Image

பூசணி சாம்பார்:

தேவையான பொருட்கள்:

பூசணித்துண்டுகள்- 10
தக்காளி- 4
வேக வைத்த துவரம்பருப்பு- 4 கரண்டி
சாம்பார்பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்
காயம்- சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய்- 1 டீஸ்பூன்
தாளிக்க- கடுகு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழைகள்

செய்முறை:

1.புளியைச் சுடுநீரில் கரைக்கவும்.
2.குக்கரில் ஒரு கப் துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
3.அடுப்பை ஏற்றி,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும்.
4.அதனுடன் பூசணித்துண்டுகள்,தக்காளி போட்டு மூடி வைத்து வதக்கவும்.
5.ஓரளவு வெந்தவுடன் புளித்தண்ணீரைக் காய்களுடன் சேர்க்கவும்.
6.மீண்டும் புளியுடன் 1 டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
7.பிறகு உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் பொடி, காயம் ஆகியனவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
8.காய் வெந்தவுடன் பருப்பைக் கரண்டியால் நன்றாக மசித்து குழம்பில் சேர்க்கவும்.
9.கொத்தமல்லியை அலம்பி சாம்பார் மேல் தூவி அலங்கரிக்கவும்.

கூடுதல் குறிப்புகள்:

1.தண்ணியாக குழம்பு வந்தாலும் பரவாயில்லை, சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும். மிக மிக தண்ணியாகக் குழம்பு ஆகி விட்டால் மட்டுமே அரிசிமாவைக் கரைத்து சேர்க்க வேண்டும்.அதிக கெட்டியாகி விட்டால் குழம்புடன் சிறிது சுடு நீர் சேர்க்கவும்.
2.சாம்பாரை விதவிதமான முறையில் செய்யலாம். மேற்கூறிய முறை எளிய முறை.
3.உப்பு,காரம் அவரவர் தேவைகளுக்கேற்ப கூட்டிக் குறைத்து செய்து கொள்ளவேண்டும்.
4.ருசியான சாம்பார் அமைய வீட்டிலேயே சொந்தமாகத் திரித்த சாம்பார் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.
5.சாம்பார் செய்து முடிக்கும் தருவாயில் கடுகு,தாளிசம் செய்து கொள்ளலாம்.
==================================================================

மாங்காய் வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1
சாம்பார்பொடி – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்
காயம்- சிறிதளவு
புளி- எலுமிச்சை அளவு
எண்ணெய்- 2 டீஸ்பூன்
தாளிக்க- கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழை

செய்முறை:

1.புளியைச் சுடு நீரில் கரைக்கவும்.
2.அடுப்பை ஏற்றி,ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிசம் செய்யத் தேவையானவற்றைத் தாளிசம் செய்யவும்.
4.அதனுடன் மாங்காய்த்துண்டுகளைப் போட்டு மூடி வைத்து வதக்கவும்.
5.ஓரளவு வெந்தவுடன் புளித்தண்ணீரைக் காயுடன் சேர்க்கவும்.
6.மீண்டும் புளியுடன் 1 டம்ளர் தண்ணீரைச் சேர்த்து கரைத்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
7.பிறகு உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் பொடி, காயம் ஆகியனவற்றைச் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
8.காய் வெந்தவுடன் அரிசிமாவைக் கரைத்துக் குழம்பில் சேர்க்கவும்.
9.கொத்தமல்லியை அலம்பி வத்தக்குழம்பு மேல் தூவி அலங்கரிக்கவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. அருமையான இவ்வகை மாங்காய் வத்தக்குழம்பைச் சாம்பார் ரசம் செய்யும் போதே எளிய முறையில் செய்து முடிக்கலாம்.
2.காரம் கூடி விட்டதென்றால் வெல்லத்துண்டுகளைப் போட்டுக் குழம்பைக் கொதிக்கச் செய்தால் குழம்பு கூடுதல் ருசியைத் தரும்.
3.தாளிக்கும் போது 5 வெந்தயம்,1/2 டீஸ்பூன் துவரம்பருப்பு சேர்க்க, குழம்பு வாசனையாக அமையும்.
========================================================================

