நீராகாரம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 குவளை
தண்ணீர் – தேவைக்கும் அதிகமான அளவு
தண்ணீரில் ஊற வைத்த பழைய சாதம் & நீர் – 1 குவளை
உப்பு – சிறிதளவு
காயம் – சிறிதளவு

செய்முறை:
- அரிசியைக் களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு பானையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- அதிகம் கொதிக்க விடாது( நீர்க்குமிழிகள் பானையின் அடியில் தெரியும் நேரத்தில்) களைந்த அரிசியைச் சேர்த்துக் கிளறி விடவும்.
- அரிசி வெந்தத என்று கிளறும் போது சாதத்தைப் பதம் பார்க்கவும்.
- பிறகு இன்னொரு பாத்திரத்தில் சாதம் வெந்த நீரை வடிக்கவும்.
- வடித்த நீரை 5 மணி நேரம் மூடி வைக்கவும்.
- பழைய சாதம் வடித்த நீர், ஒரு குவளை மசித்த பழைய சாதம் எடுத்துக்கொள்ளவும்.
- சாதம் வேக வைத்த நீருடன் பழைய சாதம் வடித்த நீர், மசித்த பழைய சாதம் சேர்த்து, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
- வெறுமனே குடிக்கும் போது அமிழ்தமாக இருக்கும், தொட்டுக்கொள்ள மோர் மிளகாய், வறுத்த சுண்டைக்காய் வற்றல், கண்டங்கத்திரி வத்தல், நாத்தங்காய்(இது சேர்க்கும் போது நீராகாரத்தில் உப்பு சேர்க்கத் தேவை இல்லை) சேர்த்து உண்ணும் போது சுவை அள்ளும், வளரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற உணவு. உணவே அருமருந்து.
- உடல் சூட்டைத் தணிக்கும், செரிமானப்பிரச்சினைகளைச் சரி செய்யும் உடலின் ஆரோக்கியத்தைச் சீராக வைக்கும் நீராகாரத்தைப் பருகி உடல் நலனைக் காப்போம்.
நீராகாரம் – நன்மைகள்

சாதாரண மக்களாலும் பின்பற்றத் தக்க வகையில் அமைந்த எளிய மருத்துவ முறையே சித்த மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் நோய் உண்டாவதற்கான காரணங்களைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது என்றும், இவை சமநிலையில் இயங்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். சம நிலையை இழந்து இயங்கும் போது நோய்கள் ஏற்படுகின்றன என்பதும் சித்தர்களின் கருத்தாகும்.
இதனையே,
“மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர்வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள் : 941)என்கிறார் வள்ளுவர்.
மருத்துவ நூலோர் குறிப்பிடும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் அளவில் குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்பதே வள்ளுவரின் கருத்துமாகும். மேலும் அவர் மருந்து என்னும் அதிகாரத்தில் (95) மருத்துவம் குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
வாதம்:-சித்த மருத்துவம் கூறும் வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வாயுவைக் குறிப்பதாகும். நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.
பித்தம்:-பித்தம் என்பது உடலில் உயிர் தங்குவதற்கு ஆதரவு நிலையாக இருக்கும் உடல் வெப்பத்தைக் குறிப்பதாகும். இந்த வெப்பம் உணவு எரிக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது உண்டாவதாகும். வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.
கபம்:-கபம் என்பது உடலின் குளிர்ச்சியைக் குறிப்பிடுவதாகும். உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும்,குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும்.இதன் அடிப்படையிலேயே 1482 வகையான நோய்கள் வாதத்தினால் ஏற்படுபவை என்றும், 1483 வகையான நோய்கள் பித்தத்தினால் வருபவை என்றும், 1483 வகையான நோய்கள் கபத்தால் தோன்றுபவை என்றும் சித்த மருத்துவர்களாலும் மருத்துவ நூல்களாலும் குறிப்பிடப்படுகின்றன.
நீராகாரம்-சோற்றுநீர்-பயன்கள்அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்… `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்… வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது. வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு பழமையான உணவுத்தான் நீராகாரம்..
நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமாய் அழைக்கப்படும் பழைய சாதத்திற்கு இணையான எளிய உணவு ஒன்றை இவ்வுலகில் எவராலும் காட்ட இயலாது. அத்தகு பெருமை வாய்ந்தது இப்பழைய சாதம்!
பழைய உணவென்றாலே நலக்கேடுதானே தரும், அப்படியிருக்க இது மட்டும் எப்படி அருமருந்தாகிறது; அரிய உணவாகிறது? என்று நீங்கள் கேட்கலாம்.பழைய சாதத்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடுவதுதான் கேடு பயக்கும். மாறாக, சாதத்தை தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொட்டும் தண்ணீருடன், சிறிது உப்பு, மோர், காயம், பழைய சாதம் ஊற வைத்த கரைத்த நீர் சேர்த்து உண்டால் அதுதான் அற்புத உணவாகிறது. இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் உண்டு!அதற்கு என்ன காரணம்?
இரவு முழுக்க நீருடன் சாதம் ஊறும்போது, அதில் நுண் உயிரிகள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) கோடிக்கணக்கில் பெருகுகிறது. அதனோடு வைட்டமின் பி6, பி12 போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. பழைய சாதம் புளித்து நொதிக்கும்போது இந்த விளைவுகள் உண்டாகின்றன.சாதாரண தானியங்கள், பருப்புகளைவிட முளைகட்டிய பின் அவை பலமடங்கு சக்தியும், சத்தும் மிக்கனவாய் மாறுவது போலவே, பழைய நீரில் நொதிக்கும்போது அதன் பயன் பன்மடங்கு உயருகிறது.
அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்:
* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.*
*காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்;
*உடல் சோர்வை விரட்டும்.
* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.
* முழு நாளைக்கும் நம்மை சோர்வின்றிப் புத்துணர்வுடன் உணரவைக்கும்.
* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். *
*வனப்பைத் தரும்;
*இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். பழைய சாதம் இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சாதம் பாரம்பர்யத்தைப் போற்றுவோம்!
நன்றி: இயற்கை மருத்துவம்