இட்லி உப்புமா

தேவையானவை:

DSC05623

இட்லிகள்- 10
இட்லி மிளகாய்ப்பொடி- 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகைவற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெரிய வெங்காயம்- 1

செய்முறை:

1. காலையில் செய்து மீந்த இட்லிகளையோ புதிதாகத் தயாரித்த இட்லிகளையோப் பயன்படுத்தலாம்.
2. தாளிசப்பொருட்களை ஒரு வாணலியில் தாளித்துக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
3. இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும்
4. தாளிசப்பொருட்களோடு இட்லியைக் கலந்து இட்லி மிளகாய்ப்பொடியையும் சேர்த்துக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
5. மீந்த இட்லிகள் கனமாக ஆகி விடும், வீணடிப்பதற்குப் பதிலாக இவ்வகையில் சுடச்சுட உப்புமா செய்தால் உனக்கு, எனக்கு எனப் போட்டிப் போட்டு கிடுகிடுவென வியாபாரம் ஆகி விடும்.

ஓட்ஸ் இட்லி

Image

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 2 கிண்ணம்
தயிர் – 1/2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/4 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/4 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
துருவிய கேரட்- 1 கிண்ணம்
கொத்தமல்லி

செய்முறை:

1.முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மின்னரைப்பானில் பொடி செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, 1 நிமிடம் கிளறி இறக்கி, அதனைப் பொடி செய்த ஓட்ஸுடன் சேர்க்க வேண்டும்.

3.பிறகு அதில் தயிர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்குக் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இதில் தண்ணீரை சேர்க்கக்கூடாது. உடனடியாக இட்லிகளாக வார்க்காமல் ஒரு மணி நேரம் வெளியே வைக்கவும்.

4. பின்னர் அந்த மாவை இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.

தொட்டுக்கொள்ள சட்னி, துவையல், சாம்பார், மிளகாய்ப்பொடி அருமையாக இருக்கும்.

 

தாளித்த இட்லி

Image

தேவையானவை:

இட்லிகள்- 10

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
மிளகாய்வற்றல்- 1
கொத்தமல்லி- அலங்கரிக்க

வதக்க:
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உப்பு- சிறிதளவு

செய்முறை:

1. தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துச் சிவக்க வதக்கவும். பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனுடன் காரத்திற்காகச் சாம்பார் தூள் சேர்த்து பொடியின் பச்சை வாடை போகும் வரை வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்(இட்லியில் உப்பு இருப்பதால் அதிகமாகி விடக் கூடாது)
2. இட்லிகளைப் பிடித்த அளவில் நறுக்கி அல்லது மினி இட்லிகளாக வேக வைத்துக் கொண்டோ தாளித்தவற்றுடன் போட்டுப் பிரட்ட வேண்டும்.
3. சுவையான தாளிச இட்லி சில நிமிடங்களில் தயார்.
கொத்தமல்லி தூவிப் பரிமாற குடும்பத்தினர் உனக்கு எனக்கு எனப் போட்டி போட்டு உண்பர்.

 

சாம்பார் இட்லி

391790_261830667204213_100001318447633_646855_889535222_n

தேவையானவை:

இட்லி- 10
சாம்பார் செய்ய:

துவரம்பருப்பு- 1/2 கப்
புளி- எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி- 2 தேக்கரண்டி
உப்பு,காயம்,மஞ்சள் தூள்- தேவையான அளவு

காய்கறிகள்:

சின்ன வெங்காயம்- 10
தக்காளி- 1
முருங்கைக்காய்- 8
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

சாம்பார் தூள் செய்ய:

கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 8

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி:

1. வாணலியில் வெந்தயத்தைச் சிவக்க வறுக்கவும், பிறகு கடலைப்பருப்பைச் சிவக்க வறுத்துத் தனியே ஆற விடவும்.
2. தனியாவையும் சிவக்க வறுக்கவும்
3. மிளகாய்வற்றலையும் வறுத்து மின்னரைப்பானில் திரித்து வைத்துக் கொள்ளவும்.

