முருங்கைக்கீரை மகத்துவங்கள்

முருங்கைக்கீரையின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

முருங்கை மரத்தைப் பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய…

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்குப் பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்றபெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்படுத்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலிகளில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

 

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்…
இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்…

http://sugavanam-tamil-readings.blogspot.com/2012/05/blog-post_9161.html

முருங்கைக்கீரை பற்றிய தகவல்களுக்கு நன்றி.

கம்பு, தானியங்கள் மகத்துவங்கள்

Image

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளைச் சேர்த்து வந்தனர். காலையில் கம்பைக் கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

கம்பு பயிர் உணவுக்காகவும், கால்நடைத் தீவனத்திற்காகவும் ஆப்பிரிக்கா, இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் ஒரு சத்துமிக்கத் தானியப் பயிராகும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றைப் பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.

உடலில் ஏற்படும் பல நோய்களுக்குக் காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விளங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சிக் காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க…

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க…

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங்கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய….

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.கம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் போல வாழலாம்.

இணையத்தில் சேகரித்தது. நன்றி.

வெந்தயக்கீரை அளிக்கும் சத்துக்கள்

Image

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.

வெந்தயக்கீரையில் உள்ள சத்துக்கள்:

நீர்=82%

மாவுப்பொருள்=9%

புரதம்=5%

கொழுப்பு=0.9%

தாது உப்புக்கள்=1.6%

கால்சியம்=0.47%

பாஸ்பரஸ்=0.05%

இரும்புத் தாது=16.9 யூனிட்

வைட்டமின் A=3900 யூனிட்

வைட்டமின் B=70 யூனிட்

வைட்டமின் C=52 யூனிட்

பொட்டாசியம்=31 யூனிட்

சோடியம்=76 யூனிட் இவை அனைத்தும் 100 கிராம் வெந்தயக்கீரைச்சாறில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:

மூலநோய், அதிக அமிலத்தன்மை,  உடல் பருமன், முகப்பரு தொல்லை, பொடுகு போன்ற தொல்லைகளுக்கு தீர்வு தரும். பெண்களின் தீராவியாதிகளான மாதவிடாய் தொல்லைகள், சூதக வியாதிகள், முறையற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல், கர்ப்பப்பைக் கோளாறுகள் அனைத்துக்கும் இயல்பான தீர்வு தரும் . வயிற்று கடுப்பு, உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி, கொலஸ்ரால், மூலச்சூடு, மலக்கட்டு, சீதபேதி, குடல் புண் போன்றவற்றை தீர்த்திடும். குடலில் கிருமிகள் தொல்லை இருந்தால் உடனடி நிவாரணம் தருகிறது. வெந்த உணவால், சமைத்தக் காரம் மிகுந்த உணவால் நைந்து போன குடலை வெந்தயக்கீரைச் சாறு பலப்படுத்துகிறது.

பெண்களின் கருப்பை சம்பந்தமானப் பிணிகளை விரட்டும் ஒப்பற்றக் கீரை.வெந்தயத்தை முளைக்க வைத்து அல்லது இரண்டு இஞ்ச் அளவுக் கீரைகளைச் சாறாகப் பயன்படுத்தும் சமயம் பல கொடிய பிணிகளை விரைந்து நீக்குகிறது. கசப்பானது. குளிர்ச்சியானது. குடல் புண்ணால் நெடுங்காலம் அவதியுறுபவர்கள் கூட ஜெலுசிலுக்குப்பதில் வெந்தயக்கீரைச் சாறால் அருமையான நலம் பெறலாம். எவ்வளவு கொடிய வயிற்றுவலியும் குறையும். வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும். வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது. குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன்  தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.

வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

Image

மங்கலகரமான வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகின்றது(வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்). வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதைச் செய்வது கடினமாகினும் அடிக்கடி செய்வோம்.

1. இரத்தத்தைச் சுத்தப்படுத்த

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

2. சர்க்கரை நோயாளிகளுக்கு

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

3. வயிற்றுப்புண் நீங்க

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

4. மூலநோயாளிகளுக்கு

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

5. பெண்களுக்கு

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும் .வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.

