தேவையானவை:
துவரம்பருப்பு- 1 டம்ளர்
தேங்காய்- அரை மூடி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 5
உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
கேரட்- 1
முருங்கைக்காய்- 1
செள செள- 1
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
செய்முறை:
1. துவரம்பருப்பைக் குழைய வேக வைக்கவும்.
2. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்(பெரிதாக நறுக்கினால் பொரித்தக் குழம்பு, பொடிதாக நறுக்கினால் பொரிச்சக்கரை)
3. அடுப்பில் 2 டம்ளர் தண்ணீரில் வாழைக்காய்(முதலிலே வேக வைக்கவும்), உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், செளசெள, கேரட் போன்றவற்றை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
4. வேறொரு வாணலியில் மிதமான சூட்டில் மிளகு, மிளகாய்வற்றலை வறுத்துப் பொடியாகத் திரிக்கவும்.
5. காய்கள் வேகும் தண்ணீரில் வறுத்துத் திரித்தப் பொடியைச் சேர்க்கவும்.
6. காய்கள் வெந்தவுடன் வேக வைத்தத் துவரம்பருப்பைச் சேர்க்கவும்.
7. மின் அரைப்பானில் தேங்காய், சீரகத்தைச் சேர்த்து அரைத்து குழம்புடன் சேர்க்கவும்.
8. குழம்பை இறக்கும் போது தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளிசம் செய்யவும்.
9. சிறிதளவு தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்து தாளித்ததைச் சேர்க்கும் போது சேர்க்க கமகம பொரிச்சகரை தயார்.
கூடுதல் குறிப்புகள்:
1. துவரம்பருப்பிற்குப் பதில் பாசிப்பருப்பை வேக வைத்தும் இதைச் செய்யலாம், அல்லது துவரம்பருப்பும் பாசிப்பருப்பும் சம அளவில் வேக வைத்தும் செய்யலாம்.
2. மிளகு, மிளகாய்வற்றலை வறுத்துத் திரித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் நினைத்த மாத்திரத்தில் இருக்கும் காய்களைப் போட்டுச் செய்து விடலாம்.
3. தண்ணீரின் அளவைக் குறைத்து இதே முறையில் கூட்டாகவும் செய்யலாம்.
4. பீன்ஸ், புடலங்காய் போன்ற காய்களும் சேர்க்கலாம்.
5. புளி இல்லாமல் செய்யப்படும் இக்குழம்பை ரசத்திற்குத் தொட்டுக் கொள்ள அமிழ்தமாக இருக்கும்.
6. உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு மிளகு தூக்கலாகப் போட்டுக் குழம்பு செய்யலாம்.
7. மிளகு தூக்கலாகவும் மிளகாய்வற்றல் குறைவாகவும் இருப்பது மிளகு பொரிச்சகரை என்றழைக்கப்படும். மிளகைக் குறைத்து மிளகாய்வற்றலைக் கூட்ட அதுவும் ஒரு சுவையாக இருக்கும்.
8. முட்டைக்கோஸ், பீன்ஸ், புடலங்காய், அவரைக்காய் பொரியல்கள் தகுந்த இணை உணவுகள்.