சாம்பார் செய்முறை:
1. பருப்பைக் குழைவாக வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். அதனுடன் சின்னவெங்காயத்தை வதக்கிப் பின் தக்காளி, முருங்கைக்காய் சேர்க்கவும்
2. புளித்தண்ணீரைச் சேர்த்து(3 டம்ளர் அளவுக்கு) உப்பு, மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி சாம்பார் பொடி, காயம் சேர்த்து மூடி விடவும்.
3. காய் வெந்ததும் வேக வைத்தப் பருப்பைச் சேர்க்கவும்
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.

சாம்பார் இட்லி:

1. இட்லிகளை(மினி இட்லி அல்லது தட்டையான வடிவில் செய்வது நன்றாக இருக்கும்) செய்து ஆற விடவும்.
2. சாம்பாரை இட்லிகளின் மேல் பரவலாகத் தூவவும்.
3. நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு சிவக்க வறுத்து தாளிசப்பொருட்களைச் சாம்பார் இட்லியின் மேல் கொட்டவும்.
4. சாம்பாரில் காரம் குறைவு என்றால் தாளிக்கும் போது பச்சைமிளகாயையும் சேர்க்கலாம்.
சுவையான சாம்பார் இட்லி தயார்.

கூடுதல் தகவல்கள்:
1. சின்ன வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் கூட்டணியைப் போல முள்ளங்கி, தக்காளி அல்லது குடமிளகாய், காரட், தக்காளி அல்லது வெண்டைக்காஇ போன்ற காய்கள் ருசியை வித்தியாசப்படுத்தும்.
2. சாம்பார் பொடி புதிதாகத் திரித்துப் பண்ணும் போது கூடுதல் சுவை கிடைக்கும்.
3. காலையில் மீந்த இட்லிகளை வியாபாரம் செய்யக் கூட இட்லி சாம்பார் செய்து அசத்தலாம்.

 

புதினா இட்லி

Image

தேவையானவை:

புதினா – இரண்டு கைப்பிடி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
இஞ்சி- 1 துண்டு
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் அல்லது மிளகாய்வற்றல் – 2
இட்லி- 10
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. புதினாவை மண் போக அலசவும்
2. எண்ணெய் விட்டு வெள்ளை உளுத்தம்பருப்பைச் சிவக்க வறுத்து மிளகாயையும் வறுத்து, புதினா, இஞ்சி,உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும்.
3. மின்னரைப்பானில் வறுத்தனவற்றை அரைக்கவும்.
4. வாணலியில் கடுகு தாளித்து விட்டு அரைத்தக் கலவையைக் கெட்டியாகும் வரை ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
5. இட்லிகளை விருப்பமான அளவில் துண்டுகளாக்கிக் கொண்டு கெட்டியான புதினாக்கலவையில் பிரட்டவும்.
6. சுவையான ஆரோக்கியமான புதினா இட்லி தயார்

கூடுதல் குறிப்புகள்:

1. புதினா சளித்தொந்தரவுகளைப் போக்குவதோடு மட்டுமல்லாமல் பல் தொடர்பான பிரச்சினைகள், வாய்த் துர் நாற்றத்தையும் போக்க வல்லது, துவையல், புதினா இட்லி, புதினா சாதம் என்று விதவித முறைகளில் புதினாவைச் சேர்ப்பதன் மூலம் உடலிற்குத் தேவையான சத்துக்களைப் பெறலாம்.
2. காலையில் செய்து மீந்த இட்லிகளைக் கூட இவ்விதச் செய்முறைகளால் சூடாகச் செய்து புதியதாய் பரிமாறலாம்.