6. உடல் அசதி, வயிற்று வலி குறையும். வாழைப்பூவைப் பருப்புடன் சேர்த்து உண்டால் கை,கால் எரிச்சல் குணமாகும்.வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொல்லும் சக்தி வாழைப்பூவிற்கு உண்டு. ஆண்களுக்கு தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும்.

ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு சக்தி, வாழைப்பூ பலவிதப் பிரச்சினைகளைப் போக்கும் வல்லமை கொண்டது. அப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை உசிலியாக, அடையாக, வடையாக, கூட்டாகப் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதினாக்கீரையின் மகத்துவங்கள்:

Image

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ பயன்படுத்தினால் புதினாவின் பொதுக்குணங்கள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடுகிறது.

புதினா – 50

1. புதினா அஜீரணத்தை அகற்றும்.

2. வயிற்றுப்போக்கை நிறுத்தும்

3. குடல்பிணிகளை நீக்கும்

4. சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும்.

 
5. சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும்.

 
6. குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும்.

 
7. ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

 
8. சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் நிவர்த்தியாகும்.

 
9. கபநோயும், வயிற்றுப்போக்கும் நீங்கும். கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.

 
10. கண் நோய்கள் நிவர்த்தியாகும்.

 
11. கர்ப்பகால வாந்திக்குச் சிறந்த நிவாரணியாகும்.

 
12. தலைவலி, நரம்பு வலி, வாத வலிகளுக்குப் பயன்படுத்தினால் நோய்கள் நிவர்த்தியாகும்.

 
13. பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கும் வெள்ளைப் படுதல் பெரும்பாடுகளை நீக்குகிறது.

 
14. சருமப் பாதுகாப்பிற்குத் துணைபுரிகிறது.

 
15. பொதுவில் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு இணையாகச் செயல்படுகிறது.

 
16. அசைவ உணவுகளைச் செரிமானம் ஆக்கவும் கொழுப்புப் பொருள்களைக் கரைக்கவும் பயன்படுகிறது.

 
17. கர்ப்பிணிப் பெண்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும், புதினா நல்ல செரிமானத்தைக் கொடுத்து சத்துக்களைக் கிரகிக்க உதவுகிறது.

 
18. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.

 
19. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

 
20. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.

 
21. வாய்த்துர்நாற்றத்தைப் போக்கும் புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது.

 
22. புதினாக்கீரையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டால் தொடர்ந்து நீடிக்கும் விக்கல் குணமாகும்.

 
23. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

 
24. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

 

25. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம்.

 
26. இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

 
27. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

 
28. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்.

 
29. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

 
30. புதினா பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.

 
31. புதினா புத்துணர்ச்சியை அளிப்பதோடு, எலுமிச்சை சாறு சேர்த்திருப்பது பசியின்மையையும் போக்கும்.

 
32. புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு கஷாயமாகத் தயாரித்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும்.

 
33. மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

 
34. கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும்.

 
35. புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.

 
36. வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவருக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.

 
37. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

 
38. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.

 
39. தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.

 
40. புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

 
41. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது.

 
42. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

 
43. மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்குகிறது, காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.

 
44. புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.

 
45. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.

 
46. பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

 
47. புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது .

 
48. பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எரிச்சல் உண்டான பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும்.

 
49. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.

 
50. ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பார்கள், விலை மலிவானாலும் தரத்திலும் மருத்துவகுணங்களிலும் சிறந்தஅலட்சியப்படுத்தாமல் புதினாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அமெரிக்காவில் 99 சென்ட்ஸ் மட்டுமே, இது 3 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு வேளை புதினா சாதத்திற்கு உதவும்.. புதினா சாதம், புதினா புலாவ், புதினா துவையல், புதினா சப்பாத்தி, புதினா சூப், புதினா இட்லி என்று பலவிதங்களில் செய்து அசத்தலாம்..

 

 

படித்தும் தொகுத்தும் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததும் ஆதலால் உங்களுக்கும் பயன் பெறும் நோக்கில் பகிர்கிறேன்.

என்ன புதினா வாங்கக் கிளம்பி விட்டீர்கள் தானே ?