அவரைக்காய் பொரியல்

தேவையானவை:

Image

அவரைக்காய்- 2 கப்
தேங்காய்த்துருவல்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. அவரைக்காயை நன்றாக அலம்பிக்கொண்டு நுனியைப் பிரித்து நாரைப் பிரிக்கவும். ஒவ்வொரு அவரைக்காயையும் இவ்விதம் செய்து கூறு பிரித்துப் பொடியாக நறுக்கவும்.

2. அடுப்பில் தீயேற்றி வாணலியில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும்.

3. பொடியாக நறுக்கின அவரைக்காயைத் தாளிசப்பொருட்களுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.

4. அடிக்கடி கிளறி விடவும்.

5. அவரைக்காய் வெந்த பிறகு துருவிய தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் குழம்பு, ரசத்துடன் பரிமாறவும்.

6. தேங்காய்த்துருவல், மிளகாய்வற்றல் சேர்ப்பதற்குப் பதில் 1 தேக்கரண்டி சாம்பார் தூள்(காய் வெந்தவுடன்) சேர்த்து வதக்கிப் பொரியல் செய்யவும் ருசிக்கும்.

கூடுதல் குறிப்புகள்:

Image

1. அவரைக்காயில் உயர் நிலைப்புரதம், இரும்பு, சுண்ணாம்புச்சத்து போன்ற அதிக சத்துக்கள் நிரம்பியுள்ளன.

2. நீரிழிவு உள்ளவர்களுக்கும் செரிமானப்பிரச்சினை, மலச்சிக்கல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்றது.

3. நார்ச்சத்து அதிகம் என்பதாலும் ஜீரணம் ஆவது கடினம் என்பதாலும் இரவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், கூட்டு வகைகளிலும் செய்து பலன் பெறலாம்.

இணையத்தில் தொகுத்தத் தகவல்கள்:

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

ரத்தத்தைச் சுத்தமாக்கும்

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

நீரிழிவைக் குணமாக்கும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்

சரும நோய்களை குணமாக்கும்

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

http://nerudal.com/nerudal.31431.html தகவல்களுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s