மாங்காய் சாதம்

Image

தேவையானவை:

சாதம்- 2 கப்(உதிர் உதிராக)
மாங்காய்- 1
தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
நிலக்கடலை- 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்கச் சிறிதளவு

செய்முறை:

மாங்காய் சாதம்

1. மாங்காயின் தோலை அகற்றி துருவியோ அல்லது மின்னரைப்பானில் தேங்காய், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவோ செய்ய வேண்டும்.
2. தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு அரைத்தக் கலவையைக் கொட்டி மஞ்சள் தூளுமிட்டு வதக்கவும்.
3. மாங்காய்க் கலவை கெட்டியானதும் இறக்கி விடவும்.
4. சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற விடவும்
5. அரைத்து வெந்த கலவையும் ஆறின பிறகு சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.
6. எண்ணெயில் நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பை வதக்கி சாதத்தில் போட சுவையான மாங்காய் சாதம் தயார்.
7. தயிர் பச்சடி, சிப்ஸ், வடகம், அப்பளம் போன்றவை அருமையான இணைகள்.

இன்னொரு முறை:

மாங்காயைத் துருவிக் கொண்டு தாளிசப்பொருட்களுடன் கலந்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி சாதத்துடன் சேர்த்தும் திடீர் மாங்காய் சாதமாகச் செய்யலாம். பாசுமதி அரிசியைப் பயன்படுத்தினால் விறைப்பாகவும் அழகாகவும் ருசியாகவும் அமையும்.

மாங்காயின் சத்துக்கள்:

1.வைட்டமின் ஏ, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.
2.பசியைத் தூண்டும்.
3. தாது பலம் பெறும்.
4. செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும்.
5. மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் இயல்புடையது.
6. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது, சூட்டைக் கிளப்பும்.

மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு ஏற்படும். ஆனால் அளவாக சாப்பிட அது பல நன்மைகளைத் தரும். இது இயற்கை அளித்த கொடை. எனவே தினமும் சில துண்டுகள் மாங்காயைச் சாப்பிடுவது நல்லது.

———————————————————————————–

 

கேழ்வரகு (ராகி ) இட்லி

தேவையானவை :

Image
புழுங்கலரிசி-2கப்
ராகி-1கப்
வெந்தயம்-10கிராம்
உளுந்து-1கப்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை:

1. அரிசி, வெந்தயம், ராகி இம்மூன்றையும் ஒன்றாக 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. உளுந்தை ஊற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். (இதனால் அரைக்கும் போது உளுந்து நன்றாக நுரைத்து வரும்)கணிசமும் கிடைக்கும்.
3. உளுந்து அரைத்து எடுத்ததும் ராகி, அரிசி கலவையை தனியாக கரகரப்பாக அரைக்கவும்.
4. கடைசியில் உப்பு, அரைத்த உளுந்து கலந்து எடுத்து மறுநாள் காலை வரை (பொங்கி வருவதற்கு) வைக்கவும்.
5. மற்ற இட்லிகளைப் போல ஆவியில் வேக வைக்கவும்.
6, இட்லியாக சாப்பிட பிடிக்காதவர்கள் , அந்த இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக்கி , தாளித்துக் கொட்டி, சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து , சாப்பிடலாம், சுவையாக இருக்கும்.

ராகியின் பயன்கள்:

1. ரத்தம் சுத்தியாகும்
2. எலும்பு உறுதிப்படும்
3. சதையை வலுவாக்கும்
4. மலச்சிக்கல் ஒழியும்.
5. அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.

தென்னிந்தியர் தாங்கள் தான் அந்தஸ்து, நாகரிகம், வாய்ந்தவர்களென்று கொண்டு நம்பர் ஒன் வெண்மை அரிசியைச் சாப்பிடுகிறார்கள். ராகி விலை மலிவான உணவு என்று கருதுகின்றனர். இது தவறான கருத்தாகும். ராகியின் விலையைப் பார்க்காமல், அதன் பலனைப் பார்க்க வேண்டும்.
‘ராகி’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

இட்லி மஞ்சூரியன்

idli manchurian

தேவையான பொருட்கள்

இட்லி – 6
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி- 1 தேக்கரண்டி(துருவியது)
பச்சைமிளகாய்- 1
பூண்டு- 1 தேக்கரண்டி(துருவியது)
உப்பு -சுவைக்கு
எண்ணெய் – பொரிக்க
கேசரி கலர் – சிறிதளவு

