வறுத்தரைத்த மோர்க்குழம்பு

morkulambu (2)

தேவையானவை:

குடமிளகாய்- 1
கத்திரிக்காய்- 2
வெண்டைக்காய்- 6
தயிர்- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு- 1 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
வெந்தயம்- 1 தேக்கரண்டி
இஞ்சி- 1 துண்டு
மிளகாய்வற்றல்- 4
தேங்காய்- கால் மூடி

தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை வதக்கி(தேங்காய் தவிர) ஆற விட்டு மின்னரைப்பானில் அரைக்கவும். தேங்காயைப் பச்சையாகப் போடாமல் வறுத்தும் போடாமல் வறுத்தப் பொருட்களை ஆற விடும் போது அந்த சூட்டிலேயே போட வேண்டும். ஆறியதும் அரைக்க வேண்டும். நன்றாக அரைத்ததும் தயிரையும் மின்னரைப்பானில் போட்டு ஒரு சுற்றுக்கு அரைக்க வேண்டும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு குடமிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காயைப் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
3. பிறகு தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய்களை வேக விட வேண்டும்.
4. வறுத்து அரைக்க வேண்டியதை அரைத்து காய் வெந்ததும் அரைத்தக் கலவையைப் போட வேண்டும். அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.
5. தயிர் விட்டதால் அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது. ஒரு பத்து நிமிடங்கள் குழம்பு கொதித்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும். தாளித்ததைக் குழம்பில் கொட்டி இறக்க வேண்டும்.

மோர்க்குழம்பிற்கு பீன்ஸ் அல்லது அவரைக்காய் பருப்புசிலி அருமையான இணை.

புளியிட்ட கீரை

puliyitta keerai

தேவையானவை:

அரைக்கீரை அல்லது பசலைக்கீரை- ஒரு கட்டு
புளி- எலுமிச்சை அளவுக்கும் சிறிது மேலே
வெந்தயம்- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2

 

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. புளியை நன்றாகக் கரைத்து வைக்கவும்.
2. மண் போகக் கீரையை அலசி வைக்கவும்.
3. மிதமான சூட்டில் ஒரு வாணலியில் வெந்தயத்தையும் மிளகாய்வற்றலையும் சிவக்க வறுத்துத் தனியே வைக்கவும்.
4. பிறகு ஒரு பாத்திரத்தில் கீரையைப் போட்டு 2 டம்ளர் அளவு கரைத்துள்ள புளிக்கரைசலை விடவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
5. வறுத்து வைத்துள்ள வெந்தயம், மிளகாய்வற்றலைக் கீரை, புளிக்கலவையுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. கீரை வெந்ததும் காற்றாட ஆற விட்டு பிறகு மின்னரைப்பானில் அரைக்கவும்.
7. நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும்.
8. அரைத்தப் புளியிட்ட கீரையுடன் கடுகு தாளிசத்தைச் சேர்க்கவும்.
9. செய்வதற்கு எளிதான புளிப்பான புளியிட்ட கீரையை பத்து நிமிடங்களில் தயாரித்து விடலாம்.
10. குழம்பு செய்வதற்குப் பதிலாகப் புளியிட்ட கீரையும் பொரியல், அப்பளம் செய்து உண்ணலாம்.

காராமணி மாங்காய்க்குழம்பு

IMG_4776

தேவையானவை:

