கீரைச்சப்பாத்தி

0.o
தேவையான பொருட்கள்:

கீரை- ஒரு கட்டு
கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
சீரகம்- 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பச்சைமிளகாய்- 2
கரம்மசாலாத்தூள்- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. கீரையை மண் போக அலசிப் பொடியாக நறுக்கவும்.
2. கோதுமை மாவுடன் தேவையான பொருட்கள் வரிசையில் இருக்கும் அனைத்தையும் சேர்த்து, கீரையையும் சேர்த்துத் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து மாவு பிசையவும்.
3. மாவை ஒரு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.
4. பிறகு சப்பாத்தி செய்வது போல் உருண்டைகளாக்கி இட்டு கல்லில் போட்டு எடுக்கவும்.
5. கீரை வேகச் சிறிது நேரமாகுமாதலால் எண்ணெய் விட்டு இரு புறங்களிலும் மாறி மாறி வேக விட வேண்டும்.கீரைச்சப்பாத்தி செய்யும் போது பாதி வெந்ததும் அடுப்பில் நேரடியாக இரு புறமும் சுட வைத்துக் கல்லில் போட்டு எண்ணெய் தடவலாம். எண்ணெய் தடவி விட்டுத் தணலில் காட்டக் கூடாது, அப்பளம் போல ஆகி விடும்.
6. வெந்த பிறகு தால், கொத்ஸூ வகையறாக்களுடன் பரிமாற வேண்டும்.
7. வெந்தயக்கீரையையும் இதே முறையில் செய்யலாம்.

 

காலிபிளவர்-காரட் சப்பாத்தி

Image
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
சீரகம்- 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள்- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
துருவிய காலிபிளவர்
துருவிய காரட்
கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

1. காலிபிளவரை உப்பிட்ட சுடுதண்ணீரில் ஊற வைக்கவும். அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் அழிந்து விடும்.
2. பிறகு நல்ல தண்ணீரில் அலசி ஒரு துணியால் ஈரத்தைத் துடைத்து விட்டு துருவிக் கொள்ளவும். காரட்டையும் துருவிக் கொள்ளவும்.
3. காரட்-காலிபிளவருடன் உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
4. கோதுமை மாவுடன் சிறிது உப்பு கலந்து இந்தக் கலவையையும் ஒன்றாகக் கலந்து மாவு பிசையவும்.
5. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் கல்லில் போட்டு இரு புறமும் வெந்த பிறகு எண்ணெய் தடவி இறக்கவும்.
6. பச்சைமிளகாய் சேர்க்க விரும்புவர்கள் சேர்க்கலாம், ஆனால் காரப்பொடியும் இருப்பதால் காரத்தைப் பார்த்துச் சேர்க்க வேண்டும்.
7. மிகவும் ருசியான காலிபிளவர்- காரட் சப்பாத்தி விருந்தினரையும் குழந்தைகளையும் கவரும்.
8. காலிபிளவர்- உருளைக்கிழங்கு, காலிபிளவர்-உருளைக்கிழங்கு-பீன்ஸ் இணைகளில் சப்பாத்திகளும் ருசி அள்ளும்.

 

உருளைக்கிழங்கு(ஆலூ) சப்பாத்தி

Image
தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- ஒரு உருளைக்கிழங்கிற்கு 2 சிறிய பச்சைமிளகாய்கள் வீதம்
மசாலாத்தூள்- சிறிதளவு

செய்முறை:

1. உருளைக்கிழங்கைத் தோலகற்றி மசிய வேக வைத்து மசித்து அதனுடன் உப்பு, சீரகம், பச்சைமிளகாயை, கரம் மசாலாத்தூளைச் சேர்க்கவும்.
2. கோதுமைமாவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி மாவைப் பிசையவும்.
3. சப்பாத்தி செய்வது போல வட்ட வடிவில் இட்டு கல்லில் போட்டு இரு புறமும் சிவந்த பிறகு திருப்பிப் போட்டு எண்ணெய் தடவிப் பரிமாறவும்.
4. ஆலோ பரோத்தாவில் தனியாக உருளைக்கிழங்கு மசாலவைப் பூரணமாக வைத்துச் செய்வோம், நேரடியாகக் கோதுமை மாவில் சேர்த்துச் சப்பாத்திப் போல் செய்வது உருளைக்கிழங்கு சப்பாத்தி.
5. காரங்களும் மசாலாப் பொருட்களும் அவரவர் விருப்பத்திற்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
6. காரம் கூடி விட்டதென்றால் எலுமிச்சைச்சாறு அல்லது தயிர் சேர்க்கக் காரம் மட்டுப்படும்.

 

அவகோடா சப்பாத்தி

Image

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
துருவி மசிக்கப்பட்ட அவகோடா- நடுத்தர அளவில்

மசாலா:

சீரகத்தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு- சிறிதளவு
கொத்தமல்லி- 1/4 கப்
புதினா- 1 தேக்கரண்டி(வேண்டுமானால்)

செய்முறை:

1. அவகோடாவின் தோல் சீவி விதை நீக்கி மசித்துக் கொள்ளவும், அதனுடன் எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் மசாலாப் பொருட்களுடன் மசித்த அவகோடாவையும் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
3. இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
4. சப்பாத்திக்குச் செய்வது போல மாவினை உருண்டையாக உருட்டி வட்ட வடிவில் இட்டு அடுப்பில் இரண்டு புறமும் வேகும் படி எண்ணெய் தடவி வெந்து எடுக்கவும்.
5. அவகோடா சப்பாத்தி மென்மையாக இருப்பதுடன் தனி ருசியுடன் அசத்தலாக இருக்கும்.
6. பிற சப்பாத்தி, பரோத்தா வகைகளுக்கான இணையுணவுகள் இதற்கும் பொருந்தும்.