செய்முறை:

0. idli manchurian

1. இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாகவோ சதுரமாகவோ நறுக்கவும்.
2. அதனுடன் அனைத்துப் பொருட்களைம் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.
3. எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளைப் பொரித்தெடுக்கவும். இட்லிகளைப் பொரிக்காமல் வதக்கியும் செய்யலாம்.
4. கொத்தமல்லி தூவி அலங்கரிக்கச் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.
5.இட்லியா? வேண்டாமென்று அலறும் குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்,

காலையில் மீந்த இட்லிகளை மாலையில் இம்முறையில் சுட சுடச் செய்ய, உனக்கு எனக்கு எனப் போட்டி போட்டுக் காலி செய்வர்.

————————————————————————————————–

 

காஞ்சிபுரம் இட்லி

Image

காஞ்சிபுரம் என்றாலே பழமையான கோவில்களும் பட்டுச்சேலைகளும் தான் நினைவிற்கு வரும், அங்கு அவை மட்டுமல்லாமல் காஞ்சிபுர இட்லியும் பிரபலமான ஒன்றாகும்.மினி இட்லி, சாம்பார் இட்லி, நெய் இட்லி சாம்பார், கொத்தமல்லி இட்லி என்று பலவகையான இட்லிகள் இருந்தாலும் காஞ்சிபுரம் இட்லி, இட்லிகளின் ராணியென்பது உண்டவர்களுக்குத் தெரியும்.செய்வதும் எளிது, சுவையும் இனிது..இனி செய்முறையைக் காண்போம்.

தேவையானவை:

அரைக்க:

புழுங்கலரிசி- 1 டம்ளர்
பச்சரிசி- 1 டம்ளர்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டம்ளர்
வெந்தயம்- சிறிதளவு
அவல்- ஒரு கைப்பிடி

தாளிக்க:

நெய் – 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி.
கடுகு- 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி,
முந்திரி – 2 தேக்கரண்டி,
இஞ்சி- 2 துண்டு(துருவியது)
சுக்குத்தூள்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 தேக்கரண்டி(நறுக்கியது),
மிளகு – 1 தேக்கரண்டி (உடைத்தது),

செய்முறை:

kanjiIdle

1. அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஊறவிடவும்.

2. மூன்று மணி நேரம் ஊறியதும் மின் அரைப்பானில் நற நற பத்ததில் அரைத்து எடுக்கவும்.

3. மாவை மூன்று மணி நேரம் புளிக்க விடவும்.

4. எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பைத் தாளிசம் செய்யவும்.

5. நெய், உடைத்த மிளகு, சுக்குத்தூள்,துருவின இஞ்சி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலையை மாவுடன் சேர்க்கவும்.

6. இட்லி குக்கரில் தண்ணீர் விட்டு பெரிய குவளை அல்லது இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி பிடித்த வடிவங்களில் இட்லிகளாக வார்த்து எடுக்கவும்.

7. காபி டம்ளர், டவராக்களில் எண்ணெய் தடவி வைக்கும் போது இட்லி வெந்ததா என்பதை அறிய ஒரு கத்தியால் இட்லியைக் குத்தி, ஒட்டாமல் வருகிறதா என்று பார்க்க வேண்டும். ஒட்டாமல் வந்தவுடன் தலைகீழாக டவராவைக் கவிழ்க்க அதே வடிவத்தில் இட்லி தயாராகியிருக்கும்.

8. பொதுவாக இவ்வகை இட்லிகள் 15 நிமிடங்களில் வெந்து விடும். புதினா சட்னி, காரச் சட்னி, வெங்காயச்சட்னி போன்ற சட்னி வகையறாக்களும் சாம்பார், தீயல், புளிக்குழம்பு போன்ற குழம்பு வகையறாக்களும் அசத்தல் இணைகளாகும்.

கூடுதல் தகவல்கள்:

1. இவ்வகை இட்லிகளை உடனடியாகச் செய்ய முடியும்.
2. அதிகம் புளிப்பில்லாமல் ருசியாகவும் இருக்கும்.
3. மிளகு, இஞ்சி சேர்வதால் உடல் நிலை சரியில்லாதவர்களுக்கும் பயணிப்பவர்களுக்கும் அருமையான உணவு.
—————————————————————————————–