பொரிச்சகரைக்குச் சொன்ன அதே செய்முறையே இதற்கும், காய்களுடன் கீரையைச் சேர்ப்பது தான் கீரைக்கரை.
தேவையானவை:
கீரை- ஒரு கட்டு
வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 டம்ளர்
உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
காரட்- 1
முருங்கைக்காய்- 1
பீன்ஸ் அல்லது புடலங்காய்- சிறிதளவு
(மேற்குறிப்பிட்ட காய்களில் 2 அல்லது 3 காய்கள் இருந்தால் கூடப் போதும்)
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
வறுக்க:
மிளகு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5
அரைக்க:
தேங்காய்- 1/2 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
1. மிளகு, மிளகாய்வற்றலை ஒரு வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும்.
2. காய்களை அலம்பிப் பொடியாக நறுக்கி ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
3. வறுத்துத் திரித்த மிளகு, மிளகாய்வற்றல் பொடியைச் சேர்த்து அதில் காய்களை வேக விடவும், காய்கள்(வாழைக்காய் சேர்க்கும் போது வேக நேரம் எடுக்கும் என்பதால் அதை முதலில் சேர்க்க வேண்டும்) பாதி வெந்ததும் கீரையைச் சேர்க்கவும்(கீரை எளிதில் வெந்து விடுமாதலால் கடைசியாகச் சேர்க்கிறோம்)
4. பருப்பைக் குழைவாக வேக வைத்துத் தனியே வைக்கவும்
5. மின்னரைப்பானில் தேங்காய், சீரகத்தை அரைத்துத் தயாராக வைக்கவும்.
6. காய்கள் வெந்ததும் வெந்த பருப்பைச் சேர்த்து அரைத்தத் தேங்காய்க்கலவையையும் கொட்டி தாளிசம் செய்து இறக்கவும்.
7. குழம்பு தண்ணியாக வந்து விட்டால் 2 தேக்கரண்டி பச்சரிசி மாவைத் தண்ணீரில் கரைத்துக் குழம்பில் கொட்டி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும்.
8. சுவையான கீரைக்கரை தயார், கீரைக்கரை செய்யும் போது பருப்பைத் தனியே எடுத்து பருப்பு ரசம் செய்து குழைவான சாதத்தில் ரசத்தைப் பிசைந்துத் தொட்டுக் கொள்ள கீரைக்கரையை விட்டுக் கொண்டால் தேவாமிர்தம் தான். தயிர்சாதத்துடனும் கீரைக்கரை அசத்தல் இணையாகும்.
கூடுதல் தகவல்கள்:
1. பாசிப்பருப்பை வேக வைத்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அல்லது பாசிப்பருப்பும் துவரம்பருப்பும் சரி பாதி அளவாக எடுத்து வேக வைத்துச் செய்யலாம்
2. காய்களைப் பெரிதாக நறுக்கிச் செய்தால் அதனைப் கீரைபொரிச்ச குழம்பு என்றும் பொடியாக நறுக்கிச் செய்தால் கீரைக்கரை என்றும் அழைக்கிறார்கள்
3.தண்ணீர் குறைவாக விட்டு வேக வைத்துச் செய்தால் இதுவே கீரைபொரிச்ச கூட்டு.
4. வறுக்கும் போது மிளகின் அளவைக் கூட்டி மிளகாய்வற்றலின் அளவைக் குறைத்துச் செய்தால் இதுவே மிளகு கீரைக்கரை.