எலுமிச்சை ரசம்

தேவையான பொருட்கள்:

தக்காளி- 1
பருப்புத்தண்ணீர்- 1/2 டம்ளர்
புளி-எலுமிச்சை அளவு
எலுமிச்சைச்சாறு- 1 டீஸ்பூன்
ரசப்பொடி- 11/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்,காயம்- சிறிதளவு
தாளிக்க- எண்ணெய்,கடுகு,கறிவேப்பிலை
அலங்கரிக்க- கொத்தமல்லித்தழைகள்

செய்முறை:

1.புளியைக் கரைத்த நீரை அடுப்பில் சுட வைக்கவும்.
2.தக்காளியைக் கசக்கிப் பிழிந்து புளி நீருடன் சேர்க்கவும்.
3.அதனுடன் உப்பு,மஞ்சள் தூள்,ரசப்பொடி,காயம் ஆகியனவற்றைச் சேர்க்கவும்.
4.ரசம் கொதிக்கத் தொடங்கும், பச்சை வாசனை மறைந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும்.
5.எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
6.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளிசம் செய்து ரசத்துடன் சேர்க்க வேண்டும்.

கூடுதல் குறிப்புகள்:

1.எலுமிச்சைச்சாற்றை எந்த உணவில் சேர்க்கும் போதும் இறுதியிலோ உணவை அடுப்பிலிருந்து இறக்கும் வேளையிலோ தான் சேர்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே சேர்க்கக் கூடாது. ஆதே போல் அதிக அளவில் எலுமிச்சைச்சாற்றைப் பயன்படுத்தினால் பதார்த்தம் கசந்து விடும்.
2.சாம்பாருக்குச் செய்து வைத்துள்ள பருப்பைப் பயன்படுத்தி அதைக் கரைத்து ரசத்திற்குப் பருப்புத்தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். தனியே செய்ய வேண்டிய அவசியமில்லை.
3. தக்காளியை மசித்துச் சேர்த்தால் தான் தக்காளியின் சாறு ரசத்தின் சுவையை அதிகரிக்கும்.,தக்காளியை அரைத்தும் பயன்படுத்தலாம்
4.குழம்பை விட ரசம் சீக்கிரம் தயாராகி விடுவதால் அதிக நேரம் கொதிக்க வைக்கத் தேவையில்லை.
5.புளி சேர்க்காமலும் பருப்பு ரசம் போலச் செய்து இறுதியில் எலுமிச்சையைப் பிழியலாம், எலுமிச்சையின் புளிப்பே ரசத்திற்குப் போதுமானது.
========================================================================

முட்டைக்கோஸ் பொரியல்

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ்- 1
தேங்காய்த்துருவல்- 2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள்தூள்- சிறிதளவு
தாளிக்க- எண்ணெய்,கடுகு,வெள்ளை உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை

செய்முறை

1.கோஸை நன்றாக அலம்பிக் கொண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.
2.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு,கிள்ளிய 1/2 மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை ஆகியனவற்றைத் தாளிக்கவும்.
3.கடுகு வெடித்தவுடன் கோஸைச் சேர்த்து உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
4.அவ்வப்போது மூடியைத் திறந்து அடிப் பிடிக்காமல் கிளறி விடவும்.
5.கோஸ் வெந்தவுடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
6.அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கூடுதல் குறிப்புகள்:

1.முட்டைக்கோஸில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம், அடிக்கடி முட்டைக்கோஸை உணவில் சேர்ப்பது நல்லது.
2.தாளிசத்தின் போது கடலைப்பருப்பு சேர்க்க விரும்புவர்கள் சேர்க்கலாம்.
3.மஞ்சள் தூள் சேர்க்காமலும் கோஸ் பொரியல் செய்யலாம். கோஸைத் துருவியும், அதனுடன் கேரட் சேர்த்தும் பொரியல் செய்யலாம்.
4.தேங்காய்த் துருவலைக் கடைசியில் சேர்க்க பொரியல் கமகமக்கும்.
5.சிறிது தண்ணீர் தெளித்து தான் இந்தப் பொரியலைச் செய்ய வேண்டும். அதிகம் தண்ணீர் விட்டு விட்டால் பொரியலின் கணிசம் குறைந்து விடும்.
=====================================================================

