புளியிட்ட கீரை

puliyitta keerai

தேவையானவை:

அரைக்கீரை அல்லது பசலைக்கீரை- ஒரு கட்டு
புளி- எலுமிச்சை அளவுக்கும் சிறிது மேலே
வெந்தயம்- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2

 

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. புளியை நன்றாகக் கரைத்து வைக்கவும்.
2. மண் போகக் கீரையை அலசி வைக்கவும்.
3. மிதமான சூட்டில் ஒரு வாணலியில் வெந்தயத்தையும் மிளகாய்வற்றலையும் சிவக்க வறுத்துத் தனியே வைக்கவும்.
4. பிறகு ஒரு பாத்திரத்தில் கீரையைப் போட்டு 2 டம்ளர் அளவு கரைத்துள்ள புளிக்கரைசலை விடவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
5. வறுத்து வைத்துள்ள வெந்தயம், மிளகாய்வற்றலைக் கீரை, புளிக்கலவையுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. கீரை வெந்ததும் காற்றாட ஆற விட்டு பிறகு மின்னரைப்பானில் அரைக்கவும்.
7. நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும்.
8. அரைத்தப் புளியிட்ட கீரையுடன் கடுகு தாளிசத்தைச் சேர்க்கவும்.
9. செய்வதற்கு எளிதான புளிப்பான புளியிட்ட கீரையை பத்து நிமிடங்களில் தயாரித்து விடலாம்.
10. குழம்பு செய்வதற்குப் பதிலாகப் புளியிட்ட கீரையும் பொரியல், அப்பளம் செய்து உண்ணலாம்.

முருங்கைக்கீரை மகத்துவங்கள்

முருங்கைக்கீரையின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

முருங்கை மரத்தைப் பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய…

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்குப் பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்றபெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்படுத்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலிகளில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

 

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்…
இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்…

http://sugavanam-tamil-readings.blogspot.com/2012/05/blog-post_9161.html

முருங்கைக்கீரை பற்றிய தகவல்களுக்கு நன்றி.

முருங்கைக்கீரை பொரியல்

IMG_5202

தேவையானவை:

முருங்கைக்கீரை- 4 டம்ளர்
பயத்தம்பருப்பு- 1 கப்
பெருங்காயம்- சிறிதளவு
தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1

செய்முறை:

1. முருங்கைக்கீரையை ஆய்ந்து மண் போக அலசி ஒரு நீர் உறிஞ்சும் காகிதத்தால் துடைத்து வைக்கவும்.
2. குக்கரில் பாசிப்பருப்பை விசில் வரும் முன்பே உதிரியாய் சுண்டலுக்கு வேக வைப்பது போல வேக வைத்து எடுத்து வைக்கவும்(பாசிப்பருப்பு விரைவில் குழைந்து வெந்தும் விடும், அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்குள் எடுத்து விட வேண்டும்)
3. மைக்ரோ வேவ் உள்ளவர்கள் பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் குறைவான நீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்.
4. தாளிசப்பொருட்களைத் தாளிசம் செய்து கொண்டு முருங்கைக்கீரையைப் போட்டு உப்பு சேர்த்து(தண்ணீர் விடத் தேவையில்லை) நன்றாக வதக்கவும்.கீரை வகைகள் செய்யும் போது கணிசமாகத் தோன்றும் கீரை வெந்ததும் குறைவாக இருக்கும், எனவே உப்பு மிகவும் குறைவாகப் போட வேண்டும்.
5. தனியே ஒரு வாணலியில் பாசிப்பருப்பை வதக்கி உதிராக்கவும். உப்பு சேர்க்கவும்.
6. முருங்கைக்கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பு சுண்டலை அதனுடன் சேர்த்து வதக்கி தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கவும்.
7. சாம்பார், வத்தக்குழம்பும், மோர்க்குழம்பு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு அசத்தலான பொரியலாக முருங்கைக்கீரை பொரியல் அமையும்.  முருங்கைக்கீரையைப் பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், கூட்டு, தால், வடை, அடை போன்ற பலவகைகளில் சமைத்துப் பயன்படுத்திப் பலன் பெறலாம், பலம் பெறலாம்.

கீரையின் மருத்துவ குணங்கள்

தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.

முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.

1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.

2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.

3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.

4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.

5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.

6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.

8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.

9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.

10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.

11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.

12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.

13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.

14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.

15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.

ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

http://www.eegarai.net/t71266-topic கீரை பற்றிய தகவல்களுக்கு நன்றி.

