தேவையானவை:
புடலங்காய்- 4
தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 11/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 2
செய்முறை:
1. புடலங்காயை நன்றாக அலம்பிக்க் கொண்டு நடுவே இரண்டாகக் கீறி விதைகளை நீக்கவும்.
2. வட்டமாக(அரை வட்டமாக வரும்) நறுக்கிக் கொள்ளவும்.
3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து தண்ணீர் சிறிதளவு விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
4. மூடியைத் திறந்து அவ்வப்போது கிளறி விடவும்.
5. காய் வெந்தவுடன் தேஙாய்த்துருவலைப் போட்டுப் பரிமாறவும்.
இன்னொரு முறை:
தேங்காய்த் துருவலிற்குப் பதில் 1 தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்தும் காரசாரமாகப் புடலங்காய் பொரியலைச் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மிளகாய்வற்றல் தேவையில்லை.
கூடுதல் செய்திகள்:
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.
புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
எளிதில் செய்து விடக் கூடிய இந்தப் பொரியல் வத்தக்குழம்பு, சாம்பார், மோர்க்குழம்பு, பொரிச்சகரை போன்ற எதனுடனும் உண்ண நன்றாக இருக்கும்.
புடலங்காயின் பயன்கள்:
* புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ம்ற்றும் நிறைய புரதம் உள்ளது
* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
* வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.
* மூலநோய்க்காரர்களுக்குப் புடலங்காய் சிறந்த மருந்தாகும்.
* நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுக்கும்.
* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.
* கண் பார்வையைத் தூண்டும்.
* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..
* குடல் புண்ணை ஆற்றும்.
* வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்புகள் குறையும்.
* புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர் புடலங்காயைத் தவிர்ப்பது நல்லது.
* புடலங்காய் எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
அதிகம் பயனளிக்கவல்ல, சிறப்புத்தன்மைகள் கொண்ட புடலங்காயை அடிக்கடிப் பயன்படுத்தி குடும்ப ஆரோக்கியத்தைப் பேணலாம்.