தேவையானவை:
சுண்டைக்காய் வற்றல்- 4 தேக்கரண்டி
புளி- இரண்டு எலுமிச்சை அளவு
வறுத்து அரைக்க:
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
தனியா- 1 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5
பெருங்காயம்- சிறிதளவு
பூண்டு- 3 பல்லு
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1
தாளிக்க:
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை:
1. புளியைக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். பத்து நிமிடங்கள் ஊறட்டும்.
2. ஒரு வாணலியில் மிதமான சூட்டில் சுண்டக்காய் வத்தலை வறுக்கவும்
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வத்தலையும் அதில் போடவும். தீயை மிதமாக்கவும்.
4. இதனுடன் சிறிதளவு உப்பு(ஏற்கனவே சுண்டைக்காய் வத்தலிலும் உப்பு உள்ளதால்) சேர்த்துப் புளித்தண்ணீரைச் சேர்க்கவும்.
5. வறுக்கக் கொடுத்த பொருட்களைச் சிவக்க வறுத்து ஆற விடவும்.பெரிய வெங்காயத்தையும் பூண்டையும் சிவக்க வறுத்து விட்டு, தக்காளியையும் வதக்கவும். ஆறிய பின் அனைத்தையும் ஒன்றாக மின்னரைப்பானில் அரைத்துக் கொள்ளவும்.
6. அரைத்ததைக் கொதிக்கும் குழம்பில் கொட்டவும்.
7. சிறிது நேரத்தில் கெட்டியாகும், ஆனவுடன் நல்லெண்ணெயைச் சூடாக்கிக் குழம்பில் கொட்டவும்.
8. கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்:
1. சுண்டைக்காயில் வைட்டமின் சி , புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
2. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், பெண்களின் கர்ப்பகாலத்தில் தோன்றும் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
3.சுண்டைக்காய்க்குப் பதிலாக மணத்தக்காளி வற்றலை வதக்கிச் சேர்த்தும் மேற்கூறிய முறையில் குழம்பு செய்யலாம்(சுண்டைக்காயை விட மணத்தக்காளி வதங்கும் நேரமும் குறைவு)
4. விரும்புவர்கள் மேற்கூறிய முறையில் குழம்பு செய்யும் போது வெல்லமும் சிறிது சேர்க்கலாம்.
5. தயிர்சாதம், பொங்கல், சாதம், இட்லி, தோசைக்கு இணையாகும் இந்தச் சுண்டைக்காய் வற்றல் குழம்பு.
6. சாதத்துடன் உண்ணும் போது அப்பளம், வடகம், பருப்புசிலி போன்றவை அருமையான இணை உணவுகள்.
7. இவ்வகை வத்தக்குழம்பைச் செய்த மறு நாள் சாப்பிட புளிப்புச் சுவையுடன் இன்னும் ருசி அதிகமாக இருக்கும்.
8. புளிப்புடன் உள்ள குழம்பு என்பதால் கண்டிப்பாக தயிர்சாதமோ ஒரு குவளை நீர்மோரோ அருந்த வேண்டும்.