கீரை பொரித்தகரை

Image

தேவையானவை

கீரை(பசலை/அரை/தண்டு)- ஒரு கட்டு
தேங்காய்- 1/4 மூடி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 4

செய்முறை:

1. கீரையை மண் போக அலசிக் கொள்ளவும்
2. கொதிக்கும் சுடு நீரில் கீரையைப் போட்டு வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
3. துருவிய தேங்காய், சீரகம், மிளகாய்வற்றலைச் சேர்த்து மின்னரைப்பானில் ஆறிய கீரையுடன் சேர்த்து அரைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிசம் செய்யவும்.
5. சுவையும் ஆரோக்கியம் மிகுந்த கீரை பொரித்தகீரையைச் சில நிமிடங்களில் எளிதில் செய்து விடலாம்.
6. எவ்விதப் பொரியலும் பொருந்தும் இக்குழம்பிற்கு அப்பளம் சிறந்த இணை.
7. காரம் அவரவர் விருப்பத்திற்கேற்றாற் போலக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.

கீரை பொரியல்

Image

தேவையானவை:

கீரை- 1 கட்டு
பாசிப்பருப்பு- 1 கப்
தேங்காய்- 1 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 2

செய்முறை:

1. கீரையை மண் போக அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்.

2. பாசிப்பருப்பைச் சுண்டல் பதத்திற்கு(ஒரு கிண்ணத்திற்கு ஒரு குவளை தண்ணீர் விட்டு) 2 விசில் விட்டு உதிராக வேக விடவும்.

3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு கீரையைப் போட்டு வேக விடவும்.

4. பாதி வெந்த பிறகு உப்பு போடவும்(கணிசம் குறையும் முதலிலேயே உப்பு போட்டால் உப்பின் சுவை கூடி விடும்).

5. தனியொரு வாணலியில் வெந்த பாசிப்பருப்பை உதிர்க்கவும்

6. கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பையும் சேர்த்து ஒன்றாக வதக்கவும்.

7. தேங்காய்த்துருவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அலங்கரிக்கவும்.

7. சுவையான கீரைப் பொரியல் தயார், பருப்பின் சத்தும் கிடைக்கும். வெந்தயக்கீரை தவிர்த்து எல்லா விதக் கீரையிலும் செய்யலாம், ருசி அதிகம், குறிப்பாக முருங்கைக்கீரையில் சத்துக்களும் ருசியும் அதிகம்.

 

புதினா-கொத்தமல்லி சாதம்

pudinarice

 

தேவையான பொருட்கள்

புதினா- ஒரு கட்டு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
புளி- நெல்லிக்காய் அளவு
மிளகாய்வற்றல்- 3
பூண்டு- 2 பல்லு
இஞ்சி- 1 துண்டு
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
தேங்காய்- 4 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
காயம், உப்பு- தேவையான அளவு
கலந்த சாதப்பதத்துக்கு ஏற்றவாறு உதிர் உதிராக வடித்த சாதம்

தாளிக்க:

நல்லெண்ணய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்- 1
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரி- 1 தேக்கரண்டி

செய்முறை:

1.புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக மண் போக அலசி வைக்கவும்.
2. அடுப்பை மிதமான தீயிலிட்டு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளைஉளுத்தம்பருப்பைச் சிவக்க வறுக்கவும்
3. வறுத்த பருப்புடன் மிளகாய் வற்றல், காயம், புளி, உப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி அலம்பிய கொத்தமல்லி, புதினாவையும் சேர்த்து ஒரு சுற்று கிளறி விட்டு ஆற விடவும்.
4. அரைப்பானில் வதக்கினவற்றோடு தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
5.எண்ணயிலிட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும்
6. அரைத்தவற்றைப் போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீர் உறிஞ்சும் வரை வதக்கி இறக்கவும்.உடைத்த நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் எண்ணெயில் வறுத்துக் கலக்கவும்.
7. உதிர் உதிராக வடித்த சாதத்தை ஆற விடவும்
8. கலவையின் சூடு குறைந்ததும் சாதமும் ஆறினவுடன் கிளறவும்.
சுவையான பல்வகைச்சத்துள்ள புதினா-கொத்தமல்லி சாதம் தயார்.

இதற்கு இணையாக வெள்ளரிப்பச்சடி, கிச்சடி, வறுவல், அப்பளம் வடகம் பொரித்து பரிமாறலாம்.