ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை

3

செய்முறை:

ஓட்ஸ்- 1 கப்
பச்சரிசிமாவு- 1 கப்
தேங்காய்த்துருவல்- 1/4 கப்
உப்பு- தேவையான அளவு
காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

தூவ:

மிளகாய்த்தூள்- சிறிதளவு
மிளகுத்தூள்- சிறிதளவு
இட்லி மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

2

1. மின்னரைப்பானில் ஓட்ஸைத் திரித்துக் கொள்ளவும்.
2. திரித்த ஓட்ஸ், அரிசிமாவைப் பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும்.
3. வழக்கமாகக் கொழுக்கட்டைக்குச் செய்வது போல சுடுதண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும்.
4. தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
5. அடுப்பை அணைத்து விட்டு சூடு லேசாக ஆறியதும் உருண்டைகள் ஆக்கவும்.
6. இட்லிப்பானையில் தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக்கட்டைகளை அடுக்கவும்.
7. ஆவியில் வேக விடவும்.
8. அவை வெந்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
9. கொழுக்கட்டை தயாரானதும் ஓரிரு நிமிடங்கள் வெளியே வைத்து சூடு ஆற விடவும்.
10. தாளித்தப் பொருட்களுடன் கொழுக்கட்டைகளைப் பிரட்டி எடுக்கவும்.
11. அப்போது முப்பொடிகளைத்(மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி) தூவிப் பிரட்டவும்.
12. மிகவும் ருசியாக இருக்கும் ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை. அம்மிணிக்கொழுக்கட்டையின் பாணியில் செய்வதால் ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை என்ற நாமகரணம்.

1

ஓட்ஸை வைத்துக் கொண்டு என்னடா செய்வது என்று திருதிருவென விழித்துக் கொண்டிருக்க வேண்டாம். இனி ஓட்ஸில் விதவிதமான சமையலைச் செய்து அசத்தலாம். உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

அம்மிணிக்கொழுக்கட்டை பாணியில் செய்யாமல் தாளித்ததை வதக்கிய கொழுக்கட்டைமாவுடன் சேர்த்தே ஆவியில் வேக வைக்கலாம்.

 

 

அரிசிமாவு கொழுக்கட்டை

Image

தேவையானவை:

பச்சரிசி மாவு- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்- 1/4 மூடி
காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி

செய்முறை:

1. அரிசி மாவைச் சிவக்க வறுக்கவும்.
2. தண்ணீரைச்(ஒன்றுக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் கணக்கு, ஆனால் கண்ணளவில் பார்த்து பார்த்தே சேர்க்க வேண்டும், தண்ணீர் அதிகமாகச் சுட வைத்துக் கொண்டாலும் சிறிது சிறிதாகவே ஊற்றி வர வேண்டும்) சுட வைத்து உப்பு சேர்த்து வதக்கிய மாவில் சேர்க்கவும்.
3. தாளிசப் பொருட்களைச் சேர்த்து(பாதியை இப்போதும் கொழுக்கட்டைகள் வெந்து வந்த பிறகு மீதியைச் சேர்க்க வேண்டும்)மாவில் கிளறவும்.
4. மாவை உருண்டைகள் பிடித்து இட்லித்தட்டுகளில் பரப்பி வேக விடவும்.
5. ஒரு கைப்பிடி பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
6. கொழுக்கட்டைகள் வெந்து வந்ததும் தாளிசப்பொருட்களின் பாதியையும் வறுத்தப் பாசிப்பருப்பையும் தேங்காய்த்துருவலையும் போட்டுக் கலந்து கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
7. சுவையான அரிசிமாவு கொழுக்கட்டைக்குத் தக்காளிச்சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி, தொக்கு வகைகள் சிறந்த இணைகள்.

 

அம்மிணிக் கொழுக்கட்டை

எளியமுறை:

Ammini kolukkattai

தேவையானவை:

பச்சரிசி மாவு- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி
காரப்பொடி – சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. அரிசிமாவைச் சிவக்க வறுக்கவும்.
2. தனியொரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடுபடுத்தவும். உப்பும் சேர்க்கவும்.
3. அரிசி மாவு கெட்டியாகும் வரைச் சிறிது சிறிதாகத் தண்ணீரை ஊற்றிக் கிளறவும்
4. மாவு கெட்டியானதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
5. கொழுக்கட்டைகள் வேகுவதற்குள் வாணலியில் எண்ணெயிட்டுத் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
6. வெந்த கொழுக்கட்டைகளைத் தாளிசப் பொருட்களுடன் சேர்க்கவும்.
7. காரப் பொடியைச் சிறிதளவு சேர்த்து பிரட்டவும்(பச்சைமிளகாயும் சேர்ப்பதால் காரப்பொடியைச் சிறிதளவே சேர்க்க வேண்டும்)
8. காரக்கொழுக்கட்டையில் வேக வைக்கும் முன்பு வதக்கும் போது காரப்பொடி சேர்ப்போம், அது ஒரு சுவை, இது வெந்து கொழுக்கட்டைகளை வதக்கி அப்போது சேர்ப்போம், இது ஒரு சுவை.