கேழ்வரகு (ராகி ) இட்லி

தேவையானவை :

Image
புழுங்கலரிசி-2கப்
ராகி-1கப்
வெந்தயம்-10கிராம்
உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை:

1. அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்)கணிசமும் கிடைக்கும்.
3. உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.
4. கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும்.
5. மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும்.
6, இட்லியாக சாப்பிட பிடிக்காதவர்கள் , அந்த இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக்கி , தாளித்துக் கொட்டி, சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து , சாப்பிடலாம், சுவையாக இருக்கும்.

ராகியின் பயன்கள்:

1. ரத்தம் சுத்தியாகும்
2. எலும்பு உறுதிப்படும்
3. சதையை வலுவாக்கும்
4. மலச்சிக்கல் ஒழியும்.
5. அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.

தென்னிந்தியர் தாங்கள் தான் அந்தஸ்து, நாகரிகம், வாய்ந்தவர்களென்று கொண்டு நம்பர் ஒன் வெண்மை அரிசியைச் சாப்பிடுகிறார்கள். ராகி விலை மலிவான உணவு என்று கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும்.
‘ராகி’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

இட்லி மஞ்சூரியன்

idli manchurian

தேவையான பொருட்கள்

இட்லி – 6
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி- 1 தேக்கரண்டி(துருவியது)
பச்சைமிளகாய்- 1
பூண்டு- 1 தேக்கரண்டி(துருவியது)
உப்பு -சுவைக்கு
எண்ணெய் – பொரிக்க
கேசரி கலர் – சிறிதளவு

செய்முறை:

0. idli manchurian

1. இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாகவோ சதுரமாகவோ நறுக்கவும்.
2. அதனுடன் அனைத்துப் பொருட்களைம் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.
3. எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளைப் பொரித்தெடுக்கவும். இட்லிகளைப் பொரிக்காமல் வதக்கியும் செய்யலாம்.
4. கொத்தமல்லி தூவி அலங்கரிக்கச் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.
5.இட்லியா? வேண்டாமென்று அலறும் குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்,

காலையில் மீந்த இட்லிகளை மாலையில் இம்முறையில் சுட சுடச் செய்ய, உனக்கு எனக்கு எனப் போட்டி போட்டுக் காலி செய்வர்.

————————————————————————————————–

 

காஞ்சிபுரம் இட்லி

Image

காஞ்சிபுரம் என்றாலே பழமையான கோவில்களும் பட்டுச்சேலைகளும் தான் நினைவிற்கு வரும், அங்கு அவை மட்டுமல்லாமல் காஞ்சிபுர இட்லியும் பிரபலமான ஒன்றாகும்.மினி இட்லி, சாம்பார் இட்லி, நெய் இட்லி சாம்பார், கொத்தமல்லி இட்லி என்று பலவகையான இட்லிகள் இருந்தாலும் காஞ்சிபுரம் இட்லி, இட்லிகளின் ராணியென்பது உண்டவர்களுக்குத் தெரியும்.செய்வதும் எளிது, சுவையும் இனிது..இனி செய்முறையைக் காண்போம்.

தேவையானவை:

அரைக்க:

புழுங்கலரிசி- 1 டம்ளர்
பச்சரிசி- 1 டம்ளர்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டம்ளர்
வெந்தயம்- சிறிதளவு
அவல்- ஒரு கைப்பிடி

தாளிக்க:

நெய் – 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி.
கடுகு- 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி,
முந்திரி – 2 தேக்கரண்டி,
இஞ்சி- 2 துண்டு(துருவியது)
சுக்குத்தூள்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 தேக்கரண்டி(நறுக்கியது),
மிளகு – 1 தேக்கரண்டி (உடைத்தது),

செய்முறை:

kanjiIdle

1. அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஊறவிடவும்.

2. மூன்று மணி நேரம் ஊறியதும் மின் அரைப்பானில் நற நற பத்ததில் அரைத்து எடுக்கவும்.

3. மாவை மூன்று மணி நேரம் புளிக்க விடவும்.

4. எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பைத் தாளிசம் செய்யவும்.

5. நெய், உடைத்த மிளகு, சுக்குத்தூள்,துருவின இஞ்சி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலையை மாவுடன் சேர்க்கவும்.

