தக்காளித்தொக்கு

6.Thakkali thokku 1

தேவையானவை:

நாட்டுத்தக்காளி- 5
காரப்பொடி(மிளகாய்த்தூள்)- 1 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. தக்காளியை அலம்பி நறுக்கிக் கொண்டு உப்பு சேர்த்து மின் அரைப்பானில் அரைத்துக் கொள்ளவும்.

2. ஒரு வாணலியில் எண்ணெயிட்டு கடுகு தாளிசம் செய்து கொள்ளவும்.

3. அரைத்த விழுதைத் தாளிசத்துடன் சேர்த்துக் காயம், மிளகாய்த்தூள் சேர்த்துக் குறைந்த தீயில் வைக்கவும்.

4. ஒரு வாணலியில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கொண்டு அதில் ஒரு பாதியைக் கொதிக்கும் விழுதுடன் சேர்க்கவும்.

5. தக்காளித்தொக்கு தொக்கி வரும் வேளையில் மீதி வெந்தயத்தூளைப் போடவும்.

6. சுருள வரும் வேளையில் தனியே நல்லெண்ணெயைக் காய்ச்சித் தொக்குடன் இணைக்கவும்.

7. ஆறிய பின் கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பொங்கல், இட்லி, தோசை, தயிர்சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள அருமையான ஊறுகாய்.இரண்டு நாட்களுக்கு வெளியிலே இருந்தாலும் கெடாது. மற்ற ஊறுகாய்களைப் போல இல்லாமல் விரைவில் ஊறுகாயைக் காலி செய்ய வேண்டும்,  இதற்கு ஆயுள் குறைவு.

ஆரஞ்சுப்பழத்தோல் தொக்கு

Image

தேவையானவை:

பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப்பழத்தோல் – 1 கப்
புளிக்கரைசல்- 4 தேக்கரண்டி
வெல்லம் – 1 சிறு கட்டி
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – வாசனைக்கு
கறிவேப்பிலை – சிறிது

 
செய்முறை :

1. தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
2. ஆரஞ்சுப்பழத்தோலைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கித் தாளிசப்பொருட்களுடன் சேர்க்கவும்.
3. உப்பு, புளிக்கரைசல், வெல்லம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
4. அவ்வப்போது கிளறி விடவும். ருசியான ஆரஞ்சுப்பழத்தோல் தொக்கு தயார்.

Image

கூடுதல் செய்திகள்:

1. கொதித்து ஓரளவு தளர இருக்கும் போதே ஊறுகாயை இறக்கி விட வேண்டும், வெல்லமும் புளியும் இருப்பதால் சிறிது நேரத்தில் கெட்டியாகி விடும்.

2. உடலிற்கு நன்மைகள் வழங்கவல்ல ஆரஞ்சுப்பழத்தோலில் துவையல், வத்தக்குழம்பு, மேற்கூறிய முறையில் ஊறுகாய் செய்யலாம், இந்த ருசி பழகி விட்டால் பழத்தை விடத் தோலின் ருசியே பிரியத்திற்குளாகி விடும்.

3. தயிர்சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள புளிப்பும் துவர்ப்பும் இனிப்பும் கலந்து தொக்கு அருமையாக இருக்கும்.

மாங்காய் – காலிபிளவர் தொக்கு

maangai-cauliflower-thokku

தேவையானவை:

பெரிய மாங்காய்-1
காலிபிளவர்(சிறியது)-1
நல்லெண்ணெய்-கால் கப்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம்-1/4 டீஸ்பூன்
காரப்பொடி-1 டீஸ்பூன்
காயம்-1/2 டீஸ்பூன்
கேசரிக்கலர்(சிவப்பு நிறமூட்டி)-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.மாங்காயைத் தோலின்றி துருவிக் கொள்ளவும்.
2.காலிபிளவரையும் துருவியோ அல்லது மிக்ஸியில் பொடித்தோ வைத்துக் கொள்ளவும்.
3.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்து கொண்டு துருவிய மாங்காயைப் போட்டு குறைந்த தீயில் வதக்கவும்.இதனுடன் உப்பு,காரப்பொடி சேர்க்கவும்.
4.தனியே ஒரு வாணலியில் காலிபிளவரைப் போட்டு, உப்பு, காரப்பொடி போட்டு பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
5.காலிபிளவரின் பச்சை வாடை மறைந்தவுடன் மாங்காயுடன் சேர்க்கவும். நிற்மூட்டியைச் சிறிதளவு தூவவும்.
6.ஊறுகாய் பதத்திற்குத் தொக்கும் தருவாயில், சிறிதளவு வறுத்த வெந்தயப்பொடியையும் காயத்தையும் சேர்க்கவும்.
7.எண்ணெயைக் காய்ச்சி தொக்கில் விடவும்.

கூடுதல் குறிப்புகள்

1.காரம் கூடி விட்டதென்றால் கேரட்டைத் துருவித் தனியே வதக்கி மேற்கண்ட ஊறுகாய் பதத்திற்குச் செய்து சேர்க்கலாம்.
2.வித்தியாசமான அசத்தலான ருசியுடன் காலிபிளவர் தொக்கு திகழும்.
3.இஞ்சியைத் துருவி இதனுடன் சேர்த்தும் தொக்கு தயாரிக்கலாம்.
4.காயமும் வெந்தயமும் தொக்கின் முடிவில் சேர்த்தால் தான் வாசனையும் சுவையும் அதிகம் கிடைக்கும்.
5.தொக்கு ஆறியவுடன் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவைக்கேற்ப எடுத்துப் பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் கெட்டு விடும்.