சற்றுப் பொறுமையுடன் செய்ய வேண்டிய முறை:

1. பச்சரிசி இரண்டு கப் எடுத்து கழுவி தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
2. நீரை வடிகட்டி அப்படியே பிசிறி வைக்கவும்.
3. அரை மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து ஒரு வெள்ளைத் துண்டில் பரப்பி ஆற விடவும். பத்து நிமிடங்கள் கழித்து மின்னரைப்பானில் நன்றாகப் பொடிக்கவும். மாவு மிகப் பொடியாக இருக்க வேண்டியது அவசியம்.
4.வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் 4 கப் நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
5. கொதி வந்ததும் பொடித்த மாவைத் தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.
6. மாவு நன்றாக சுருண்டு ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
7. சிறிய உருண்டைகளாக்கி மேற்கூறிய முறையில் வேக வைத்துத் தாளித்துப் பரிமாறவும்.
8. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் இம்முறையில் செய்யலாம், இல்லாதவர்கள் பச்சரிசி மாவிலேயே செய்து கொள்ளலாம், அதுவும் நன்றாக வரும்.

உளுத்தம் கொழுக்கட்டை

Image

தேவையானவை:

 

பச்சரிசி மாவு – 3 டம்ளர்
உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் (100 கிராம்)
மிளகாய்வற்றல் – 6
தேங்காய் – கால்மூடி
உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து

 

செய்முறை:

 

பூரணம் செய்ய:

 

1. உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து கொஞ்சம் நீர் சேர்த்து மிளகாய்வற்றலுடன் உப்பும் சேர்த்துக் கரகரப்பாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த உளுந்தை இட்லித்தட்டுகள் அல்லது மைக்ரோவேவ்வில்(5 நிமிடங்கள்) வேக விட்டு வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி உதிர்க்கவும்..
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பச்சைமிளகாய் சின்ன சின்னதாக நறுக்கி, இஞ்சி போட்டு தாளித்துக் கொள்ளவும்.
4. பிறகு தாளித்ததில் உளுத்தம் மாவைக் கொட்டி கிளறி பொல பொல வென்று பூரணம் தயார் செய்யவும். உளுத்தம்மாவில் தேங்காய்த்துருவலையும் சேர்க்கவும்.

 

மேல்மாவு செய்ய:

 

1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
2. பச்சரிசி மாவைப் பச்சை வாடை போக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி கொதித்தத் தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும்.
3. பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும் போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலைஅல்லது ஜிப்லாக் கவரில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.

 

கொழுக்கட்டை செய்ய:

 

1. தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை நடுவில் வைத்து மாவை சமமாக மடித்து ஓரங்களை ஒட்டவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டைகளாகத் தயாரித்துக் கொள்ளவும்.
2. பிறகு இட்லி குக்கரில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
3. சுவையான, ஆரோக்கியமான உளுத்தம் கொழுக்கட்டை தயார். எலும்புகளைப் பலப்படுத்தும் உளுத்தம் கொழுக்கட்டையை மாதம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும்.
4.வரலெட்சுமி நோன்பின் போதும் நவராத்திரி காலங்களிலும் இவ்வகைக் கொழுக்கட்டைகளை நைவேத்தியமாக்கிப் பிறருக்கும் வழங்கலாம்.

அவல் கொழுக்கட்டை

Image

தேவையானவை:

வெள்ளை அவல் அல்லது சிவப்பு அவல்- 2 டம்ளர்
தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
காயம்- சிறிதளவு
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு

செய்முறை:

1. அவலைத் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.
2. ஊறிய அவலைக் கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துப் பிசையவும்
3. அடுப்பை ஏற்றி வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு மசித்த அவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்
4. தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கி ஆற விட்டு உருண்டைகள் பிடித்து இட்லி குக்கரில் வேக விடவும்(மற்ற கொழுக்கட்டைகள், இட்லி போல அதிக நேரங்கள் வேக விடத் தேவையில்லை, ஐந்தே நிமிடங்கள் போதுமானது)
5. கொழுக்கட்டைகள் வெந்ததும் தக்காளிச்சட்னி அல்லது புதினாச்சட்னியுடன் பரிமாறவும். மிளகாய்ப்பொடி கூட அருமையான இணை.
6. வெங்காயம், கேரட் துருவிப் போட்டும் செய்யலாம்.
7. வெறும் தண்ணீரில் ஊற வைக்காமல் புளித்தண்ணீரில் ஊற வைத்தால் புளி அவல் கொழுக்கட்டை, புளி நீரில்லாமல் மோரில் ஊற வைத்துச் செய்தால் மோர் அவல் கொழுக்கட்டை.

கூடுதல் குறிப்புகள்:

1. செய்வதற்கு எளிமையான மற்ற கொழுக்கட்டைகள் போல அதிக மெனக்கெடல் இல்லாத வித்தியாசமான சிற்றுண்டி.

2. திடீர் விருந்தினரைச் சமாளிக்கவும் குழந்தைகளின் ரசனைக்குத் தீனி போடவும் ஏற்றது.