 
வேக வைத்தக் காராமணி – 1 குவளை
மாங்காய்- சிறியது ஒன்று
வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 கப்
புளி- நெல்லிக்காய் அளவு
சாம்பார் தூள்- 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- சிறிதளவு
காயம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- சிறிதளவு
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
மிளகாய்வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. காராமணியை ஒரு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் தண்ணீர், உப்பு சேர்த்து காராமணியை 3 விசில் வருமாறு வேக விடவும். துவரம்பருப்பைக் குழைவாக வேக வைக்கவும்.
2. ஒரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு தோல் சீவிய மாங்காயை நன்றாக வதக்கவும்.
3. வேக வைத்தக் காராமணியைச் சேர்த்து புளிக்கரைசல்(3 டம்ளர்) விடவும்.
4. இதனுடன் உப்பு, சாம்பார் தூள், காயம்சேர்த்து வேக விடவும்.
5. காயும் பயறும் வெந்ததும் வேக வைத்தப் பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
6. நல்லெண்ணெய் சிறிது விட்டுக் கறிவேப்பிலை கிள்ளிப் போட்டுப் பரிமாறவும்.
7. சாதம், தோசை, இட்லி போன்றவற்றிற்கு அருமையான இணையுணவு. புளிப்பும் காரமும் சேர்ந்த மணமணக்கும் குழம்பு இது. வெங்காயம்  சேர்க்க விரும்புவர்கள் மாங்காயை வதக்கும் முன் வெங்காயத்தைப்  பச்சை வாசனை போக வதக்கிச் சேர்க்கலாம்.

கீரை பொரித்தகரை

Image

தேவையானவை

கீரை(பசலை/அரை/தண்டு)- ஒரு கட்டு
தேங்காய்- 1/4 மூடி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 4

செய்முறை:

1. கீரையை மண் போக அலசிக் கொள்ளவும்
2. கொதிக்கும் சுடு நீரில் கீரையைப் போட்டு வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
3. துருவிய தேங்காய், சீரகம், மிளகாய்வற்றலைச் சேர்த்து மின்னரைப்பானில் ஆறிய கீரையுடன் சேர்த்து அரைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிசம் செய்யவும்.
5. சுவையும் ஆரோக்கியம் மிகுந்த கீரை பொரித்தகீரையைச் சில நிமிடங்களில் எளிதில் செய்து விடலாம்.
6. எவ்விதப் பொரியலும் பொருந்தும் இக்குழம்பிற்கு அப்பளம் சிறந்த இணை.
7. காரம் அவரவர் விருப்பத்திற்கேற்றாற் போலக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

கீரைக்கரை

Image

பொரிச்சகரைக்குச் சொன்ன அதே செய்முறையே இதற்கும், காய்களுடன் கீரையைச் சேர்ப்பது தான் கீரைக்கரை.

தேவையானவை:

கீரை- ஒரு கட்டு
வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 டம்ளர்
உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
காரட்- 1
முருங்கைக்காய்- 1
பீன்ஸ் அல்லது புடலங்காய்- சிறிதளவு
(மேற்குறிப்பிட்ட காய்களில் 2 அல்லது 3 காய்கள் இருந்தால் கூடப் போதும்)
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

வறுக்க:

மிளகு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5

அரைக்க:

தேங்காய்- 1/2 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. மிளகு, மிளகாய்வற்றலை ஒரு வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும்.
2. காய்களை அலம்பிப் பொடியாக நறுக்கி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. வறுத்துத் திரித்த மிளகு, மிளகாய்வற்றல் பொடியைச் சேர்த்து அதில் காய்களை வேக விடவும், காய்கள்(வாழைக்காய் சேர்க்கும் போது வேக நேரம் எடுக்கும் என்பதால் அதை முதலில் சேர்க்க வேண்டும்) பாதி வெந்ததும் கீரையைச் சேர்க்கவும்(கீரை எளிதில் வெந்து விடுமாதலால் கடைசியாகச் சேர்க்கிறோம்)
4. பருப்பைக் குழைவாக வேக வைத்துத் தனியே வைக்கவும்
5. மின்னரைப்பானில் தேங்காய், சீரகத்தை அரைத்துத் தயாராக வைக்கவும்.
6. காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்து அரைத்தத் தேங்காய்க்கலவையையும் கொட்டி தாளிசம் செய்து இறக்கவும்.
7. குழம்பு தண்ணியாக வந்து விட்டால் 2 தேக்கரண்டி பச்சரிசி மாவைத் தண்ணீரில் கரைத்துக் குழம்பில் கொட்டி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும்.
8. சுவையான கீரைக்கரை தயார், கீரைக்கரை செய்யும் போது பருப்பைத் தனியே எடுத்து பருப்பு ரசம் செய்து குழைவான சாதத்தில் ரசத்தைப் பிசைந்துத் தொட்டுக் கொள்ள கீரைக்கரையை விட்டுக் கொண்டால் தேவாமிர்தம் தான். தயிர்சாதத்துடனும் கீரைக்கரை அசத்தல் இணையாகும்.