வெள்ளரிக்காய்ப் பச்சடி

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்- 1
உப்பு- தேவையான அளவு
தயிர்- 4 டீஸ்பூன்
தாளிக்க- எண்ணெய்,கடுகு,வெள்ளை உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை

செய்முறை:

1.வெள்ளரிக்காயை அலம்பி தோலை அகற்றிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். தயிரையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
3.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,வெள்ளை உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சடியுடன் சேர்த்துக் கலக்க சுவையான எளிய பச்சடி தயார்.

இன்னொரு முறை:

1.வெள்ளரிக்காயைப் பொடியாகத் துருவி கொள்ளவும்.
2. மிக்ஸியில் 1 டீஸ்பூன் தேங்காய்த்துருவல், 1 பச்சைமிளகாய்,சிறிதளவு காயம், தயிர் எல்லாம் சேர்த்து அரைத்து வெள்ளரிக்காயுடன் சேர்க்க அசத்தல் சுவை கிடைக்கும்.
==================================================================

பிஸ்தா பால்

தேவையான பொருட்கள்:

பிஸ்தாப்பருப்பு- ஒரு கைப்பிடி
பால் – 2 டம்ளர்
சீனி(சர்க்கரை)- 6 டீஸ்பூன்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும்.
2.பிஸ்தாப்பருப்புகளை மிக்ஸியில் அரைக்கவும்.
3.பால் காய்ந்தவுடன் சீனி சேர்த்து கலக்கவும்
4.அரைத்த கலவையை ஊற்றி குறைந்த தீயில் வேக விடவும்.

கூடுதல் குறிப்புகள்:

1.பிஸ்தா பால் மிக எளிய இனிப்புவகை. இதே முறையில் பாதாம் பால், முந்திரிப்பருப்பு பாயாசம் ஆகியனவற்றையும் செய்து அசத்தலாம்.
2. நேரம் கிடைக்கும் போது பிஸ்தாப் பருப்புகளைத் திரித்து வைத்துக்கொள்வது சமயத்திற்குக் கை கொடுக்கும்.
3.மைக்ரோவேவ் வசதியுள்ளவர்கள் இவ்வகைப் பொடியைத் திரித்து வைத்துக் கொண்டு பாலை மைக்ரோவ்வேவ்வில் சூடுபடுத்தி பிஸ்தாப்பொடியைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
======================================================================

 

பொதுவான குறிப்புகள்:

 
1.மேற்கூறிய செய்முறைகள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. சொந்த அனுபவத்தில் செய்து பார்த்துப் பாராட்டுகளைப் பெற்ற பின்னே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று உங்கள் அனைவருக்கும் பகிர்கின்றேன்.
2.விருந்தினர் வரும் பொழுது மட்டுமில்லாமல் பண்டிகைகள்,பிறந்த நாள் வைபவங்கள் என்று ஒவ்வொரு விசேஷத்திற்கும் இவ்வகை எளிய சமையலைச் செய்து அசத்தலாம்.
3.சாம்பார் பொடி,ரசப்பொடி,பிஸ்தாப் பொடி முதலிலேயே திரித்து வைத்துக் கொண்டால் இந்த சமையல் மிகவும் எளிது.
4.சமைக்கும் போது மிகவும் ஆத்மார்த்தமாக இல்லத்தவர்களின் உடல் நலத்தை எண்ணி அன்புடன் சமைக்க உணவின் சுவை இன்னும் மிளிரும். ஏனென்றால் நம் எண்ணங்களே உணவின் ருசியைக் கூட்டவோ குறைக்கவோ செய்கின்றது.
சமைத்து அசத்தி நற்பெயர் பெற வாழ்த்துகள்.