3. உருண்டைகளாகப் பிடிக்காமல் பிடி கொழுக்கட்டையாகவும் பிடித்து வைக்கலாம்.

4. வெள்ளை அவலில் ஒரு நாளும் சிவப்பு அவலில் ஒரு நாளும் செய்து பார்க்கலாம்.

5. நவராத்திரியின் போதோ பண்டிகை நாட்களிலோ நைவேத்தியத்திற்கு ஏற்றது, மடி சமையலின் போதும் செய்வதற்கு நல்லது,

காரக்கொழுக்கட்டை

Image

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு- ஒரு கிண்ணம்
காரப்பொடி- 1 தேக்கரண்டி
தேங்காய்- 1/4 கிண்ணம்
எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கறிவெப்பிலை- 1 இணுக்கு
காயம்- 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. பச்சரிசி மாவை ஒரு வாணலியில் பச்சை வாடை போக சிறிது வறுத்துக் கொள்ளவும்.
2. வறுத்த மாவுடன் உப்பு, காயம், காரப்பொடி போட்டு கலந்து மிதமான தீயில் வதக்கவும்.
3. 3/4 டம்ளர் நீரைச் சுட வைக்கவும்
4. எண்ணெயில் கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சுடு நீருடன் சேர்க்கவும்.
5. சுடு தண்ணீரை மாவுடன் சிறிது சிறிதாகக் கலக்கவும். துருவின தேங்காயைச் சேர்த்து நன்றாக மாவைக் கிளறவும்.
6. மாவை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
7. மாலை நேரத்து சுவை மிகுந்த சிற்றுண்டி இது.சூடான சுவையான இவ்வகை காரக்கொழுக்கட்டைகள் எனக்கு உனக்கு என்று போட்டி போட்டபடியே வியாபாரம் ஆகும்.

கூடுதல் கவனத்திற்கு:

1. அதிகத் தண்ணீர் விட்டால் மாவு உருண்டைகள் பிடிக்க வராது.
2. காரப்பொடியைப் பார்த்து அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
3. தேங்காய் போட்டால் சீக்கிரம் கெட்டு விடும். பண்ணின சில மணி நேரங்களிலேயே சாப்பிட்டு விட வேண்டும்.

அரிசி உப்புமா கொழுக்கட்டை

Image

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-1 டம்ளர்
தேங்காய்-கால் மூடி
கடுகு-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
மிளகாய்வற்றல்-2
கறிவேப்பிலை-1 இணுக்கு
காயம்-சிறிதளவு
எண்ணெய்-1 டீஸ்பூன்

செய்முறை:

1.பச்சரிசியைச் சுடுதண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.தனியே ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும்.
2.அரிசியைக் களைந்து அதனுடன் துருவிய தேங்காயில் பாதியையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும்.(தண்ணீர் அதிகம் சேர்க்கவோ மையாக அரைக்கவோ வேண்டாம், நறநற பதம் போதும்.)
3.வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து விட்டு அரைத்த அரிசியைச் சேர்க்கவும்.
4.அதனுடன் பாதி தேங்காய்த்துருவலையும் சேர்க்க வேண்டும்.
5.கொதிக்கும் நீரில் வதக்கிய அரிசிக்கலவையைச் சேர்க்க வேண்டும்.
6.உப்புமாவிற்குக் கிளறுவது போல் கிளற வேண்டும்.
7.உப்பு,காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு உருண்டைகள் உருட்டவும்.
8.இட்லிக்குக்கரில் தண்ணீர் விட்டு இட்லித்தட்டுகளில் உருட்டிய உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
9.கொழுக்கட்டை வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.

கூடுதல் குறிப்புகள்:

1.திடீர் விருந்தினர்களைச் சமாளிக்கவும் பள்ளி,கல்லூரி சென்று சோர்வாக வரும் பிள்ளைகளையும் அசத்த அருமையான சிற்றுண்டி இது.

2.ஆரோக்கியமான அசத்தலான சத்துள்ள அரிசிக்கொழுக்கட்டையை அரை மணி நேரத்திற்குள் செய்து விடலாம்.

3.முதலில் செய்து பார்ப்பவர்கள் சிறிய அளவுகளை எடுத்துக் கொண்டு செய்து பார்க்கவும். அனுபவம் கிடைத்தவுடன் அதிகம் செய்து கொள்ளலாம்.

4.உப்புமா பதத்திற்குக் கொழுக்கட்டை மாவு வந்திருக்க வேண்டும்.அப்போதே உப்பு போதவில்லையென்றால் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் அரைத்து வதக்கிய அரிசிக் கலவையைக் கொதிக்கும் நீரில் போடும் போது சிறிது சுடு நீரைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். தண்ணீர் அதிகமானால் வதங்க ரொம்ப நேரமாகும். உருண்டை பிடிக்கவும் வராது.

5.புழுங்கலரிசியை ஊற வைத்தும் செய்யலாம்(3 மணி நேரம் ஊற வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டு செய்யத் தேவையில்லை, மேற்கூறியது எளிய முறையானாலும் அபார சுவை).