கூடுதல் தகவல்கள்:

1. பாசிப்பருப்பை வேக வைத்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அல்லது பாசிப்பருப்பும் துவரம்பருப்பும் சரி பாதி அளவாக எடுத்து வேக வைத்துச் செய்யலாம்
2. காய்களைப் பெரிதாக நறுக்கிச் செய்தால் அதனைப் கீரைபொரிச்ச குழம்பு என்றும் பொடியாக நறுக்கிச் செய்தால் கீரைக்கரை என்றும் அழைக்கிறார்கள்
3.தண்ணீர் குறைவாக விட்டு வேக வைத்துச் செய்தால் இதுவே கீரைபொரிச்ச கூட்டு.
4. வறுக்கும் போது மிளகின் அளவைக் கூட்டி மிளகாய்வற்றலின் அளவைக் குறைத்துச் செய்தால் இதுவே மிளகு கீரைக்கரை.

பொரிச்சகரை

Image

தேவையானவை:

வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 டம்ளர்
உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
காரட்- 1
முருங்கைக்காய்- 1
பீன்ஸ் அல்லது புடலங்காய்- சிறிதளவு
(மேற்குறிப்பிட்ட காய்களில் 2 அல்லது 3 காய்கள் இருந்தால் கூடப் போதும்)
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

வறுக்க:

மிளகு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5

அரைக்க:

தேங்காய்- 1/2 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. மிளகு, மிளகாய்வற்றலை ஒரு வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும்.
2. காய்களை அலம்பிப் பொடியாக நறுக்கி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. வறுத்துத் திரித்த மிளகு, மிளகாய்வற்றல் பொடியைச் சேர்த்து அதில் காய்களை வேக விடவும்
4. பருப்பைக் குழைவாக வேக வைத்துத் தனியே வைக்கவும்
5. மின்னரைப்பானில் தேங்காய், சீரகத்தை அரைத்துத் தயாராக வைக்கவும்.
6. காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்து அரைத்தத் தேங்காய்க்கலவையையும் கொட்டி தாளிசம் செய்து இறக்கவும்.
7. குழம்பு தண்ணியாக வந்து விட்டால் 2 தேக்கரண்டி பச்சரிசி மாவைத் தண்ணீரில் கரைத்துக் குழம்பில் கொட்டி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும்.
8. சுவையான பொரிச்சகரை தயார், இதற்கு முட்டைக்கோஸ், பீன்ஸ், வெண்டைக்காய் பொரியல்கள் அட்டகாசமான இணைகள்.

கூடுதல் தகவல்கள்:

1. பாசிப்பருப்பை வேக வைத்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அல்லது பாசிப்பருப்பும் துவரம்பருப்பும் சரி பாதி அளவாக எடுத்து வேக வைத்துச் செய்யலாம்
2. காய்களைப் பெரிதாக நறுக்கிச் செய்தால் அதனைப் பொரிச்ச குழம்பு என்றும் பொடியாக நறுக்கிச் செய்தால் பொரிச்சகரை என்றும் அழைக்கிறார்கள்
3.தண்ணீர் குறைவாக விட்டு வேக வைத்துச் செய்தால் இதுவே பொரிச்ச கூட்டு.
4. வறுக்கும் போது மிளகின் அளவைக் கூட்டி மிளகாய்வற்றலின் அளவைக் குறைத்துச் செய்தால் இதுவே மிளகு பொரிச்சகரை.

