தேவையானவை:
கோதுமை மாவு- 2 கிண்ணம்
பச்சைப்பட்டாணி- 1 கிண்ணம்
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
பூரணத்திற்கு:
வெங்காயம்- 1
பச்சைமிளகாய்- 2
சீரகப்பொடி- 1 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி- 1/2 தேக்கரண்டி
பூண்டு- 2 பல்லு
எண்ணெய்(பூரணத்திற்கு)- 3 தேக்கரண்டி
பரோட்டா செய்ய வேண்டிய அளவு- நெய் அல்லது எண்ணெய்
செய்முறை:
1.கோதுமை மாவைச் சப்பாத்தி செய்யும் பதத்திற்கேற்பப் பிசைந்து கொள்ளவும்.
2. ஊற வைத்த பச்சைப்பட்டாணியை(ஃபீரீஸரில் உள்ளதையும் பயன்படுத்தலாம்) வெங்காயம், பூண்டு,பச்சைமிளாய், சீரகத்துடன் சேர்த்துத் தண்ணீர் விடாமல் மையாக மின்னரைப்பானில் அரைத்து எடுக்கவும்.
3. அடிகனமான வாணலியில் நெய்யை விட்டு மிதமான தீயில் அரைத்தக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
4. சிறிதளவு உப்பு, காரப்பொடி, கரம் மசாலாப் பொடியைச் சேர்க்கவும்.
5. கெட்டியாக வரும் பதத்தில் பூரணத்தை இறக்கவும். ஆற விடவும்.
6. மாவைச் சிறு வட்டமாக குழவியினால் இட்டு ,சிறிது எண்ணெயைத் தடவி, அதன் மேல் பூரணத்தைச் சிறியவில்லையாகத் தட்டி வைத்து வட்டத்தின் விளிம்பினால் பூரணத்தை மூடவும்.
7.சப்பாத்தி மாவை உருண்டைகளாக உருட்டிச் சமனாக உருட்டிய பூரணத்தை உள்ளே வைத்துப் பரோத்தாக்கள் தயாரிக்கவும்.ஆலுபரோட்டா, போளி செய்வது போல இதுவும் அதே முறைதான்,மேல் மாவில் உருண்டைகளைப் பிரட்டி, குழவியின் உதவியால் பரோட்டாக்களாகச் செய்யவும்.
8.காயும், கல்லில் பரோட்டாவைப் போட்டு ,மேலே ஈரப்பதம் குறையும் போதே திருப்பிப் போடவும். விளிம்பில் சற்று அழுத்தம் கொடுத்து,நெய்யோ, எண்ணெயோ மேலே தடவித் திருப்பவும்..நன்றாக உப்பிக் கொண்டு மேலெழும்பும்.இப்பாகத்திலும் நெய் தடவி, திருப்பியினால் சற்று அழுத்தம் கொடுத்து சிவக்கப் பரோட்டாக்களைச் செய்து எடுக்கவும்.
கூடுதல் குறிப்புகள்:
1. ஃபிரீஸரில் உள்ள பச்சைப்பட்டாணியைப் பயன்படுத்த விரும்புவோர் அதனைச் சுடு நீரில் இட்டுக் குளிர்ந்த தன்மை போன பிறகே அரைக்க வேண்டும். பட்டாணியை மசித்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம். மசித்துச் செய்யும் புகைப்படம் மேலுள்ளது, அரைத்துச் செய்யும் படமிது.
2. இவ்வகை பூரணங்களையும் சப்பாத்தி மாவையும் முந்தின நாள் தாயரித்துக் கொண்டால் காலை வேளை பரபரப்புகளுக்கு உதவியாக இருக்கும், அவ்வாறு செய்யும் போது பூரணத்தில் காற்று புகாமல் நீர் விடாமல் மூடி வைக்க வேண்டும்.
3. அரைத்து சப்பாத்தி மாவு பிசையும் போதே பீஸ் சப்பாத்திகளாகவும் செய்யலாம்.இதற்குத் தால், கூட்டு, குருமா அசத்தல் இணைகள்.
4. என்னம்மா எப்பவுமே சப்பாத்தியா, இட்லியா என்று அலுப்பவர்களுக்கும் வித்தியாச விரும்பிகளுக்கும் ஏற்ற சிற்றுண்டியிது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மாதிரி வித்தியாசமான செய்முறைகளை விரும்பி உண்ணுவார்கள். இதனுடன் பனீர் சேர்த்தும் செய்யலாம், அதைப் பனீர் பீஸ் பரோத்தா என்பர்.