பிற குறிப்புகள்:

1.ஊறுகாய் போன்றவற்றைக் கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து உண்பது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.
2.ஊறுகாய் வகையறாக்களைப் பிளாஸ்டிக் பாட்டில்களிலோ டப்பாக்களிலோ வைத்துப் பயன்படுத்துவது எதிர்வினையைத் தரும், கண்ணாடி பாட்டில்களிலோ பீங்கான் நாழிகளிலோ பயன்படுத்துவது நலம்.
3.சிலர் ஊறுகாய்களை எல்லா சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு உண்பர். அவ்வாறு செய்யாமல் குறைந்த அளவில் பயன்படுத்துவது தான் உடலிற்கும் நல்லது.
4.ஊறுகாய் செரிமானத்திற்கு உதவுகிறது.உப்பும் காரமும் தூக்கலாக இருக்கும் ஊறுகாய்கள் நீண்ட காலத்திற்குக் கெடாது.
5.அந்தந்த காலநிலைகளுக்கு ஏற்ப கிடைக்கும் காய்கறிகளையும் பழங்களையும் வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாங்காய்ப் பிசறல்(கோசாலி மாங்காய்)

Image

தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய்-1
நல்லெண்ணெய்-3 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம்-1/4 டீஸ்பூன்
காரப்பொடி-1 டீஸ்பூன்
காயம்-1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை-5 இலைகள்

உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.மாங்காயைஅலம்பித் தோலுடனேயே பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வாணலியில் நல்லெண்ணெயைக் காய்ச்சி வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்திற்கு அந்த எண்ணெயை மாற்றி விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளிசம் செய்யவும்.
3.மாங்காய்த் துண்டுகளுடன் மிளகாய்ப்பொடி(காரப்பொடி),உப்பு,காயம்,வறுத்த வெந்தயப்பொடி(1/4 டீஸ்பூன்) சேர்த்து நன்கு கிளறவும்.
4.காய்ச்சிய எண்ணெயைச் சேர்த்து ஊற விடவும்.

கூடுதல் குறிப்புகள்

1.உப்பு,காரம் சரியாக இருக்கிறதா? என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டு அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய வேண்டும்.
2.சில நிமிடங்களில் தயார் செய்ய முடிகிற இந்த ஊறுகாயை 2 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும், இல்லாவிடில் கெட்டு விடும்.
3.வெந்தயம் சேர்க்காமலும் செய்யலாம். வெந்தயம் சேர்ப்பவர்கள் கவனமாகவும் குறைந்த அளவிலும் போட வேண்டும், இல்லையென்றால் ஊறுகாய் கசந்து விடும்.
4.எண்ணெயில் ஊறும் போது தான் ஊறுகாய் மென்மையாகும்.
5.பொங்கல்,தயிர்சாதத்திற்குப் பொருத்தமான ஊறுகாய்.

மாங்காய்த் தொக்கு

Image

தேவையான பொருட்கள்

பெரிய மாங்காய்-1
நல்லெண்ணெய்-கால் கப்
கடுகு-1 டீஸ்பூன்
வெந்தயம்-1/4 டீஸ்பூன்
காரப்பொடி-1 டீஸ்பூன்
காயம்-1/2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை

1.மாங்காயின் தோலகற்றித் துருவிக் கொள்ளவும் அல்லது மின் அரைப்பானில் அரைத்துக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்யவும்.
3.அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து துருவிய மாங்காயைத் தாளிசத்துடன் சேர்த்து உப்பு,காரப்பொடி,காயம் சேர்க்கவும்.
4.தனியே ஒரு வாணலியில் வெந்தயத்தைச் சிவக்க வறுத்து திரித்து வைத்துக் கொள்ளவும்.
5.மாங்காயைப் பச்சை வாடை போக வதக்கவும்.
6.திரித்த வெந்தயத்தைச் சேர்க்கவும்.
7.மாங்காய் நன்கு தொக்கி வரும் வேளையில் தனியே ஒரு வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணையைக் கொதிக்க வைத்துத் தொக்குடன் சேர்க்கவும்.
8.ஆற விட்டு பாட்டிலுக்கு மாற்றவும்.

கூடுதல் குறிப்புகள்

1.இவ்வகைத் தொக்கைக் கால் மணி நேரத்தில் செய்து விடலாம்.
2.தக்காளியை மின் அரைப்பானில் அரைத்தோ மிகவும் பொடியாக நறுக்கியோ இதே முறையில் தக்காளித்தொக்கும் செய்து கொள்ளலாம்.
3.பூண்டு சேர்க்க விரும்புபவர்கள் 2 பல்லு பூண்டை மிகவும் பொடியாக நறுக்கித் தனியே வதக்கி இதனுடன் சேர்த்து தொக்கு செய்யலாம்.
4.மிகவும் ருசியான இந்த ஊறுகாய் தயிர்சாதம்,பொங்கல் போன்ற உணவுகளுக்கு அருமையான இணை.