சாம்பார்

Image
சாம்பார் பொடியைப் பலவகைகளில் செய்யலாம், அதனைப் பொடி வகைகள் பகுதி ஒன்றைத் தொடங்கி அதில் எழுதலாமென எண்ணுகிறேன். இப்போது எளிய விதத்தில் சாம்பார் செய்யும் முறையைப் பதிகிறேன். ஒரே வீட்டில் வாழும் அம்மா, அக்கா, தங்கை வைக்கும் சாம்பார் ருசி வேறுபடுவதன் காரணம் ஊருக்கு ஊர் தண்ணீர் மாறுபடும், தீயின் அளவு, பாத்திரத்தின் அமைப்பு ஆகியவையே. செய்யும் விதம், காய்களின் கூட்டணி போன்றவை ஒவ்வொருவரின் கைப்பக்குவத்தையும் ஒவ்வொரு ருசியாக்குகிறது.இனி சாம்பார் செய்முறையைக் காண்போம்.

தேவையானவை:

குழைய வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 குவளை(கப்)
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

காய்கள்:

சின்ன வெங்காயம், தக்காளி & முருங்கைக்காய்
அல்லது
குடமிளகாய், கேரட், தக்காளி
அல்லது
முள்ளங்கி, கேரட், பீன்ஸ், தக்காளி
அல்லது
பெரிய வெங்காயம், பூசணிக்காய், தக்காளி
வெண்டைக்காய், தக்காளி

சாம்பார் பொடி வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
தனியா- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- சிறிதளவு
துவரம்பருப்பு- 1/4 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம்- சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் அல்லது நெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 11/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

Image
1. குக்கரில் பருப்பைக் குழைய வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. காய்களை அலம்பி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.(எந்தெந்த காய்கள் கூட்டணி நன்றாக இருக்குமென்பதைத் தேவையானவை பகுதியில் எழுதியிருக்கிறேன்)
3. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
4. வறுத்துத் திரிக்க வேண்டியவற்றைத் திரிக்கவும்(ஒன்றாகவே எண்ணெய் விட்டு வதக்க வேண்டும், மிளகாய்வற்றலைத் தனியாக வதக்கி, மற்றவற்றைத் திரித்தப் பின் கடைசியில் மிளகாய்வற்றலைச் சேர்க்கத் திரிபட்டு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும்)
5. வாணலியில் எண்ணெயிட்டு சின்னவெங்காயத்தைச் சிவப்பாக வறுக்கவும்.
6. பிறகு தக்காளி, முருங்கைக்காயும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டுக் கரைத்து வைத்தப் புளிக்கரைசலை(3 டம்ளர்) விடவும், உப்பு, மஞ்சள் தூள் போடவும்.
7. வறுத்துத் திரித்தப் பொடியைக் குழம்பில் சேர்க்கவும்.
8. காய் வெந்து ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள துவரம்பருப்பைப் போடவும்.
9. தனியே சிறு வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யிட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து குழம்பில் சேர்க்கவும்.
10. கொத்தமல்லி தூவி அலங்கரிக்க ருசியான சாம்பார் தயார். சாதம், இட்லி, தோசை, பொங்கல் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம், பீன்ஸ், கோஸ், அவரைக்காய், காலிபிளவர், கேரட் போன்ற எவ்வகை பொரியலும் அவியல், கூட்டு வகைகளும் சாம்பாருக்கு இணையாகும்.