6. இட்லி குக்கரில் தண்ணீர் விட்டு பெரிய குவளை அல்லது இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி பிடித்த வடிவங்களில் இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.

7. காபி டம்ளர், டவராக்களில் எண்ணெய் தடவி வைக்கும் போது இட்லி வெந்ததா என்பதை அறிய ஒரு கத்தியால் இட்லியைக் குத்தி, ஒட்டாமல் வருகிறதா என்று பார்க்க வேண்டும். ஒட்டாமல் வந்தவுடன் தலைகீழாக டவராவைக் கவிழ்க்க அதே வடிவத்தில் இட்லி தயாராகியிருக்கும்.

8. பொதுவாக இவ்வகை இட்லிகள் 15 நிமிடங்களில் வெந்து விடும். புதினா சட்னி, காரச் சட்னி, வெங்காயச்சட்னி போன்ற சட்னி வகையறாக்களும் சாம்பார், தீயல், புளிக்குழம்பு போன்ற குழம்பு வகையறாக்களும் அசத்தல் இணைகளாகும்.

கூடுதல் தகவல்கள்:

1. இவ்வகை இட்லிகளை உடனடியாகச் செய்ய முடியும்.
2. அதிகம் புளிப்பில்லாமல் ருசியாகவும் இருக்கும்.
3. மிளகு, இஞ்சி சேர்வதால் உடல் நிலை சரியில்லாதவர்களுக்கும் பயணிப்பவர்களுக்கும் அருமையான உணவு.
—————————————————————————————–

மிளகாய்ப்பொடி இட்லி

Image

தேவையானவை:

இட்லிகள்- 10
பெரிய வெங்காயம்- 1
கேசரித்தூள்- சிறிதளவு

வறுத்துத் திரிக்க:

கடலைப்பருப்பு- 1 கைப்பிடி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 கைப்பிடி
மிளகாய்வற்றல்- 4
காயம்- சிறிதளவு
உப்பு- சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. இட்லிகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்(காலையில் மீந்த இட்லிகளையும் பயன்படுத்தலாம்)

2. வறுக்கக் கொடுத்தப் பொருட்களைச் சிவக்க வறுத்து நற நறவென்று திரிக்கவும், அல்லது இட்லி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டியளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. இட்லிகளை விருப்பமான வடிவில் நறுக்கவும்.

4. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். நிறமூட்டியைச் சேர்க்கவும்.

5. இட்லிப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.

6. நறுக்கின இட்லிகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தால் மிளகாய்ப்பொடி இட்லி தயார்.

வேறொரு முறை:

Spicy Idli Recipe

இம்முறையில் வெங்காயமோ நிறமூட்டியோ சேர்க்காமல் மேற்கூறிய முறையில் செய்யலாம். இம்முறை இட்லிகளால் காலையில் மீந்த இட்லியும் நன்றாக வியாபாரமாகி விடும். நேரத்தை மிச்சப்படுத்தும் இந்த சிற்றுண்டி செய்யவும் எளிது.

மல்லிகைப்பூ இட்லி – ரகசியங்கள்

Image

தேவையானவை:

இட்லி அரிசி அல்லது புழுங்கலரிசி- 4 டம்ளர்
உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 டம்ளர்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
அவல்- ஒரு கைப்பிடி

செய்முறை:

1. இட்லி அரிசி என்றால் 5 மணி நேரம் ஊறினால் போதும், புழுங்கலரிசி என்றால் முந்தின நாள் இரவே ஊற விடவும்.

2. வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் போதும், ஊறின பிறகு பருப்பைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும்.

3. அரிசியைக் களைந்து மின் அரைப்பானில்(கிரைண்டர்) போடவும், இதனுடன் அவல், வெந்தயத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க விடவும்.