 

புல்கா/சுக்கா சப்பாத்தி

Image

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

1. கோதுமை மாவுடன் உப்பு, மற்றும் நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
2. பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம்.
3. 2 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.
4 மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம்.
5. ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாகக் காட்டி வேகவிடவும்.
6. சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
7. சப்பாத்தி கருகாத அளவிற்குப் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் இல்லாமல் இப்படி செய்யப்படும் சப்பாத்தியே புல்கா ரொட்டி.

 

முள்ளங்கி சப்பாத்தி

Image

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 1
கோதுமை- 2 கப்
மிளகாய்த்தூள்- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை:

முள்ளங்கிப் பரோத்தாவிற்குச் சொன்னது போலப் பூரணம் தனியாகச் செய்யாமல் மாவில் மொத்தமாகக் கலப்பதே முள்ளங்கிச்சப்பாத்தி.

1. முள்ளங்கியைத் துருவிக் கொள்ளவும்.

2. கோதுமைமாவுடன், உப்பு, மஞ்சள் தூள், முள்ளங்கி, காரப்பொடி,கொத்தமல்லி எல்லாம் கலந்து பிசையவும். இரண்டு மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

3. உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாக இட்டுக் கல்லில் போட்டு எடுக்கவும்.

4. சிவந்தவுடன் எண்ணெய் தடவிப் பரிமாறவும். தால், துவையல் அருமையான இணையுணவுகள்.

 

 

மசாலா சப்பாத்தி

Image

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
உப்பு- தேவையான அளவு
சுடுதண்ணீர்-தேவையான அளவு
எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

மசாலாப் பொருட்கள்:

பூண்டு- 3 பல்லு
கரம்மசாலாத்தூள்- 1 தேக்கரண்டி
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
கொத்தமல்லி இலை- அரைக்கைப்பிடி

செய்முறை:

1. பூண்டு, இஞ்சி துருவிக் கொள்ளவும், கொத்தமல்லி இலைகளை மண் போக அலசிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளமாக நறுக்கி மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, மசாலாப் பொருட்களைச் சேர்த்துச் சிறிது சிறிதாகச் சுடுதண்ணீர் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும்.

3. மாவை அடித்துப் பிசைந்த பிறகு எண்ணெய் அல்லது நெய் இட்டு மூடி வைக்கவும்.

4. எலுமிச்சை அளவு மாவை உருட்டிச் சப்பாத்திகளாக இட்டு கல் சூடானதும் போட்டு எடுக்கவும்.

5. வெந்ததும் எண்ணெய் தடவி இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. சாதா சப்பாத்தி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கும் இணையுணவு தயாரிக்க இயலாத சூழலில் இருப்பவர்களுக்கும் வித்தியாசமான சிற்றுண்டி.

2. காரம்சாரமாக உள்ள இவ்வகைச் சப்பாத்தியை வெறுமனே உண்ணலாம்.அவரவர் குடும்ப உறுப்பினர்களின் ரசனைக்கும் ருசிக்குமேற்பக் காரம் கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்.

3. இதற்குத் தால், தயிரே தொட்டுக் கொள்ளப் போதுமானது.

 

சப்பாத்தி

Image

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 2 கப்
உப்பு- தேவையான அளவு
பால்- 1/4 பங்கு
சுடுதண்ணீர்- 3/4 பங்கு
எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

செய்முறை:

1.sappathi

1. கோதுமை மாவு, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து சிறிது சிறிதாக பால், சுடுதண்ணீர் சேர்த்துப் பிசையவும்.

2. மாவுடன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

3. பிசைந்த சப்பாத்திமாவை ஈரத்துணியில் சுற்றி வைக்கலாம். அல்லது மாவைக் காற்றுப் புகா வண்ணம் மூடியிட்டு மூடி விடவும்.

4. இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஊறிய பிறகு மாவை உருட்டிச் சப்பாத்திகளாக இட்டுக் கல்லில் போட்டு எடுக்கவும்.

5. கல்லில் போட்டுப் முன்னும் பின்னும் வெந்ததும் திருப்பி எடுக்கலாம். எண்ணெய் அல்லது நெய் தடவிப் பரிமாறவும்.

sappathi

குருமா, தக்காளி கொத்ஸு, குடமிளகாய் கொத்ஸூ, உருளைக்கிழங்கு மசாலா, துவையல்,பாலக் பன்னீர், பாலக் சன்னா என்று அட்டகாசமான இணை உணவுகள் இருக்கின்றன. அவற்றைச் சப்பாத்தி-பூரிக்கான இணையுணவுகள் பகுதியில் பதிப்பிக்கவிருக்கிறேன்.