கூடுதல் தகவல்கள்:

1. வறுத்துத் திரிக்க நேரமில்லாதவர்கள் சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம், புதிதாக வறுத்துத் திரிக்கும் போது தனியாவின் வாசம் சாம்பாரின் மணத்தைக் கூட்டும்.
2. வறுத்துத் திரிக்கக் கொடுத்தத் தேக்கரண்டி அளவை கப் அளவாக மாற்றிச் சிவக்க வறுத்துத் திரித்துக் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் சாம்பார் செய்வது சுலபம்.
3. ஒரே காய் போட்டு சாம்பார் செய்யாமல் பலவிதக் காய்கள் போட்டு செய்வதால் உடலிற்குச் சத்துக்கள் கிட்டும்.
4. உப்பு போட்டு ஊற வைத்து, காய வைத்த மாங்காய்த்துண்டுகளைச் சாம்பாரில் போட அதுவும் தனிச் சுவையைக் கொடுக்கும்.
5. காரம் அவரவருக்குத் தக்கக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
6. புளித்தண்ணீரில் காய் வேக நேரமெடுக்கும் என்பதால் அதிகமாகக் காய்கள் போட்டு சாம்பார் செய்யும் போது உப்பு, மஞ்சள் பொடியிட்டு காய்கள் வெந்த பிறகு புளித்தண்ணீரை விடலாம்.
7. முதலிலேயே தாளித்துக் கொண்டு அதிலே காய்களை வதக்கிச் சாம்பார் செய்யலாம், இவ்வகையில் சாம்பாருக்கென்று தனியே தாளிக்கும் வேலையும் பாத்திரமும் மிச்சமாகும்.
8. மேற்கூறிய வகையில் பாசிப்பருப்பு சாம்பாரையும் செய்து பார்க்கலாம், அல்லது பாசிப்பருப்பு 1/2 கப், துவரம்பருப்பு 1/2 கப் என்ற விகிதத்தில் செய்து பார்க்கலாம்.
9. வறுத்துத் திரிக்கும் போது 1 தேக்கரண்டி அரிசியையும் வறுத்துத் திரித்தால் சாம்பார் கெட்டியாக வரும்(துவரம்பருப்பு குறைவாக இருக்கும் போது தண்ணியாகக் குழம்பு வைப்பதற்குப் பதிலாக பொடி செய்யும் போது அரிசியையும் வறுத்துத் திரித்துச் செய்ய கெட்டியாக வரும்.

 

பருப்புருண்டைக்குழம்பு

Image

தேவையானவை:

துவரம்பருப்பு- 1 கிண்ணம்
மிளகாய்வற்றல்- 3
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

வறுத்துத் திரிக்க:

வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
தனியா- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 4 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தெக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1

உருண்டைகள் செய்முறை:

1. துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்தப் பருப்பைக் களைந்து விட்டு தண்ணீர் விடாமல் உப்பு, காயம், மிளகாய்வற்றல் போட்டு மையாக அரைக்காமல் நற நறவென்று அரைத்து எடுக்கவும்.
3. மைக்ரோவேவ் இருப்பவர்கள் அரைத்ததை ஐந்து நிமிடங்கள் வைத்து எடுக்கலாம், அல்லது இட்லித்தட்டில் அரைத்தக் கலவையைப் பரப்பி வெந்து எடுக்கலாம்.
4. ஒரு வாணலியில் குறைந்த தீயில் எண்ணெய் விட்டு வேக வைத்தப் பருப்பை வதக்கவும்.
5. ஆற விட்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்(குழம்பில் ஊறிப் பெரிதாக வரும்)
6. சிலர் எண்ணெயில் பொரித்து வைத்தும் குழம்பில் போடுவார்கள், இவ்வகையில் உருண்டைகள் உடையாது, குழம்பும் சீக்கிரம் தயாராகும்.

குழம்பு செய்முறை:

1. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.

2. வறுக்கக் கொடுத்தவற்றைச் சிவக்க வறுத்து எடுக்கவும்(வெந்தயம், கடலைப்பருப்பு, தனியாவை வறுத்துத் தனியே வைத்து விட்டு கடைசியில் மிளகாய்வற்றலை வறுக்க வேண்டும்)

3. மின்னரைப்பானில் திரிக்கும் போது மிளகாய்வற்றலைக் கடைசியில் போட்டுத் திரிக்க வேண்டும். வறுத்துத் திரிப்பதற்குப் பதிலாக சாம்பார் பொடியையே பயன்படுத்தலாம்.