4. இருபத்தைந்து நிமிடங்கள் அரைபட வேண்டும்,(ஊறின நேரம் குறைவு என்றால் கூட நேரம்). அடிக்கடி தண்ணீர் விட்டு வர வேண்டும். நன்றாக மையாக அரைபட வேண்டுமென்ற அவசியமில்லை. பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் போட்டு விட்டு வெள்ளை உளுத்தம்பருப்பைக் களைந்து போட வேண்டும்.

5. தண்ணீர் அதிகம் ஊற்றாமல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை கொஞ்சமாக ஊற்ற வேண்டும்,

6. பருப்பு வெண்ணெயாக அரைபடுவதில் தான் சூட்சமமே அடங்கியிருக்கிறது.

7. பிறகு உப்பைப் அரைபட்ட பருப்புமாவில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

8. அரைத்த மாவையும் இந்த உளுத்தம்மாவையும் ஒன்று கலக்கவும், ஆற்றவும். தனித்தனிப் பாத்திரங்களில் முக்கால்வாசி அளவு வருமாறு(பொங்கும், புளிக்கும் என்பதால்) விட்டு வெளியில் வைக்கவும், குளிர்காலங்களில் புளிக்காது என்பதால் அவனில் வைத்துக் கொள்ளலாம்.

இட்லி- குறிப்புகள்:

Image

1. இரவு ஊற வைத்து காலையில் அரைத்தால் அரைத்த அன்று இரவு மாவு பொங்கி விட்டிருக்கும்,

2. மினி இட்லி தட்டுக்கள் அல்லது சாதா இட்லித்தட்டுகளில் எண்ணெய் அல்லது நெய் தடவி மாவை விட்டு குக்கரில் வைத்து பத்து நிமிடங்களில் எடுக்க சுவையான மென்மையான மல்லிகைப்பூ இட்லிகள் தயார்.

3. துணியில் மாவு இட்டு செய்யும் இட்லிகள் எண்ணெயே குடிக்காமல் இன்னும் சுவையாக இருக்கும். அப்படியும் செய்யலாம்.

4. இட்லிக்குத் துவையல், சட்னி, சாம்பார் செய்து பரிமாறலாம்.

5. இட்லிக்குத் தனியாக, தோசைக்குத் தனியாக என்று அரைக்க முடியாதவர்கள், அடி இட்லி மாவையே தோசைக்குப் பயன்படுத்தலாம்.

6. தோசை மாவிற்கு என்றால் அரிசி, பருப்பை ஒன்றாகவே அரைக்கலாம், ஆனால் கணிசம் மேற்கூறிய முறையில் தான் அதிகம் கிடைக்கும்.

7. தோசைக்கு நன்றாக அரைபட வேண்டும் என்ற மெனக்கெடல் இல்லை, நற நற பதமே போதுமானது.

8.சிலர் மேற்கூறிய முறையில் வெள்ளை உளுத்தம்பருப்பை அதிகம் சேர்ப்பார்கள், அவ்வாறு செய்வது இட்லிக்கு நல்லதாக இருக்கும், அதே மாவில் தோசை கல்லை விட்டு எடுக்க வராது.

9. குளிர்சாதனப்பெட்டியில் பருப்பை வைக்க நேரமில்லாதவர்கள் ஐஸ்கட்டிகளைப் போட்டு அரைக்கலாம். அவல் இட்லிக்கு மென்மையைத் தருகிறது.

10. இட்லி சரியாக வரவில்லை என்றால் ஒன்று பொங்கியிருந்திருக்காது, இல்லையென்றால் ஏதேனும் செய்முறையில் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம், ஒரு வேளை சொதப்பும் சூழல் நேரிட்டால் தோசைக்கு மாவைப் பயன்படுத்தலாம்.

குஷ்பூ, தமன்னா, ஹன்சிகா இட்லிகள் என்று பெயரையும் சூட்டி விடுங்கள், எனக்கு, உனக்கு என்று காலியாகும், கண்டிப்பாகத் தொட்டுக் கொள்ள துவையலோ சாம்பாரோ பண்ணி விடுங்கள்.