தேவையான பொருட்கள்:
பச்சரிசி-1 டம்ளர்
தேங்காய்-கால் மூடி
கடுகு-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
மிளகாய்வற்றல்-2
கறிவேப்பிலை-1 இணுக்கு
காயம்-சிறிதளவு
எண்ணெய்-1 டீஸ்பூன்
செய்முறை:
1.பச்சரிசியைச் சுடுதண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.தனியே ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் நீரைக் கொதிக்க வைக்க வேண்டும்.
2.அரிசியைக் களைந்து அதனுடன் துருவிய தேங்காயில் பாதியையும் உப்பையும் சேர்த்து அரைக்கவும்.(தண்ணீர் அதிகம் சேர்க்கவோ மையாக அரைக்கவோ வேண்டாம், நறநற பதம் போதும்.)
3.வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளைஉளுத்தம்பருப்பு,கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து விட்டு அரைத்த அரிசியைச் சேர்க்கவும்.
4.அதனுடன் பாதி தேங்காய்த்துருவலையும் சேர்க்க வேண்டும்.
5.கொதிக்கும் நீரில் வதக்கிய அரிசிக்கலவையைச் சேர்க்க வேண்டும்.
6.உப்புமாவிற்குக் கிளறுவது போல் கிளற வேண்டும்.
7.உப்பு,காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு உருண்டைகள் உருட்டவும்.
8.இட்லிக்குக்கரில் தண்ணீர் விட்டு இட்லித்தட்டுகளில் உருட்டிய உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
9.கொழுக்கட்டை வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.
கூடுதல் குறிப்புகள்:
1.திடீர் விருந்தினர்களைச் சமாளிக்கவும் பள்ளி,கல்லூரி சென்று சோர்வாக வரும் பிள்ளைகளையும் அசத்த அருமையான சிற்றுண்டி இது.
2.ஆரோக்கியமான அசத்தலான சத்துள்ள அரிசிக்கொழுக்கட்டையை அரை மணி நேரத்திற்குள் செய்து விடலாம்.
3.முதலில் செய்து பார்ப்பவர்கள் சிறிய அளவுகளை எடுத்துக் கொண்டு செய்து பார்க்கவும். அனுபவம் கிடைத்தவுடன் அதிகம் செய்து கொள்ளலாம்.
4.உப்புமா பதத்திற்குக் கொழுக்கட்டை மாவு வந்திருக்க வேண்டும்.அப்போதே உப்பு போதவில்லையென்றால் சேர்த்துக் கொள்ளலாம். அதே போல் அரைத்து வதக்கிய அரிசிக் கலவையைக் கொதிக்கும் நீரில் போடும் போது சிறிது சுடு நீரைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். தண்ணீர் அதிகமானால் வதங்க ரொம்ப நேரமாகும். உருண்டை பிடிக்கவும் வராது.
5.புழுங்கலரிசியை ஊற வைத்தும் செய்யலாம்(3 மணி நேரம் ஊற வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டு செய்யத் தேவையில்லை, மேற்கூறியது எளிய முறையானாலும் அபார சுவை).