4. வாணலியை ஏற்றி எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு,கரைத்தப் புளித்தண்ணீரை 3 டம்ளர் அளவு விட்டு உப்பு, மஞ்சள் தூள், வறுத்துத் திரித்த பொடி அல்லது சாம்பார் பொடி போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.

5. பிடித்து வைத்த உருண்டைகளைக் கொதிக்கும் புளித்தண்ணீரில் போட வேண்டும், போட்டவுடன் கரண்டி வைத்து அமுக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் உடைந்து விடும், தீயையும் குறைத்து விட வேண்டும்.

6. முதலில் 5, 6 உருண்டைகளைப் போட்டு அது வெந்து மேலே வரும் போது மீதி உருண்டைகளைப் போடவும்.

7. குழம்பு கெட்டியாக வந்தால் கொஞ்சம் நீர் விடலாம், தண்ணியாக இருந்தால் 1 தேக்கரண்டி பச்சரிசி மாவைக் கரைத்துக் கொட்டி கறிவேப்பிலை போட்டு இறக்கவும்..

8. முட்டைக்கோஸ், பீன்ஸ், அவரைக்காய் பொரியல் என்று எவ்வகைப் பொரியலும் இக்குழம்பிற்கு இணையாகும்.

பின் குறிப்புகள்:

பருப்புருண்டைக் குழம்பு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள், குறைந்த தீயில் செய்ய வேண்டும், புளி நீர் அதிகம் கொதிக்க விட்டுப் பின் உருண்டைகளைப் போடக் கூடாது. உருண்டைகளைப் போட்டதும் கரண்டியால் நசுக்கக் கூடாது.

சுண்டக்காய் வத்தக்குழம்பு

Image

தேவையானவை:

சுண்டைக்காய் வற்றல்- 4 தேக்கரண்டி
புளி- இரண்டு எலுமிச்சை அளவு

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
தனியா- 1 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5
பெருங்காயம்- சிறிதளவு
பூண்டு- 3 பல்லு
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- சிறிதளவு

Image

செய்முறை:

1. புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பத்து நிமிடங்கள் ஊறட்டும்.

2. ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுண்டக்காய் வத்தலை வறுக்கவும்

3. ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வத்தலையும் அதில் போடவும். தீயை மிதமாக்கவும்.

4. இதனுடன் சிறிதளவு உப்பு(ஏற்கனவே சுண்டைக்காய் வத்தலிலும் உப்பு உள்ளதால்) சேர்த்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.

5. வறுக்கக் கொடுத்த பொருட்களைச் சிவக்க வறுத்து ஆற விடவும்.பெரிய வெங்காயத்தையும் பூண்டையும் சிவக்க வறுத்து விட்டு, தக்காளியையும் வதக்கவும். ஆறிய பின் அனைத்தையும் ஒன்றாக மின்னரைப்பானில் அரைத்துக் கொள்ளவும்.

6. அரைத்ததைக் கொதிக்கும் குழம்பில் கொட்டவும்.

7. சிறிது நேரத்தில் கெட்டியாகும், ஆனவுடன் நல்லெண்ணெயைச் சூடாக்கிக் குழம்பில் கொட்டவும்.

8. கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு அலங்கரிக்கவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. சுண்டைக்காயில் வைட்டமின் சி , புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
2. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், பெண்களின் கர்ப்பகாலத்தில் தோன்றும் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
3.சுண்டைக்காய்க்குப் பதிலாக மணத்தக்காளி வற்றலை வதக்கிச் சேர்த்தும் மேற்கூறிய முறையில் குழம்பு செய்யலாம்(சுண்டைக்காயை விட மணத்தக்காளி வதங்கும் நேரமும் குறைவு)
4. விரும்புவர்கள் மேற்கூறிய முறையில் குழம்பு செய்யும் போது வெல்லமும் சிறிது சேர்க்கலாம்.
5. தயிர்சாதம், பொங்கல், சாதம், இட்லி, தோசைக்கு இணையாகும் இந்தச் சுண்டைக்காய் வற்றல் குழம்பு.
6. சாதத்துடன் உண்ணும் போது அப்பளம், வடகம், பருப்புசிலி போன்றவை அருமையான இணை உணவுகள்.
7. இவ்வகை வத்தக்குழம்பைச் செய்த மறு நாள் சாப்பிட புளிப்புச் சுவையுடன் இன்னும் ருசி அதிகமாக இருக்கும்.
8. புளிப்புடன் உள்ள குழம்பு என்பதால் கண்டிப்பாக தயிர்சாதமோ ஒரு குவளை நீர்மோரோ அருந்த வேண்டும்.

 

 

 

 

 

 

பொரித்தக் குழம்பு

Image

தேவையானவை:

துவரம்பருப்பு- 1 டம்ளர்
தேங்காய்- அரை மூடி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5
உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
கேரட்- 1
முருங்கைக்காய்- 1
செள செள- 1
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.

2. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்(பெரிதாக நறுக்கினால் பொரித்தக் குழம்பு, பொடிதாக நறுக்கினால் பொரிச்சக்கரை)

3. அடுப்பில் 2 டம்ளர் தண்ணீரில் வாழைக்காய்(முதலிலே வேக வைக்கவும்), உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், செளசெள, கேரட் போன்றவற்றை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.

4. வேறொரு வாணலியில் மிதமான சூட்டில் மிளகு, மிளகாய்வற்றலை வறுத்துப் பொடியாகத் திரிக்கவும்.

5. காய்கள் வேகும் தண்ணீரில் வறுத்துத் திரித்தப் பொடியைச் சேர்க்கவும்.

6. காய்கள் வெந்தவுடன் வேக வைத்தத் துவரம்பருப்பைச் சேர்க்கவும்.

7. மின் அரைப்பானில் தேங்காய், சீரகத்தைச் சேர்த்து அரைத்து குழம்புடன் சேர்க்கவும்.

8. குழம்பை இறக்கும் போது தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிசம் செய்யவும்.

9. சிறிதளவு தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்து தாளித்ததைச் சேர்க்கும் போது சேர்க்க கமகம பொரிச்சகரை தயார்.

கூடுதல் குறிப்புகள்:

1. துவரம்பருப்பிற்குப் பதில் பாசிப்பருப்பை வேக வைத்தும் இதைச் செய்யலாம், அல்லது துவரம்பருப்பும் பாசிப்பருப்பும் சம அளவில் வேக வைத்தும் செய்யலாம்.

2. மிளகு, மிளகாய்வற்றலை வறுத்துத் திரித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் நினைத்த மாத்திரத்தில் இருக்கும் காய்களைப் போட்டுச் செய்து விடலாம்.

3. தண்ணீரின் அளவைக் குறைத்து இதே முறையில் கூட்டாகவும் செய்யலாம்.

4. பீன்ஸ், புடலங்காய் போன்ற காய்களும் சேர்க்கலாம்.

5. புளி இல்லாமல் செய்யப்படும் இக்குழம்பை ரசத்திற்குத் தொட்டுக் கொள்ள அமிழ்தமாக இருக்கும்.

6. உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு மிளகு தூக்கலாகப் போட்டுக் குழம்பு செய்யலாம்.

7. மிளகு தூக்கலாகவும் மிளகாய்வற்றல் குறைவாகவும் இருப்பது மிளகு பொரிச்சகரை என்றழைக்கப்படும். மிளகைக் குறைத்து மிளகாய்வற்றலைக் கூட்ட அதுவும் ஒரு சுவையாக இருக்கும்.

8. முட்டைக்கோஸ், பீன்ஸ், புடலங்காய், அவரைக்காய் பொரியல்கள் தகுந்த இணை உணவுகள்.